எலும்பு, நரம்பு, தசைகள் மூன்றும் வலுவாக இருப்பது நலமான வாழ்வுக்கு முக்கியம் என்று அனைத்து வகையான மருத்துவங்களும் குறிப்பிட்டுள்ளன. இந்த மூன்றையும் வலுப்படுத்தக்கூடியவை இயற்கை உணவு வகைகள். உடற்பயிற்சி செய்தாலும் முறையான உணவு கட்டாயமாகிறது.
அன்றாடம் காலையில் பப்பாளி, பேரீச்சை, அத்திப் பழம் போன்றவற்றுடன் பால் சாப்பிட உடல் உறுதிபெறும்.
ஆப்பிள், முந்திரி, பால் மூன்றையும் சேர்த்து உண்டால் சதை, நரம்பு, எலும்பு மூன்றும் வலுப்பெறும்.
அதேபோல் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, முந்திரிபருப்பு, அக்ரூப் பருப்பு, சாரப்பருப்பு, சாலான் மிஸ்திரி, சபேத் மிஸ்ரி, வெள்ளரி விதை, பூசணி விதை இவையனைத்தையும் சம அளவு கலந்து பொடியாக வைத்துக்கொண்டு அன்றாடம் காலையில் பாலில் கலந்து ஒருவேளை உணவாகச் சாப்பிடும்போது நல்ல பலன் கிடைக்கும்.
முருங்கைக்கீரை, நாட்டுக்கோழி முட்டை, மிளகுத்தூள் இவற்றைச் சேர்த்து வைத்து தொடர்ந்து விடாமல் 48 நாட்கள் சாப்பிட்டால் எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், தசை மண்டலம் மூன்றும் பலப்படும்.
இந்த மூன்று மண்டலங்களும் ஒழுங்காக முறையாக இருக்கும்போது செரிமான மண்டலம் முறையாக வேலை செய்யும்.
செரிமான மண்டலத்தில் உண்ணும் உணவு, சத்தாக மாற்றப்பட்டு உடலில் உறிஞ்சப்படுகிறது. எனவே, உணவு உடலில் சேர முறையான செரிமானத்தன்மை வேண்டும்.
அதற்கு எலும்பு, நரம்பு, தசை மண்டலங்கள் ஒழுங்காகச் செயல்பட வேண்டும். இவற்றை வலுப்படுத்தக்கூடிய இயற்கை உணவு வகைகளைத் தொடர்ந்து உண்ணும்போது செரிமான சக்தியும் வலுப்படும்.
ஒருவர் நலமுடன் வாழ்வதற்கு நோய் எதிர்ப்புச் சக்தி எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு குடல் நலமும் முக்கியத்தும் வாய்ந்தது.
எண்ணெய், நெய் சேர்த்த உணவு, பேக்கிங் உணவு, துரித உணவு வகைகள் போன்றவை உடலில் மாவுச்சத்தை மிக அதிக மாக்குகின்றன. எந்த அளவுக்கு மாவுப் பொருளைக் குறைத்து இயற்கை உணவை உணவில் சேர்க்கிறோமோ அந்த அளவிற்கு நல்ல உடல் நலம் பெறும்.
நோய்களுக்கு மூலமாக செரிமான மண்டலம் இருக்கிறது. செரிமானமண்டலக் கோளாறு இல்லாமல் இருக்க வரகு, தினை, குதிரை வாலி, சாமை, கம்பு, சோளம், ராகி போன்ற சிறுதானியங்கள் சார்ந்த உணவை அதிகம் சாப்பிட வேண்டும்.
காலை உணவை பழ, கீரை உணவாகவும் மதிய உணவை சிறுதானியங்கள் சேர்த்த உணவாகச் சாப்பிட்டு வரும்பொழுது செரிமானக்கோளாறு இல்லாத தன்மை இருக்கும்.
செரிமானக்கோளாறு உள்ளவர்கள் நார்ச்சத்து உள்ள உணவையும் கால்சியம் சத்துள்ள உணவையும் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
மதிய உணவில் மாவுச்சத்தை எந்த அளவிற்கு குறைக்கிறோமோ அது நரம்புகளுக்கு நல்லது.
