சிங்கப்பூரின் கடைசி சிறுத்தைப் பூனைகள்
மலாயன் புலிகளைச் சிங்கப்பூர் கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன்னர் இழந்தது. தற்போது, சிங்கப்பூரின் கடைசி காட்டுப்பூனையாக இருக்கும் 'லெப்பர்ட் கேட்ஸ்' வாழ்வியலைப் பல காரணிகள் அச்சுறுத்தி வருகின்றன. கடைசி நிலவரப்படி, 50 சிறுத்தைப் பூனைகள் மட்டுமே இங்கு எஞ்சி உள்ளன.
காடுகள் அழிக்கப்படுவது, காட்டுப் பகுதிகளை நாம் கூறு போட்டுப் பிரித்திருப்பது, சாலை விபத்துகள் உள்ளிட்ட அம்சங்கள் இவற்றைப் பெரிதும் பாதித்து வருவதாகக் கூறினார், 'சுவேக்' எனப்படும் சிங்கப்பூர் காட்டுப் பூனை நடவடிக்கைக் குழுவின் தொண்டூழியர் திருவாட்டி சத்யா திவாரி, 58.
"நமது காடுகள், இயற்கைக் காப்பகங்களில் சில விரைவுச்சாலைகளால் பிரிக்கப்பட்டிருப்பது சிறுத்தைப் பூனை போன்ற வன விலங்குகளின் இயல்பு வாழ்க்கை யில் குறுக்கிடுகிறது. இதனால் சாலைக்கு ஓடி வரும் இவை, விபத்தில் சிக்கும் ஆபத்து பன்மடங்காகிவிட்டது," என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரில் சாலை விபத்து களில் மாண்ட மிருகங்களின் எண்ணிக்கை 2021ல் 194ஆக உயர்ந்தது; 2016ஐ காட்டிலும் இது இருமடங்காகியது. பறவைகள், பாலூட்டி விலங்குகள் முதலியவை இவற்றில் அடங்கும்.
"சிறுத்தைப் பூனைகள் அளவில் சிறியவை. இரவு நேர மிருகங்களான இவற்றை எளிதில் காண இயலாது. அவற்றின் நலனைப் பேணிக் காப்பதில் இத்தகைய சிக்கல்கள் உள்ளன," என்றார் திருவாட்டி சத்யா. கடைசியாக சிறுத்தைப் பூனையானது 2018ல் மண்டாய் பகுதியில் காணப்பட்டது.
சுவேக் குழுவில் இணைந்துள்ள திருவாட்டி சத்யாவின் மகள் அலிஷா சந்திராவும் இம்மிருகங்களைப் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் தேவைப்படுவதாக உணர்கிறார்.
"மிருகங்கள் அதிகமாக கடக்கும் சாலைப் பகுதிகளில் எச்சரிக்கைப் பலகைகளுடன் சாலை வேக வரம்புகள் இருந்தால் மிருகங்கள் தொடர்பிலான சாலை விபத்துகளைத் தவிர்க்கலாம்," என்றார் இவர்.
சிறுத்தைப் பூனைகள் குறித்து விழிப்புணர்வூட்டுவதிலும் மலாயன் காட்டுப்பூனை நலக் குழுவினருடன் இணைந்து விலங்கு, வனப் பாதுகாப்பு முயற்சிகளில் ஈடுபடுவதிலும் அம்மா-மகள் இருவரும் பங்கேற்றுள்ளனர்.
வீதிக்கு வரும் நீர்நாய்கள்
கொவிட்-19 சூழலில் அதிகம் பொதுவில் காணப்பட்டன நீர் நாய்கள். பார்க்க அழகாக இருக்கும் இவற்றை மக்கள் ஒருபுறம் ரசித்தாலும் வீட்டில் வளர்க்கும் மீன்களைத் தின்றது, மனிதர்களைத் தாக்கியது போன்ற கார ணங்களுக்காக சிலர் அவற்றை வெறுக்கவும் செய்கின்றனர்.
இந்நிலையில், அவற்றுடன் ஒத்துவாழ்வதற்கு மனிதர்கள் இணங்கவேண்டும் என்றார் 'ஏக்கர்ஸ்' எனப்படும் விலங்கு அக்கறை ஆராய்ச்சி, கல்விச் சங்கத்தின் துணை தலைமை நிர்வாகி அன்பரசி பூபால், 40.
"நாம் எவ்வாறு பிள்ளைகளை ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கிறோமோ அதேபோல் நீர் நாய்கள் தங்களின் குட்டிகளைக் காப்பதற்கே பெரும்பாலும் மனிதர்களைத் தாக்கக்கூடும்," என்று அவர் விளக்கினார்.
ஒரு மில்லியன் மரங்களை நடும் சிங்கப்பூரின் இயக்கத்தையும் குறிப்பிட்ட அவர், மக்களுக்கு மிக அருகில் இயற்கை நெருங்கும்போது வனவிலங்குகள் நமது அன்றாட வாழ்வில் பங்குகொள்ளக்கூடும் என்று கூறினார்.
