இன்று உழைக்கும் கரங்களைப் போற்றும் தினம். வானுயர கட்டடங்கள், வழவழப்பான சாலைகளைப் பார்க்கும்போது நாடு விட்டு நாடு வந்து இரவு பகல் பாராமல் உழைத்துக்கொண்டு இருப்பவர்களின் உழைப்பு தெரிகிறது. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கொடுக்கும் சிங்கப்பூர் நாட்டிற்கும் தங்களை நம்பி காத்திருக்கும் தங்களின் குடும்பத்திற்காகவும் உண்மையாக உழைக்கிறார்கள். அவர்களுள் கடினமாக உழைத்து உச்சத்தை எட்டியவரையும் தன்னைப் போன்ற ஊழியர்களுக்கு அன்னமிட்டு வாழும் ஒரு தாயுள்ளத்தையும் அறிந்து வந்தது தமிழ் முரசு.
மூன்று சகோதரிகளுக்கு அண்ணனான சின்னத்தம்பி ராஜேஷ் ஆதரவற்ற குடும்ப சூழல் காரணமாக பிழைப்புத் தேடி 1996ல் சிங்கப்பூருக்கு வந்தார்.
மின்னணுவியலில் பட்டயக் கல்வி படித்திருக்கும் ராஜேஷ் அதிகளவில் பணம் செலவழித்து சிங்கப்பூருக்கு வர வேண்டியிருந்தது. இருப்பினும் ஈராண்டுகளில் அவருடைய வேலை கைநழுவிப்போனது.
அதனால் இந்தியா சென்ற அவர் ஒரு நாளைக்கு 18 வெள்ளி மட்டுமே சம்பளம் என்றாலும் அது அவருடைய குடும்ப சூழ்நிலைக்கு வேண்டி இருந்ததால் மீண்டும் சிங்கப்பூரில் வேலை செய்யத் தொடங்கினார்.
வேலை கிடைத்துவிட்டது என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள் வேலையிட விபத்து காரணமாக அவருடைய முழங்காலில் முறிவு ஏற்பட்டது.
ஓராண்டு மருத்துவ விடுப்பில் இருந்ததால் மற்றவர்களிடம் கடன் வாங்கி வழக்கம்போல வீட்டிற்கு அனுப்பி வந்தார். மருத்துவ விடுப்பு முடியும் நேரத்தில் வேறு ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார் ராஜேஷ்.
சொந்தத் தொழில் செய்யவேண்டும் என்பது அவருடைய குறிக்கோளாக இருந்தது. வெறும் 500 வெள்ளி செலுத்தி ஏக உரிமையாளராக 2008ல் மின்சாரப் பணிகளும் குளிரூட்டி குத்தகையாளராகவும் 'எஃபிஷென்ட் எலக்ட்ரிகல் அண்ட் ஏர்கோன் காண்ட்ராக்டர்' எனும் நிறுவனத்தைத் தொடங்கினார்.
இரண்டு ஊழியர்களுடன் தொடங்கிய அவருடைய தொழில் தற்பொழுது 22 ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது. தன்னுடைய நிறுவனத்தை தனியார் நிறுவனமாக்கி 'எஃபிஷென்ட் எலக்ட்ரிகல் பிரைவெட் லிமிடட்' என்று மாற்றினார்.
இதற்கிடையில் அவர் தன்னுடைய மூன்று தங்கைகளுக்கு, தமிழகத்தில் தான் இல்லாத குறை தெரியாமல் திருமணத்தை நடத்தி வைத்தார்.
வேலையிடத்தில் ஏற்பட்ட விபத்தை மனதில்கொண்டு தன்னுடைய ஊழியர்களுக்கு பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை பாதுகாப்பு பற்றிய அமர்வு
களுக்கு ஏற்பாடு செய்து வேலை செய்பவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
வருங்காலத்தில் நிறுவனத்தைப் பெரிய அளவிற்கு கொண்டுபோக வேண்டும் என்ற இலக்கை வைத்திருக்கும் ராஜேஷ், "நாம் வாழ்க்கையில் வைத்துள்ள குறிக்கோளை நோக்கி பயணித்தால்தான் நம்மால் முன்னேற முடியும். குறிக்கோள் வைத்துக்கொண்டு அதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் இருந்தால் எந்தப் பயனும் கிடைக்காது. முயற்சி செய்யாமல் இருந்தால் நான் என்றோ ஒரு மூலையில் முடங்கியிருப்பேன்," என்று தன்னுடைய குறிக்கோளையும் தன் விடாமுயற்சியையும் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார் தற்பொழுது 45 வயதாகும் திரு சின்னத்தம்பி ராஜேஷ்.
தாயுள்ளம் நிறைந்த கமலா
இல்லப் பணிப்பெண்ணாக வேலை செய்து வருகிறார் கமலா ராஜேந்திரன், 45. இவர் கடந்த பத்து மாதங்களாக மாதத்திற்கு ஒரு முறை தன் கையால் சமைத்த உணவினை கஃப் சாலையில் காத்திருக்கும் ஊழியர்
களுக்கு வழங்கி வருகிறார். சிறுவயதில் தந்தையை இழந்து வறுமையில் வாடிய கமலாவிற்கு 18 வயதில் திருமணமாகி, மூன்று பிள்ளைகளுக்கு தாயானார்.
துபாய் சென்ற இவரின் கணவர் உயிரை மாய்த்துக்கொண்டார் என்ற செய்தியைக் கேட்டு கலங்கிப்போனார்.
இனி பிள்ளைகளுக்கு தான்தான் வழிகாட்டவேண்டும் என்ற முடிவுடன் சிங்கப்பூருக்கு பணிப்பெண்ணாக தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தார்.
11 ஆண்டுகள் பணிப்பெண்ணாக வேலை செய்து மாதம் 550 வெள்ளி சம்பளத்தை தனக்கென ஒதுக்கிக்கொள்ளாமல் பிள்ளைகளுக்கு முழுமையாக அனுப்பத் தொடங்கினார்.
தமிழகத்திலிருந்து வந்து
இங்கு கட்டட வேலை செய்யும் பலர் வீட்டில் சமைக்கும் உணவுக்கு ஏங்குவதை அறிந்தார்.
கடந்த பத்து மாதங்களாக வீட்டு உரிமையாளரின் அனுமதியோடு தனது விடுமுறை நாளில் உணவு சமைத்து, அதைப் பொட்டலம் போட்டு, பீச் ரோடில் இருந்து லிட்டில் இந்தியா வரை அந்த உணவுப் பொட்டலங்களை தள்ளுவண்டியில் வைத்து நடந்தே தள்ளிக்கொண்டு செல்கிறார். காலை தொடங்கி மாலை வரை வழியில் தென்படும் ஊழியர்களுக்கு கொடுத்து வருகிறார்.
அவர் எப்போதும் வெள்ளை உடையுடன் இருப்பதால் பலர் அவரைச் சந்தேகத்துடன் பார்த்ததாகவும் பகிர்ந்துகொண்டார். யார் என்ன நினைத்தாலும் தன்னுடைய இந்தச் சேவையை தொடர உறுதி பூண்டிருக்கிறார் கமலா ராஜேந்திரன்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தங்குவிடுதி ஊழியர்களின் தற்போதைய வாழ்க்கைமுறையை சித்திரிக்கும் சிறப்புக் காணொளியைப் பார்க்க 'கியூஆர்' குறியீட்டை வருடவும்.