சபிதா ஜெயகுமார்
பல்வேறு வகையான விலங்குகளும் தாவர இனங்களும் வாழும் இயற்கை சூழந்த நகரம் சிங்கப்பூர். இந்தக் கட்டட நகரத்தில் தாவரங்களும் விலங்குகளும் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் வாழ்வது சிறப்பு.
தொழில்துறை, அறிவியல் புரட்சிகள் கடந்த ஆண்டுகளில் இயற்கையின் அழிவுக்கு வழிவகுத்தன. அழிவை நிறுத்தவும் பல்லுயிர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும் அனைத்துலக பல்லுயிர் நாள் மே, 22ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.
வெப்பமண்டல மழைக்காடுகள், சதுப்பு நிலங்கள், பவளப் பாறைகள் சூழ்ந்த கடல்பகுதிகள் என சிங்கப்பூரில் செழிப்பான பல்லுயிர் சூழல்கள் உள்ளன.
"390க்கும் அதிகமான பறவை வகைகள், 2,000க்கும் அதிகமான இந்த நிலத்துக்கே உரிய உயிரனங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்துள்ளோம்," என்று தேசிய பூங்கா வாரியம் கூறியது.
உலகில் அதிக மக்கள் தொகை நெருக்கம் கொண்ட நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. இருப்பினும், இந்நாட்டுக்கே உரிய நில, நீர் வாழ் உயிரினங்களை அதிகம் கொண்டுள்ளது.
நான்கு இயற்கைப் பாதுகாப்பு வனப்பகுதிகள், 18 இயற்கை பகுதிகள் என்று சிங்கப்பூரில் 22 இயற்கை தளங்கள் உள்ளன. நகரச் சூழலில் இத்தனை உயிர் இனங்கள் வாழ்வது அரிது.
தேசிய பூங்கா வாரியம் இந்நாளை முன்னிட்டு பல்லுயிர் விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. வரும் சனி, ஞாயிறு இருநாட்களும் ஹார்ட்பீட்@பிடோக்கில் நடைபெறும் இவ்விழாவில் பல நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
"சிங்கப்பூரின் இயற்கை அம்சங்களைப் பாதுகாக்க சமூகத்தின் முயற்சிகளைக் கொண்டாடுகிறது ஆண்டுதோறும் இடம்பெறும் இந்த விழா. நாட்டின் தனித்தன்மை வாய்ந்த பல்லுயிர் பன்முகத்தன்மை குறித்த சிங்கப்பூரர்களின் புரிதலை யும் பங்களிப்பையும் அதிகரிப்பதும் நோக்கம். விழாவை ஒட்டி இடம்பெறும் பல்வேறு நடவடிக்கைகளில் மக்கள் கலந்துகொண்டு நாட்டின் பல்லுயிர்கள் பற்றி புதிய தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்," என்றார் தேசிய பூங்கா வாரியத்தின் பல்லுயிர் நிலையத்தின் குழும இயக்குநர் ரையன் லீ.
sabitha@sph.com.sg

