நோம்பென்: இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூர் 51 தங்கப் பதக்கங்களை வென்றது.
இந்த விளையாட்டுகளில் சிங்கப்பூர் தொடர்ந்து மேம்பாடு கண்டு வந்துள்ளது.
எனினும், இதனுடன் நின்றுவிடாமல் இனி ஆசிய, ஒலிம்பிக் விளையாட்டுகள் போன்ற பெரிய அளவிலான விளையாட்டுகளிலும் சிறந்து விளங்குவது குறித்து சிங்கப்பூர் சிந்திக்கவேண்டும் என்று எஸ்எஸ்ஐ எனப்படும் சிங்கப்பூர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் சு சுன் வெய் கூறியுள்ளார்.
43 வெள்ளிப் பதக்கங்கள், 64 வெண்கலப் பதக்கங்கள் ஆகியவற்றையும் இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் வென்றனர் சிங்கப்பூர் வீரர்கள். பதக்கப் பட்டியலில் சிங்கப்பூர் ஆறாவது இடத்தைப் பிடித்தது.
மேலும், இதற்கு முன்பு தென்கிழக்காசிய விளையாட்டுகளில் மூன்றே முறைதான் சிங்கப்பூர் 51க்கும் அதிகமான தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறது.
சொந்த மண்ணில் நடைபெற்ற 2015ஆம் ஆண்டு தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூர் வரலாறு காணாத அளவில் 84 தங்கப் பதக்கங்களைக் குவித்தது. அதற்கு அடுத்தபடியாக 2017ஆம் ஆண்டில் 58, 2019ஆம் ஆண்டில் 53 தங்கப் பதக்கங்களை வென்றது.
"ஆசிய, உலகளவில் முத்திரை பதிப்பதற்கான ஆற்றல் நம்மிடம் நிச்சயமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் சில விளையாட்டுகளில் அவ்வாறு முத்திரை பதிக்கத் தொடங்கிவிட்டோம். இனி தொடர்ந்து சிறப்புத் தேர்ச்சி பெறுவதில் கவனம் செலுத்தவேண்டும்.
"வாள்வீச்சு விளையாட்டு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. தென்கிழக்காசியாவில் ஆகச் சிறந்த நாடுகளில் ஒன்றாக விளங்கமுடியும் என்ற நம்பிக்கை தற்போது சிங்கப்பூரிடம் இருக்கிறது. அடுத்தபடியாக ஆசியாவில் சிறந்து விளங்கமுடியுமா என்ற கேள்வி இயல்பாகவே எழும்," என்று இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் டாக்டர் சு குறிப்பிட்டார்.
22 வயதுக்கு உட்பட்ட விளையாட்டாளர்களுக்கான சிங்கப்பூர் ஆண்கள் தேசிய காற்பந்து அணியின் செயல்பாடு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது. அதைப் பற்றியும் டாக்டர் சு பேசினார்.
இந்த விவகாரத்தில் பொறுமை தேவை என்று அவர் சுட்டினார்.
"சிங்கப்பூர்க் காற்பந்துச் சங்கம் இதைக் கருத்தில்கொண்டுள்ளது. அதன் அதிகாரிகள் தங்களுக்குள் நிலைமையை ஆராய்வர். நிலைமையை ஆராய சங்கத்துக்கு நாம் கால அவகாசம் வழங்கவேண்டும். அணியின் தற்போதைய நிலை என்னவென்பது நமக்கு இப்போது நன்றாகவே தெரியும். என்ன நடவடிக்கைகள் எடுக்கவேண்டும், எத்தகைய உறுதியான முடிவுகளை எடுத்து ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்பதை இனி சிங்கப்பூர்க் காற்பந்துச் சங்கம் தீர்மானிக்கவேண்டும்," என்று டாக்டர் சு சொன்னார்.
"அணியின் செயல்திறன் மேம்படவேண்டும். அது உடனடியாக நடக்காது. சங்கம் நிலைமையை ஆராயவும் அணி அதன் தவறுகளை அடையாளங்கண்டு பாடம் கற்றுக்கொள்ளவும் நேரம் வழங்குமாறு நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்," என்றும் அவர் கூறினார்.

