நோம்பென்: இவ்வாண்டு தென்கிழக்காசிய விளையாட்டுகளின் ஆகச் சிறந்த விளையாட்டாளராக சிங்கப்பூரின் நீச்சல் வீராங்கனை குவா திங் வென் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கம்போடியத் தலைநகர் நோம்பென்னில் உள்ள மொரொடொக் டெக்கோ தேசிய விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற விளையாட்டுகளின் நிறைவு விழாவில் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
கம்போடியாவின் துணைப் பிரதமர் தியா பான், குவாவுக்கு விருதை வழங்கினார். 32வது முறையாக நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுகளில் ஆறு தங்கப் பதக்கங்களையும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் வென்றார் 30 வயது குவா.
தென்கிழக்காசிய விளையாட்டுகளில் தொடர்ந்து ஐந்து முறை 100 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலில் தங்கம் வென்றது குவாவின் பல சாதனைகளில் ஒன்று.