மோனலிசா
திருக்குறளின் ஆழ்ந்த வாழ்வியல் கருத்துகளை வெளிநாட்டு ஊழியர்களிடம் எடுத்துச்செல்லும் நோக்கில் அண்மையில் திருக்குறள் எழுதும் நிகழ்ச்சி ஒன்று தமிழகத்தைச் சார்ந்த வெளிநாட்டு ஊழியர்களுக்காக நடத்தப்பட்டது.
'லிஷா' எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்திய கலாசார திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்நிகழ்வில் வெளிநாட்டு ஊழியர்கள் நிலையத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் பங்கேற்றனர்.
கடந்த 23ஆம் தேதி காலை 11 மணிமுதல் மதியம் 1 மணிவரை பெர்ச் சாலையின் திறந்தவெளியில் நடைபெற்ற இந்நிகழ்வின் முதற்கட்டமாக 'ஆத்திசூடி' செய்யுளிலிருந்து ஏதேனும் மூன்று மேற்கோள்களை எழுதுமாறு ஊழியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இவற்றைச் சரியாக எழுதிய 20 ஊழியர்கள் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு திருக்குறளின் வெவ்வேறு அதிகாரங்களிலிருந்து தலா ஐந்து குறள்கள் எழுதினர். குறட்பாக்களை எழுதிய ஊழியர்களைப் பாராட்டும் விதமாக என்டியுசி பேரங்காடிப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வின் கடைசி அங்கமாகத் தமக்குப் பிடித்த திருக்குறளையும் அந்த குறள் தன்னுடைய வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தையும் ஊழியர்கள் மேடையேறிப் பகிர்ந்துகொண்டனர். நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் திருக்குறள் புத்தகமும் மதிய உணவும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான மூத்த ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரியும் முரளிதரன் லெட்சுமணன், 48, "நண்பர்களுடன் சேர்ந்து திருக்குறள் எழுதியதும் அதைப் பற்றி பகிர்ந்துகொண்டதும் சொந்த ஊரில் இருப்பதைப் போன்ற உணர்வையும் அதிக உற்சாகத்தையும் ஏற்படுத்தியது," என்று கூறினார்.
கட்டுமானத்துறையில் பணிபுரியும் ஜான் டெண்டுல்கர், 31, "குறட்பாக்களை எழுதியபோது பள்ளிக் காலம் நினைவுக்கு வந்தது. இந்தப் புத்தகத்தை இனி தினந்தோறும் படிக்கத் திட்டமிட்டுள்ளேன்," என்று கூறினார்.