குடல் பெரிதாகத் தொடங்கி னால் கண்டிப்பாக உடல் பெரிதாகிவிடும். உடல் உப்ப ஆரம்பித்துவிடும். குடல் பலமே உடல்பலம் என்று சொல்வார்கள்.
குடல் நல்ல பலமாக இருப்பவரிடம் நம்பிக்கையையும் சுறுசுறுப்பையும் செயல்பாட்டையும் பார்க்கலாம். குடல் பலகீனமாக இருந்தால் உணவு சரியில்லை எனக்கொள்ளலாம்.
குடல் என்பது செரிமான மண்டலத்தின் முக்கிய அம்சம். செரிமானமண்டலம் ஒழுங்காக, முறையாகச் செயல்பட மாவுச்சத்தைக் குறைத்து சமச்சீர் உணவை உட்கொள்ள வேண்டும். புரதம், இரும்பு, கால்சியம், நார்ச்சத்து ஆகிய நான்கும் முறையாகக் கிடைக்கும் உணவை உண்ணலாம்.
உணவுக்குப் பின் செய்யக்கூடாதவை
உணவு உண்ட பின்னர் தூங்குவது, தண்ணீர் குடிப்பது, உடற்பயிற்சி செய்வது, குளிப்பது ஆகியவை கட்டாயம் செய்யக்கூடாதவை என்று ஆயுர்வேதம் சொல்கிறது. பாரம்பரிய மருத்துவமுறைப்படி இச்செயல்கள் செரிமான மண்டலத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.
உண்ணும் உணவைப் பொறுத்து அது உடலில் சேர்ந்து செரிமானம் அடைய சில மணி நேரங்கள் வரை ஆகலாம். அதனால் சாப்பிட்ட உடன் பசிப்பது போலிருக்கும். ஆனால் சாப்பிட்டதும் நொறுக்குத் தீனி சாப்பிடக் கூடாது.
சாப்பிட்டதுமே பழங்கள் சாப்பிடுவதும் தண்ணீர் அருந்துவதும் செரிமானத்துக்கு பங்கம் விளைவிக்கின்றன. உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அல்லது பின்னர் பழம் சாப்பிடலாம். சாப்பிட்ட அரை மணி நேரத்துக்குப் பிறகு தண்ணீர் குடிக்கலாம்.
மதியம் சாப்பிட்ட உடனே தூக்கம் வரக்கூடாது. மதிய உணவு அன்றைய வேலைகளை, குறிப்பாக மூளை சார்ந்த வேலைகளைத் தொடர்ந்து செய்ய ஊட்டம் தருவதாக இருக்கவேண்டும்.
செரிமானத்தை மேம்படுத்தும் உணவு
காய்கறி, கீரை, பயறு வகைகள்
அதிக நார்ச்சத்துமிக்க காய்கறிகள் செரிமானத்தை எளிதாக்குவதோடு ரத்தத்தின் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கும்.
கடுகுக் கீரை, வெந்தயக் கீரை, பசலைக்கீரை போன்ற கீரைகளில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. இது செரிமான சக்தியை அதிகரிக்கும்.
முந்திரி, பிஸ்தா, பேரீச்சை, பாதாம், வால்நட் போன்ற உலர் பழங்களும் உடலுக்கு சக்தியைக் கொடுக்கும்.
மூலிகை, மசாலாப் பொருள்கள்
ஏலக்காய், ஜாதிக்காய், மஞ்சள், இஞ்சி, மிளகாய், பட்டை மற்றும் கிராம்பு போன்ற அனைத்துமே செரிமான சக்தியைத் தூண்டக்கூடியவை. இவை நோயெதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும்.
இஞ்சி- செரிமானத்துக்கு முக்கியமான திரவங்களை இஞ்சி ஊக்குவிக்கும். இதில் உள்ள ஜிஞ்சரால் எனும் எண்ணெய் வயிற்றில் செரிமான அமிலம் உணவைக் கரைக்கும்போது வெளிப்படும் வாயுவை வயிறு, குடல், உணவுக்குழாயில் தேங்கவிடாமல் வெளியேற்றுகிறது.