நீர் நாய்கள் அவ்வப்போது செய்யும் நாசத்தைத் தவிர்ப்பதற்கு அவற்றை முழுமையாக அகற்ற வழி தேடுவது தவறு என்பதை வலியுறுத்தினார் அன்பரசி. வீடுகளுக்குள் நீர் நாய் களோ, சிவெட் விலங்குகளோ புகும்போது அவை வராமல் இருக்க தடுப்புகளை ஏற்படுத்தலாம் என அவர் பரிந்துரைத்தார்.
"எல்லா வனவிலங்குகளையும் பாதுகாப்பதற்கு நாம் உகந்த முடிவுகளை எடுக்கவேண்டும். நாம் உண்ணும் உணவு, பயன்படுத்தும் பொருள்கள், விலங்குகளைத் தடுக்க பயன்படுத்துபவை ஆகியவை அனைத்தும் இயற்கைக்கு உகந்த வகையில் அமையுமாறு உறுதிப் படுத்துவது அவசியம்," என்றார் அன்பரசி.
வனவிலங்குகளுக்கு உணவளிப்பதில் தீங்கு ஒன்றுமில்லை என்று பலர் எண்ணலாம். ஆனால், இப்போக்கு அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்குவதைச் சுட்டிய அன்பரசி, இறுதியில் அவற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் விலங்குகளை அழிக்கவேண்டி வரும் என்பதை மனதில்கொள்ளும்படி கூறினார்.
சாலை விபத்துகளைக் குறைப்பதற்கு 'ஏக்கர்ஸ்' பல முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. நிலப்போக்குவரத்து ஆணையத்திடம் இவ்விபத்துகள் அதிகம் நிகழும் பகுதிகளில் வேக வரம்புகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தும் வருகிறது.
சவால்மிக்க கிளி பாதுகாப்பு
விலங்குநல மருத்துவச் சேவையின் தகவல்படி, நான்கு கிளி இனங்களைத் தவிர்த்து மற்ற கிளி இனங்கள் அனைத்துமே அருகி வரும் அபாயத்தில் உள்ளவை. சிங்கப்பூரர்கள் அதிகளவில் கிளிகளை வீடுகளில் வளர்த்து வரும் நிலை உள்ளது.
கிளிகளைப் பராமரிப்பதில் உள்ள சவால்களை அறிவார் திருமதி பிரமிளா கிருஷ்ணசாமி. கடந்த சில ஆண்டுகளாக காப்பாற்றப்பட்ட அல்லது தத்தெடுக்கப்பட்ட நான்கு கிளிகளை கணவருடன் சேர்ந்து அவர் வளர்த்து வருகிறார்.
"பறவைகளைப் பராமரிப்பது மிகக் கடினம். இயல்பாகவே வனப்பகுதியில் தழைக்கும் பறவை இனங்களுக்கு அதிக கவனமும் செறிவூட்டலும் தேவை," என்றார் நாய், பூனை, மீன் எனப் பல்வகை மிருகங்களை வீட்டில் வளர்த்துள்ள 33 வயது திருமதி பிரமிளா.
கடைகளிலிருந்து பறவைகளை வாங்குவதில் திருமதி பிரமிளாவிற்கு நம்பிக்கை இல்லை. அவை கட்டாயமான இனப்பெருக்கத்துக்கு உட்படுத்தப்பட்டவையாக இருக்கலாம். அதற்கு பதிலாக கிளிகளைத் தத்தெடுத்துள்ளார் இவர்.
சிங்கப்பூரர்களில் 67 விழுக்காட்டினர் தாங்கள் வைத்துள்ள கிளி இனம் எத்தகைய ஆபத்தில் உள்ளது என்பதை அறியாமல் உள்ளதாக கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழக அறிக்கை சுட்டியது. பறவை கள் வளர்ப்போர் அவற்றின் தேவைகளைத் துல்லியமாக அறிந்துகொள்வதற்கு இத்தகைய விவரங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டின் தொடக்கத்தில் பணிப்பெண் ஒருவரால் ஒருவகை பச்சைக்கிளி எச்சில் ஊட்டப்பட்டு துன்புறுத்தப்பட்ட காணொளி இணையத்தில் பரவியது. அக்கிளியைக் காப்பாற்றிய சிங்கப்பூர் கிளிச் சங்கம், பொதுமக்களின் இத்தகைய போக்குகள் விலங்குப் பராமரிப்பு குறித்த கூடுதல் விழிப்புணர்வுக்கான தேவையைக் காட்டுவதாகத் தெரிவித்தது.
ஆ. விஷ்ணு வர்தினி
உலகளவில் அருகிவரும் உயிரினங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும் நாளாக மே 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதிகரிக்கும் நகரமயமாதல் காரணமாக நகர்ப் பகுதிகளில் காணப்படும் காட்டு விலங்குகளைச் சிலர் அன்றாட வாழ்வியலுக்குக் குறுக்கீடாகக் கருதுகின்றனர். மாறாக, இவ்விலங்குகளை அரவணைத்து, அவற்றின் இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை விலங்கியல் ஆதரவாளர்களும் ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர். நாம் ஒவ்வொருவரும் எடுக்கும் முடிவினாலும் வனவிலங்குப் பாதுகாப்பு பாதிக்கப்படக்கூடும் எனும் விழிப்புணர்வை ஊட்ட இவர்கள் எண்ணம் கொண்டுள்ளனர்.

