தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரிய விழாவாக சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கேன்பரா சமூக மன்றத்தின் இந்திய நற்பணிச் செயற்குழு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. கடந்த 23ஆம் தேதியன்று காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் கேன்பரா சமூக மன்ற அடித்தள ஆலோசகரான டாக்டர் லிம் வீ கியக் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பாலர் பள்ளி மற்றும் தொடக்கநிலை மாணவர்களை உள்ளடக்கி இரண்டு பிரிவுகளாக மாறுவேடப்போட்டி மற்றும் வண்ணம் தீட்டும் போட்டிகள் நடத்தப்பட்டன. ஐந்து வெள்ளி நுழைவுச்சீட்டுடன் கூடிய இந்த நிகழ்ச்சியில் எல்லா நுழைவுச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.
தமிழ்க் குடும்பங்களோடு மற்ற இனத்தவரும் மிகுந்த ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவை வழங்கினார்கள். அத்துடன் கேன்பரா சமூக மன்ற இந்திய நற்பணிச்செயற்குழுவின் பெண்கள் குழு, முதியோர் குழு மற்றும் விளையாட்டுக் குழுவினர் இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த முழு ஒத்துழைப்பையும் வழங்கினார்கள்.
மாறுவேடப்போட்டியில் கண்ணகி, பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார், ஔவையார் ஆகிய பாத்திரங்களாக வேடமிட்டு தொடக்கநிலை மாணவர்களும் பாலர் பள்ளி மாணவர்களும் தங்களின் திறமைகளைக் காட்டினர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அங்கமாக பட்டிமன்றம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் நிறுவனர் திரு யூசுப் ராவுத்தர் ரஜித் தலைமையில் இந்தப் பட்டிமன்றம் நடைபெற்றது. மரியாதை என்பது இன்று வயதுக்கா? திறமைக்கா? என்று கேள்வி எழுப்பிய இந்தப் பட்டிமன்றத்தில் 'வயதுக்கே' என்ற அணியில் முனைவர் ராஜி ஸ்ரீநிவாசன், திரு இராமன் குருந்தலிங்கம் நிர்மல், செல்வன் சுந்தரவடிவேலு ப்ரபவ் ஆகியோரும் 'திறமைக்கே' என்ற அணியில் திருமதி இசக்கிசெல்வி, திருமதி நபிலாநஸ்ரின் செல்வன் ரோகித்குமார் சொக்கலிங்கம் ஆகியோரும் பேசினர்.
சிறப்பு விருந்தினர் டாக்டர் லிம் நிகழ்ச்சி அங்கங்களைப் பாராட்டிப் பேசியதை அடுத்து போட்டியாளர்களுக்குச் சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கினார்.

