வீட்டின் குடும்பத் தலைவனுக்கு இருக்கும் சிக்கல்கள், பொறுப்புகள் ஆகியவற்றை நகைச்சுவையாக மக்களுக்கு எடுத்துச் சொல்லும் 'ஃபேமிலி மேன் ரிட்டர்ன்ஸ்' என்ற நிகழ்ச்சியை இம்மாதம் 22ஆம் தேதி மேடையேற்றினார் பிரபல நகைச்சுவை கலைஞர் பிரவீண் குமார்.
குடும்பப் பொறுப்புகளை ஏற்றதோடு திருமண வாழ்க்கை, பிள்ளைகள், இவர் குடும்பத்திற்காக செய்த தியாகங்கள் பற்றி நகைச்சுவையாகப் பேசினார்
பிரவீண்.
பாயலேபாரில் உள்ள 'தி சிங்போஸ்ட்' அரங்கத்தில் நடந்த இந்நிகழ்ச்சியைக் காண நூற்றுக்கு மேற்பட்டோர் திரண்டு வந்திருந்தனர். இதில் பல தந்தையர் தங்களின் குடும்பத்தோடு இந்நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தனர்.
"சாதாரண குடும்பத் தலைவனின் பிரச்சினைகள், பொறுப்புகளை நான் என் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் குறிப்பிட்டேன்.
"எல்லா பொறுப்புகளையும் வேடிக்கையான சம்பவங்களையும் ஒரே நிகழ்ச்சியில் திணிக்க முடியாததால் 'ஃபேமிலி மேன் ரிட்டன்ஸ்' என்ற இந்நிகழ்ச்சி
உருவானது.
"ஃபேமிலி மேன் என்பவன் ஒரு சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்திற்குச் சமமானவன். 'ஸ்பைடர் மேன்', 'சூப்பர் மேன்' போல இந்த குடும்பத் தலைவனுக்கும் சிரமங்கள், பொறுப்புகள், உணர்வுகள் இருக்கின்றன," என்றார் அவர்.
குறிப்பாக கொவிட்-19 நோய்ப் பரவல் காலத்தில் பெங்களூரில் இருந்து சென்னைக்கு இடம் மாறிய நகைச்சுவையான அனுபவங்களையும் இந்நிகழ்ச்சியை எழுத அவர் கடந்து வந்த சவால்களையும் பகிர்ந்துகொண்டார்.
இரண்டு மணி நேரம் போனதே தெரியாமல் வயிறு குலுங்க தான் சிரித்ததை பகிர்ந்துகொண்டார் நிகழ்ச்சிக்கு வந்த 25 வயது ம.மைதிலி.
"தந்தையர்படும் பிரச்சினைகளை வேடிக்கையாகக் கூறியதோடு தான் வளர்ந்து வரும் காலகட்டத்துடன் ஒப்பிட்டு இக்காலத்தின் குழந்தைகளின் வினோதமான நடத்தைகளையும் சுட்டிக்காட்டி எங்களை பிரவீண் சிரிக்க வைத்தார்," என்றார் மைதிலி.
மனைவி, இரு குழந்தைகளுடன் வந்த திரு விக்ரம், நிகழ்ச்சியில் பகிரப்பட்ட அனுபவங்கள் தன் வாழ்க்கையிலும் நடந்ததாகக் கூறினார்.
"தலைமுறைகளுக்கு இடையிலான வேறுபாடுகளை ஒரு தந்தையாக என்னால் புரிந்துகொள்ள முடியாத சிரமத்தை பற்றி அவர் எளிமையாகவும் நகைச்சுவையாகவும் கூறியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
"திருமணம் ஆகாதவர்கள் மனைவி, குழந்தைகள் இந்நிகழ்ச்சிக்கு வந்தபின் கண்டிப்பாக எங்களின் சிரமத்தில் பாதியையாவது புரிந்து கொள்வார்கள்," என்று சிரித்துக்கொண்டே கூறினார்
திரு விக்ரம்.
கடந்த பத்து ஆண்டுகளாக சிங்கப்பூர், அமெரிக்கா, துபாய், பஹ்ரேன் போன்ற பல நாடுகளில் 1,500 நகைச்சுவை நிகழ்ச்சிகளை பிரவீண் குமார் மேடை ஏற்றியுள்ளார்.
'மாஸ்க் ஸ்டுடியோஸ்', 'சீதா மீடியா, ஸ்கை ஹை மீடியாவொர்க்ஸ்' ஆகிய
நிறுவனங்கள்
இந்நிகழ்ச்சியை சிங்கப்பூரில்
தயாரித்துள்ளன.

