அனுஷா செல்வமணி
எதேச்சையாக விளையாட்டுத் திறனாளராகிய கோமதி ராமலிங்கம் ஜெயராமன், புதுமையானப் பாணியில் முட்டியை மடக்காமல், ஒரு கால் எப்பொழுதும் தரையில் இருந்தவாறே, பந்தய நடையில் கடந்த 20 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். வேக நடை பற்றிதான் நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கோமதி ஈடுபடும் பந்தய நடை அதிகப் போட்டித்தன்மைமிக்கதாகும்.
சிறு வயதிலிருந்தே விளையாட்டுகளில் அதிக ஈடுபாடு காட்டி வரும் கோமதி, பள்ளிப் பருவத்தில் ஹாக்கி விளையாடுவதில் தொடங்கி, தற்போது உடற்பயிற்சிக்கு அதிகளவில் முக்கியத்துவம் தந்து வருகிறார்.
இவருக்கு 61 வயதாகிவிட்டபோதிலும் உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்ல தயங்காமல், உடல் ஆரோக்கியத்திற்கு அன்றாடம் நேரத்தை ஒதுக்குகிறார்.
40 வயதாக இருந்தபோது விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்கத் தொடங்கினார். 'நியூ பேப்பர் பிக் வாக்' எனும் நடைப்போட்டியில் பங்கெடுத்தார். அதில் பத்து கிலோமீட்டர் நடைப் போட்டியில் பங்கெடுத்த கோமதி, எதிர்பாரா விதமாக சிறப்பாக செய்தார்.
கோமதியின் ஆற்றலைக் கண்ட சிங்கப்பூர் மாஸ்டர் திடல்தடப் போட்டியைச் சேர்ந்த ஒருவர், பந்தய நடையில் அவருக்குப் பயிற்சி அளிக்க முன்வந்தார். பல மாதங்கள் பயிற்சி மேற்கொண்ட பிறகு, பந்தய நடையை தன் வசப்படுத்தி, கோமதி உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் பல போட்டிகளில் களமிறங்கத் தொடங்கினார்.
24 மணி நேரத்தில் 100 கிலோமீட்டர் நடை, 12 மணி நேரத்தில் 79 கிலோமீட்டர் நடை போன்றவை, இவர் பங்கெடுத்த குறிப்பிடத்தக்கப் போட்டிகளில் சில. குறிப்பிட்ட வயதுக்குப் பின் விளையாட்டுகளில் ஈடுபட தொடங்கிய கோமதி, வயது ஒரு தடையல்ல என்கிறார்.
ஆசிரியராகப் பணிபுரியும் இவர், வேலைக்குப் போக தொடங்கியதும் பரபரப்பாக மாறிய வாழ்க்கைச் சூழலிலும் மெதுவோட்டம், நடைப்பயிற்சி போன்றவற்றை செய்து வந்தார்.
இருபதுகளிலும் முப்பதுகளிலும் இருக்கும் தமது மூன்று மகன்களும் உடல் நலத்தில் அதீத கவனம் செலுத்துபவர்கள் என்று பகிர்ந்த கோமதி, பந்தய நடையின் மீதான நாட்டம் தமது மகன்களிடமிருந்து பெற்றுக்கொண்டதாகக் கூறினார்.
பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் மகன்கள் பங்கெடுத்ததைக் கவனித்து வந்த கோமதி, தானும் அவர்களைப் போல போட்டிகளில் களமிறங்க வேண்டுமென்று விரும்பினார்.
மகன்களின் செயல்பாடுகள் கோமதிக்கு ஊக்குவிப்பாக அமைந்தன. அவை அவருக்கு உத்வேகத்தை ஏற்படுத்தின.
உடற்பயிற்சியில் அதிக நாட்டம் கொண்டுள்ள குடும்பத்திலிருந்து வருவது தமக்கு மகிழ்ச்சியைத் தருவதாக கோமதி பெருமிதத்துடன் கூறினார்.
பந்தய நடை மூலம் பல
நட்புறவுகளை வளர்த்துக்கொண்டதோடு, இவரைப் போன்ற பிற பந்தய நடை வீரர்களுடன் ஒவ்வொரு வாரமும் சிங்கப்பூரில் இருக்கும் பல இடங்களில் அதிகாலையிலேயே நடக்கச் சென்றும் விடுகிறார்.
பந்தய நடை நட்புறவுகளை வளர்த்துக்கொண்டதுடன் தமது உடலையும் மனதையும் சீராக வைத்திருக்க உதவுவதாக கோமதி கூறுகிறார். 60 வயதுக்கு மேலாகியும் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வதை அவர் சுட்டினார். வாரத்திற்கு நான்கிலிருந்து, ஐந்து முறை பந்தய நடைப் பயிற்சிகளை மேற்கொள்ளும் கோமதி, இதைத் தவிர்த்து யோகாசனம் செய்வதிலும் தசைகளை வலுப்படுத்துவதற்காக குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சிக்கூடத்திலும் நேரத்தைச் செலவிடுகிறார்.
1960களிலும் 1980களிலும் சிங்கப்பூரில் பந்தய நடை மிகப் பிரபலமாக இருந்தது என்ற கோமதி, நாள்போக்கில் மெதுவோட்டம் இளையர்கள் மத்தியில் பிரபலமாகியது எனக் கூறினார்.
பந்தய நடையின்போது ஒருவர் இடுப்பை ஆட்டிக்கொண்டு நடப்பதால், சில சமயங்களில் பார்ப்பதற்குக் வேடிக்கையாக இருக்கும் என்றாலும், இதைத் தவிர்த்து வேறு எந்த விளையாட்டிலும் தனக்கு ஆர்வமில்லை என்று கோமதி தெரிவித்தார்.
பந்தய நடையில் ஈடுபடுவதைத் தொடங்கியப்போது இருந்த சகிப்புத்தன்மை இப்போது குறைந்திருந்தாலும் அதை ஒரு முட்டுக்கட்டையாக எடுத்துக்கொள்ளாமல், தன்னால் முடிந்த வரை வாழ்க்கை முழுவதும் அதில் தொடர்ந்து ஈடுபடத் திட்டமிட்டுள்ளார் கோமதி.
தன்னுடைய 80 வயது தாயாரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடைப் பயிற்சியில் ஈடுபடுவதாக கோமதி கூறினார்.
உடற்பயிற்சிக்குப் பிறகு உடலில் வலி ஏற்பட்டால், சோர்ந்துவிடாமல், நன்கு ஓய்வு எடுத்த பிறகு மீண்டும் அதில் ஈடுபட வேண்டும் என்றார் கோமதி.
பந்தய நடையினால் தமக்குப் பல காயங்கள் ஏற்பட்டிருந்தாலும் துவண்டுபோகாமல், தக்க மருத்துவ உதவியை நாடி மீண்டும் அதில் தொடர்ந்து ஈடுபடுகிறார்.
டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தபோதும் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட அனுபவத்தைப் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்ட கோமதி, உடற்பயிற்சி செய்வது தன் ரத்தத்தில் ஊறிவிட்டதாகக் கூறினார்.
"என்னுடைய உடற்பயிற்சிப் பயணம் எனக்குப் பல பலன்களை அளித்துள்ளது. வயதானாலும் முடங்கிவிடாமல், நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் கட்டாயம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்." என்று கோமதி முனைப்புடன் கூறினார்.

