சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கதைக்களம் அதன் 10வது ஆண்டு நிறைவை சென்ற ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் கொண்டாடியது. கடந்த 10 ஆண்டுகளில், 108 கதைக்கள நிகழ்ச்சிகளை கழகம் நடத்தியுள்ளது.
கவிச்சோலையில் தொடங்கி கதைக்களம் வரை நீண்ட இலக்கியப் பயணமாகக் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தொடர்ந்து கழகம் பயணித்துக்கொண்டிருக்கிறது என்று கூறிய கழகத்தின் தலைவர் திரு நா.ஆண்டியப்பன், 2013 மே மாதம் முதல் கவிச்சோலைக்கு விடை தந்து, கதைக்களம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதை நினைவுகூர்ந்தார்.
சிறுகதைகள் எழுதுவதற்கு வளரும் எழுத்தாளர்களுக்கு ஒரு தளம் அமைத்துக் கொடுப்பதற்காக நிறுவப்பட்ட கதைக்களம், பல விருது பெற்ற எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறது. அவர்களில் சிலர் நூலும் வெளியிட்டு உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் அங்கத்தில் எழுத்தாளர் இந்திரஜித்தின் 'ஞானக் கூத்தன்' நாவலை வாசகர்களுக்கு அறிமுகம் செய்தார் திருவாட்டி வானதி பிரகாஷ். தொடர்ந்து வாசகர் உமா சங்கர், திருவாட்டி பிரேமா ஆகியோரும் நாவல் குறித்து பேசினர்.
அடுத்த மாதக் கதைக்களத்தில் எழுத்தாளர் லதாவின் 'சீனலட்சுமி' சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைகளைப்பற்றிய கலந்துரையாடல் இடம்பெறும். மே மாதக் கதைக்களத்தில் வெற்றிபெற்ற படைப்புகள் நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டன.

