படுக்கை அறை, கழிவறை என பல இடங்களுக்கும் நமது கைப்பேசியை எடுத்துச் செல்கிறோம். உலகில் உள்ளவர்களில் 90 விழுக்காட்டுக்கும் மேலானோரிடம் கைப்பேசி பயன்பாடு உள்ளது. பலருக்கு அது இல்லாமல் காலம் தள்ளுவது முடியாத ஒன்று.
ஆனால், கைப்பேசி பற்றிப் பேசும் பலரும் கார் ஓட்டும்போது அது எவ்வாறு நமது கவனத்தை திசை திருப்புகிறது என்றும் அதிலிருந்து வெளிவரும் கதிரலைகள் நம்மீது ஏற்படுத்தும் தாக்கம் பற்றியும் இல்லையேல் கைப்பேசி பழக்கம் நம்மை எந்த அளவுக்கு தொற்றிக்கொள்கிறது என்பது பற்றியுமே பேசுகின்றனர். கைப்பேசியினால் ஏற்படக்கூடிய நுண்ணுயிர் கிருமித்தொற்று குறித்து பலருக்குத் தெரிவதில்லை. ஆனால், நுண்ணுயிர் கிருமித்தொற்று அபாயம் உண்மையான ஒன்று.
கடந்த 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் பிரிட்டனில் பெரும்பாலோர் தங்கள் கைப்பேசியைக் கழிவறைக்குள் எடுத்துச்செல்வது தெரியவந்துள்ளது.
எனவே கழிவறை இருக் கையைவிட கைப்பேசிகள் சுத்தமின்றிக் காணப்படுகிறது என்ற கண்டுபிடிப்பில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
நமது கைப்பேசிகளை நம் பிள்ளைகளிடம் கொடுக்கிறோம். அவர்களில் பலருக்குச் சுத்தம் என்றால் என்னவென்று தெரியாமல் போகலாம். அத்துடன் கைப்பேசியைப் பயன்படுத்திக் கொண்டே நம்மில் பலர் சாப்பிடு வதும் உண்டு. அப்பொழுது அதை அழுக்குப் படிந்த பல இடங்களில் வைப்பதும் உண்டு. இவை எல்லாம் உங்கள் கைப் பேசியில் கிருமிகள் தொற்றிக் கொள்ள இடம்கொடுக்கிறது. அத்துடன் நாம் உண்ணும் உணவின் சிறு சிறு பகுதிகளும் அத்துடன் ஒட்டிக்கொண்டு கைப்பேசிகளில் இருக்கும் நுண்ணுயிர் கிருமிகளுக்குத் தீனியாக விளங்குகிறது.
உலகில் பலர் தங்கள் கைப்பேசிகளை நாள் ஒன்றுக்கு பல நூறு முறை தொடுகிறோம் என்று கணிக்கப்படுகிறது. ஆனாலும், நம்மில் பலர் சமையலுக்குப் பின், வீட்டைச் சுத்தம் செய்த பின், தோட்ட வேலை செய்த பின் கை கழுவுகிறோமே தவிர கைப்பேசியைத் தொட்டபின் நம் கைகளைக் கழுவுவதில்லை.
நமது கைகளில் அடிக்கடி கிருமிகள் வந்து சேர்கின்றன. அதுவே நமக்கு கிருமித்தொற்று ஏற்பட வழிவகுக்கிறது. அது போலவே நமது கைப்பேசிகளும் கிருமித்தொற்று ஏற்பட வழி வகுக்கிறது.
நமது கைப்பேசிகளில் பல வகையான நோய்களை ஏற்படுத்தும் கிருமிகள் குடிகொண்டிருக்கும் வாய்ப்பு உள்ளது என பல ஆய்வுகள் காட்டுகின்றன. அவற்றில் வயிற்றுப்போக்கு, காசநோய், மூளைக் காய்ச்சல் போன்ற மனிதர்களுக்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நோய்களும் அடங்கும்.
அத்துடன், இந்தக் கிருமிகள் வழக்கமான பல நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு அடங்கா என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இது மிகவும் கவலை அளிக்கும் ஒரு நிலை.