உணவுக்குப் பின்னர் ஒரு மணி நேரம் கழித்துப் பால் சேர்க்காத இஞ்சி டீ குடிக்கலாம்.
புதினா- வாயுப்பிடிப்பு, வலி, எரிச்சல், புளிப்பு ஏப்பம் உள்ளிட்ட சிரமங்கள் இல்லாமல் உணவு எளிதில் செரிமானமாக உதவும்.
லவங்கம்- இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்டுகள் செரிமானத்துக்கு உதவுகின்றன. செரிமான அமிலத்தால் வெளியாகும் வாயுவின் அளவைக் கட்டுப்படுத்து கிறது. இதனால் வாயுப்பிடிப்பு, வயிற்று உப்புசம், குமட்டல் உணர்வு நீங்கும். செரிமான நொதி கள் தயாரிப்பை ஊக்குவிக்கும்.
ஓமம் - ஓமத்தில் உள்ள தைமோல் பீனால், செரிமான நொதிகள் தயாரிப்பை ஊக்குவிக்கிறது. அரை தேக்கரண்டி ஓமத்தை, ஒரு குவளை தண்ணீர்விட்டு அரைக் குவளையாகும்வரை கொதிக்க வைத்து, தினமும் காலை, மாலை பருக வயிற்று மந்தம் குணமாகும்.
சீரகம்- இரும்பு, கால்சியம், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்டுகள் உள்ள மூலிகைச் செடி சீரகம். இரைப்பை ஒவ்வாமையைக் குணமாக்குகிறது. நுண்தொற்றுக்களிடம் இருந்து இரைப்பையின் உட்பகுதியைப் பாதுகாக்கிறது. நாள்பட்ட செரிமானக் கோளாறால், மலக்குடலில் ஏற்படும் ரத்தக்குழாய் வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது.
வெந்தயம்- வைட்டமின்கள் ஏ, சி, கே, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், ஃபோலிக் அமிலம் உள்ளது. கெட்ட கொழுப்பைக் குறைக்கும். வெந்தையத்தை இரவு தண்ணீரில் ஊறவைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது சிறந்தது.
நல்ல கொழுப்பு
செரிமானம் சீராக நடைபெற தேவையான நல்ல கொழுப்பு உடலில் சேர்வது அவசியம். இந்த உணவுகள் சாப்பிட்ட நிறைவைக் கொடுப்பதோடு, ஊட்டச்சத்தையும் உடலுக்கு வழங்குகிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு குடல்வீக்க நோய்களைத் தடுக்கும்.
பானங்கள்
காபி, டீ, சாக்லெட் போன்ற பானங்களைக் குடிக்கும் முன் அவற்றில் செறிந்திருக்கும் கேலரியை கவனத்தில் கொள்ளவேண் டும். மேலும் இது செரிமான பிரச்சினைக்கும் வழிவகுக்கும்.
பச்சைத் தேநீர்- இதில் உள்ள பாலிபீனால் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட் கொழுப்பை ஆக்ஸிடைஸ் செய்கிறது. மேலும், இன்சுலின் சுரப்பை அதிகரித்து, சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத் திருக்க உதவுகிறது. சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகு 50 மி.லி பச்சைத் தேநீர் (கிரீன் டீ) அருந்துவதால் செரிமானம் எளிதாகும். ஒரு நாளில் 100 மில்லி மட்டும் அருந்துவது நல்லது.
வெந்நீர்- சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் பருகுவதால், உணவில் கலந்துள்ள எண்ணெய் இறுகுகிறது. இதனால் செரிமானம் தாமதப்படுகிறது. மிதமான சூடுள்ள நீர் பருகி னால் உணவுப் பொருள் எளிதில் உடையும். கடினமான உணவுகளில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க வெந்நீர் உதவுகிறது. இரவு உணவுக்குப் பின்னர், வெந்நீர் பருகுவதால் சிறு, பெருங்குடல் செயல்பாடு தூண்டப்படுகிறது. அதனால், மலம் இளகி, மலச்சிக்கல் நீங்கும். வயிற்று வலி, உப்புசத்தைத் தடுக்கும்.