லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டி முடிவதற்கு முன்பே முதலிடம் வெல்லும் வாய்ப்பை ஆர்சனல் நழுவவிட்டுவிட்டது. இறுதி வரை போராடி தோல்வி அடைந்திருந்தாலும் அதுகுறித்து பெருமைப்பட்டிருக்கலாம். ஓர் ஆட்டம் மட்டுமே எஞ்சியிருக்கும்போதிலும் அதில் வெற்றி பெற்றாலும் எவ்வித பயனும் இல்லை என்ற நிலை ஆர்சனலுக்கு ஏற்பட்டுவிட்டது. காரணம் சிட்டிக்கு அதற்கும் இடையே இருக்கும் இடைவெளி எட்டிப் பிடிக்க முடியாத அளவாகிவிட்டது.
தமது ஆட்டக்காரர்கள் இறுதிவரை சிட்டிக்குக் கடுமையான போட்டி அளிக்காமல் முன்கூட்டியே சரணடைந்தால் ஆர்சனல் நிர்வாகி மிக்கேல் ஆர்டேட்டா சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்ந்துள்ளார். ஏமாற்றம், வேதனை தம்மை ஆட்கொண்டுள்ள போதிலும் லீக் பட்டத்தைக் கைப்பற்றிய சிட்டிக்கு அவர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
"உண்மையிலேயே மிகவும் சோகமான நாள்," என்று ஆர்டேட்டா கவலையுடன் தெரிவித்தார். கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டுவிட்டதாகவும் இறுதி வரை போராடி தரமான செயல்பாட்டை வெளிப்படுத்த தவறிவிட்டது ஏமாற்றத்தை அளிப்பதாகவும் அவர் கூறினார்.
"மான்செஸ்டர் சிட்டிக்கு எனது வாழ்த்துகள். லீக் பட்டம் வெல்வதற்கான அனைத்துத் தகுதிகளும் அக்குழுவுக்கு உள்ளது. சிட்டியை எப்படியும் முறியடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்கு நாங்கள் ஏற்படுத்தியிருந்தோம். ஆனால் அவ்வாறு செய்ய முடியாமல் போய்விட்டது. அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த நிலைக்கு நான் பொறுப்பேற்கிறேன்," என்றார் ஆர்டேட்டா.

