சபிதா ஜெயகுமார்
இன்று (ஏப்ரல் 28) உலக வேலையிடப் பாதுகாப்பு, ஆரோக்கிய தினம். உலக அளவில் வேலை இடங்களில் ஏற்படும் விபத்துகள், நோய்கள் ஆகியவற்றைத் தடுப்பதை இது ஊக்குவிக்கிறது. 2003ஆம் ஆண்டில் அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பு இத் தினத்தைத் தொடங்கியது.
மனிதனின் வாழ்வில் பெரும் பங்கு வகிக்கிறது வேலை. ஒரு மனிதன் தன் வாழ்வில் ஏறத்தாழ 90,000 மணி நேரத்தை வேலையில் செலவிடுவதுண்டு.
ஆனால், சிலருக்கு இந்த முழு 90,000 மணி நேரத்தை நிறைவாக அனுபவிக்க முடிவதில்லை. வேலையிடங்களில் ஏற்படும் விபத்துகளால் கண்மூடித்தனத்தால் பலர் காயமுற்றுள்ளனர், வாழ்வையும் இழந்துள்ளனர்.
இறந்த அல்லது காயமடைந்த தொழிலாளர்களுக்கான அனைத்துலக நினைவு தினமும் இன்று அனுசரிக்கப்படுகிறது.
தினமும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல ஒவ்வோர் ஊழியருக்கும் உரிமை உண்டு. அதேபோல் பாதுகாப்பான பணிச் சூழலை உருவாக்கித் தருவதில் ஒவ்வொரு முதலாளிக்கும் பொறுப்பு உள்ளது.
வேலை இடத்தை பாதுகாப்பானதாகப் பார்த்துக்கொள்வதில் அனைத்துப் பிரிவினருக்கும் பங்குள்ளது என்பதை நினைவூட்டி செயல்பாட்டில் இறங்க வலியுறுத்துகிறது இந்த தினம்.
"இன்றைய உலகில் புதிய வேலைகளும் தொழில்களும் அதிவேகத்தில் தோன்றுகின்றன. பலதுறைகளில் ஏற்படும் மாற்றங்களால் புதிய வேலையிட ஆபத்துகளும் தோன்றியுள்ளன," என்று கூறுகிறது ஐக்கிய நாட்டு அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பு.
"சிங்கப்பூரில் 2020ஆம் ஆண்டிற்கான பணியிடக் காயங்களின் மொத்த எண்ணிக்கை 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18 விழுக்காடு குறைந்தது.
"கொவிட்-19 தொற்றுக்காலத்தின்போது கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த பல வேலையிட நடவடிக்கைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தன. அச்சமயத்தில் வேலையிட விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தது. அதன் பின்னர், மக்களும் பணி இடங்களும் வழக்கநிலைக்குத் திரும்ப வேலையிட விபத்துகளின் எண்ணிக்கையும் வழக்கநிலைக்குத் திரும்பியது," என்று சிங்கப்பூர் வேலையிடப் பாதுகாப்பு மன்றம் 2021ல் குறிப்பிட்டது.
இவ்வாண்டு தொடங்கி நான்கு மாதங்களிலேயே ஏழு பேர் வேலையிட விபத்துகள் காரணமாக உயிரிழந்துள்ளனர். உயர்ந்து வரும் வேலையிட மரணங்களைக் கருத்தில்கொண்டு மனிதவள அமைச்சு உயர்த்தப்பட்ட பாதுகாப்பு நிலையை மே மாதம் வரை நீட்டித்துள்ளது.
கட்டுமானப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கும் கடல்துறை ஊழியர்களுக்கும் பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தினார் லைஃப் செண்டர் சமூக சேவைநிலையத்தின் தலைவர் திரு எப்பி பிலிப்.
"பல ஊழியர்களுக்கு வேலையிடப் பாதுகாப்பை ஒட்டி திறன் மேம்பாட்டு வகுப்புகள் தேவைப்பட்டன. நிறுவனங்கள் செயல்திறனையும் நேரத்தையும் கருத்தில் கொண்டு பாதுகாப்பான வேலை முறையை அலட்சியப்படுத்துகின்றன என்று ஊழியர்கள் பலர் பகிர்ந்துகொண்டனர். பாதுகாப்பை நிலைநாட்டுவதில் அனைவருக்கும் பங்குண்டு. ஆபத்தான பணிகளில் ஈடுபடும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.
வேலையிடப் பாதுகாப்பு என்றால் கட்டுமானம் போன்ற கனரக வேலைகள் மட்டும் அல்லாது அனைத்துத் துறைகளிலும் பணிபுரிவோரின் பாதுகாப்பையும் உறுதிசெய்வது முக்கியம்.
முன்னாள் பாதுகாவல் அதிகாரியான திருமதி காமாட்சி கிருஷ்ணசாமி, 68, "பாதுகாவல் அதிகாரி வேலையில் பிறரைப் பாதுகாக்கும் எங்களுக்கும் ஆபத்துகள் உள்ளன. பணியின்போது வன்முறையைக் கையாள்பவர்கள் பாதுகாவல் அதிகாரிகளைக் காயப்படுத்தி உள்ளனர்.
"அண்மையில் இதுபோன்ற ஒரு சம்பவம் பொத்தோங் பாசிரில் நிகழ்ந்தது. பள்ளியில் பணிபுரிந்தபோது கடுமையாக நடந்துகொண்ட பெற்றோரைச் சமாளிக்கச் சிரமப்பட்டேன்," என்று பகிர்ந்துகொண்டார்.
"பொதுவாக அலுவலக வேலை பார்ப்பவர்களுக்கு வேலையிட ஆபத்துகள் குறைவு என்ற பார்வை நீடிக்கிறது. இருப்பினும் அவர்களும் வேலையிடப் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது முக்கியம்.
"கை, விரல், மணிக்கட்டு, முட்டி மோன்றவற்றில் ஏற்படும் காயங்கள் இவர்களை அதிகம் பாதிக்கிறது. கண் எரிச்சல், முதுகுவலி போன்றவை மோசமடைந்து காலப்போக்கில் பல உடல்ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. முக்கியமாக மனதளவில் இவர்களுக்கு ஏற்படும் தாக்கங்கள் மனத்தைப் பாதிப்பதுடன் உடலையும் பாதிக்கிறது. இவை இறுதியில் நிறுவனத்தையே பாதிக்கிறது. செயல்திறன் ஊழியர்களிடம் குறையும்போது நிறுவனத்தின் செயல்திறனும் குறைகிறது," என்று குறிப்பிட்டார் ரேவன் ஆலோசனை நிறுவனத்தின் உளவியலாளரும் மூத்த ஆலோசகருமான முனைவர் பிரவீன் நாயர்.