மான்செஸ்டர்: ஒரே காற்பந்துப் பருவத்தில் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக், எஃப்ஏ கிண்ணம், இங்கிலிஷ் பிரிமியர் லீக் விருது ஆகிய மூன்றையும் (டிரெபல்) முதன்முறையாக வெல்லும் இலக்கை நோக்கி கம்பீரமாகச் சென்றுகொண்டிருக்கிறது மான்செஸ்டர் சிட்டி. அதற்குச் சான்றாக அமைந்தது, சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிச் சுற்றில் நடப்பு வெற்றியாளர் ரியால் மட்ரிட்டுக்கு எதிரான 4-0 எனும் கோல் கணக்கில் அமைந்த வெற்றி.
அரையிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் இவ்விரு குழுக்களும் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டன. இரண்டாம் ஆட்டத்தில் ரியாலை சுக்குநூறாக்கியது சிட்டி.
பெர்னாடோ சில்வா சிட்டிக்கு இரண்டு கோல்களைப் போட்டார். மேனுவெல் அக்கான்ஜி, ஹூலியன் அல்வாரெஸ் ஆகியோர் மற்ற இரண்டு கோல்களைப் போட்டனர்.
அரையிறுதிச் சுற்றின் மொத்த கோல் எண்ணிக்கை 5-1.
பொதுவாக வெல்வதற்கே சிரமம் எனக் கருதப்படும் ரியாலுக்கு எதிரான ஆட்டத்தில் சிட்டியின் கோல் மழை பொழிந்தது.
சாம்பியன்ஸ் லீக், பிரிமியர் லீக், எஃப்ஏ கிண்ணம் மூன்றையும் தனது குழுவால் வெல்லமுடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாகக் கூறினார் சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா.
"இலக்கை அடையும் விளிம்பில் நாங்கள் இருக்கிறோம். நாங்கள் அதைப் பற்றி சிந்திக்கலாம், அதைச் சாதித்து முடிப்பதை முன்கூட்டியே நினைத்தும் பார்க்கலாம்," என்றார் கார்டியோலோ.
பிரிமியர் லீக்கில் சிட்டிக்கு மூன்றே ஆட்டங்கள்தான் எஞ்சியுள்ளன. இன்னும் ஓர் ஆட்டத்தை வென்றாலே அது லீக் கிண்ணத்தை வெல்வது உறுதியாகிவிடும்.
சாம்பியன்ஸ் லீக் இறுதியாட்டத்தில் இத்தாலியின் இன்டர் மிலானைச் சந்திக்கிறது சிட்டி. எஃப்ஏ கிண்ணப் போட்டியின் இறுதியாட்டத்தில் சிட்டி அதன் பரம வைரியான மான்செஸ்டர் யுனைடெட்டுடன் மோதுகிறது.
இங்கிலாந்து காற்பந்து வரலாற்றில் 'டிரெபல்' வென்ற ஒரே குழு என்ற பெருமை யுனைடெட்டுக்கு உள்ளது. அதைத் தகர்க்கும் வெறியுடன் அபாரமாக விளையாடி வருகிறது சிட்டி.
தற்போதைய நிலையை வைத்துப் பார்க்கும்போது எந்தக் குழுவால் சிட்டியைத் தடுத்த நிறுத்த முடியும் என்பது தெரியவில்லை.

