தமிழ் நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்தவர் எம்.கே.சரவணன். நெசவாளரான இவர், கைத்தறி நூல் சேலையில் ராமாயணப் போர்க்களக் காட்சியை தத்ரூபமாக வடிவமைத்து ரூ.5 லட்சம் காசோலையை முதல் பரிசாக வென்றுள்ளார்.
பரமக்குடி, எமனேஸ்வரம் பகுதிகளில் 5,000க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் தங்களது வீடுகளில் தறி மேடை அமைத்து நெசவுத் தொழில் செய்து வருகின்றனர்.
இங்கு நெய்யப்படும் கைத்தறி நூல் சேலைகள், பம்பர் சேலைகள், பட்டுச் சேலைகள் போன்றவை வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அவ்வாறு நெய்யப்படும் சேலைகளில் ஒவ்வோர் ஆண்டும் புதுப்புது வடிவமைப்புகளைப் புகுத்தி பரமக்குடி கைத்தறி நெச வாளர்கள் அசத்தி வருகின்றனர்.
இவர்களில் சரவணன் என்ற நெசவாளர், கைத்தறி நூல் சேலையில் ராமாயணக் காவியத்தில் இடம்பெறும் கதை மாந்தர்களை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.
பத்து தலைகளுடனான ராவணனை ராமன் வதம் செய்யும் காட்சி, போர்க்களக் காட்சிகளை ஒன்பது வண்ணங்களில் அவர் காட்சிப்படுத்தி உள்ளார்.
சேலையின் பின்னணியில் 3 'டி' வடிவமாக லட்சுமணன், அனுமன், சுக்ரீவன் மற்றும் அரக்கர்கள் போர் செய்யும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. அத்துடன், ஆங்காங்கே கொய்த உடல் உறுப்புகள் வீழ்ந்து கிடக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்தச் சேலை தமிழகத்தில் நடந்த சிறந்த நெசவாளர்களுக்கான போட்டிக்கு அனுப்பப்பட்டு, சரவணனுக்கு முதல் பரிசு கிடைத்தது. ரூ.5 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
"இச்சேலையை 45 நாள்களாக வடிவமைத்து, 9 நாள்களில் நெய்து முடித்தேன். ராமனின் அமைதியும் ராவணனின் பத்து முகங்களில் வெளிப்படும் மூர்க்கத்தனமும் தெளிவாக ஓவியங்களில் பிரதிபலிக்கும் வகையில், ராமன் ராவணனை வதம் செய்யும் காட்சியை தத்ரூபமாக வடிவமைத்துள்ளேன்.
"உண்மையில், ராமாயணத்தின் முழுப் போர்க் காட்சியும் சேலையில் இடம்பெற்றிருக்கும். ராவணனின் கொல்லப்பட்ட படை வீரர்களின் முகத்தில் உள்ள வெளிப்பாடுகளைக்கூட ெதள்ளத் தெளிவாக நெய்துள்ளேன்.
"எங்கள் ஊரான ராமநாதபுரத்துடன் நெருங்கிய தொடர்புடைய ராமாயணத்தில் இருந்து இறுதிப் போர்க் காட்சியைத் தேர்ந்தெடுத்தோம். புடவையின் 'பார்டர்' பகுதி மானையும் அசோக வனத்தில் சீதை அமர்ந்திருக்கும் காட்சியையும் கொண்டி ருக்கும். இந்தப் பருத்திப் புடவையின் விலை ரூ.70,000," என்கிறார் சரவணன்.

