சென்ற மாதம் சாலையைக் கடக்கும்போது கைப்பேசியைப் பயன்படுத்தியவாறு நடந்து சென்ற ஆடவர் ஒருவர் வாகனம் மோதி அந்த இடத்திலேயே மாண்டுவிட்ட செய்தி நம் அனைவரையும் உலுக்கியிருக்கும். பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது அவர்களுக்கு ஏற்படும் இந்த அலட்சியப் போக்கிற்கான காரணம் எதனால் நிலவுகிறது என்பதை தமிழ் முரசு லிட்டில் இந்தியாவில் சில பொதுமக்களிடம் அண்மையில் கருத்து கேட்டு அறிந்து வந்தது.
சுய தொழில் செய்யும் 59 வயது நகுலன் ராமசாமி, "சாலையைக் கடக்கும்போது கைப்பேசியில் பேசிக்கொண்டு நடப்பது மிகவும் தவறு. சாலையைக் கடக்கும் அந்த 30 விநாடிகளிலும்கூட ஒருவரால் கைப்பேசியைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாதா," என்று வினவியதோடு எவ்வளவு அவசரமாக இருந்தாலும் பொறுமையாக இருந்தால் நம் உயிருக்கு ஆபத்து இல்லை என்று வலியுறுத்தினார்.
கப்பல் கட்டுமானத் துறையில் பணிபுரியும் 28 வயது சாமிநாதன் சரவணன், லிட்டில் இந்தியாவின் கேம்பல் சாலையைக் கடக்கும் நேரத்தில் கைப்பேசியைப் பயன்படுத்தியவாறே நடந்து வந்தார். சிறிது நேரம் சாலையைக் கடப்பதற்குள் கைப்பேசியைப் பயன்படுத்த வேண்டிய காரணத்தை அவரிடம் கேட்டபோது, "இன்று எனக்கு பிறந்தநாள், அதனால் எனக்கு பலர் வாழ்த்துகள் அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். சாலையைக் கடக்கும்போது கைப்பேசியைப் பயன்படுத்துவது தவறு தான். ஆனால் சில நேரங்களில் அந்த அவசரம் என் கண்ணை மறைத்து விடுகிறது," என்று வருந்தினார்.
இந்தியாவிலிருந்து சிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியரான ராம்குமார் மதியழகன், 27, "நான் இங்கு நலமாக இருந்தால்தான் என்னை நம்பி வாழும் குடும்பத்தினர் இந்தியாவில் நிம்மதியாக இருக்கமுடியும். சிங்கப்பூரில் என்னைப் பாதுகாத்துக்கொள்ள நான் மேற்கொள்ளவேண்டிய பல முயற்சிகளில் சாலையைக் கடக்கும்போது கைப்பேசியைப் பயன்படுத்தாமல் இருப்பதும் ஒன்று." என்றார்.
"கைப்பேசியில் மூழ்கி விட்டால் நம்மை சுற்றி என்ன நடக்கிறது, நமக்கு எதிரில் எந்த வாகனம் செல்கிறது போன்றவற்றை நாம் பார்ப்பதே இல்லை. இதனால் ஆபத்து நிலவினால் அது நாமே நமக்குத் தேடிக்கொள்வது போல், அரசாங்கம் இதற்கு ஏதாவது சட்டத்தை அமல்படுத்தினால்தான் மக்கள் விழிப்புடன் செயல்படுவார்கள்." என்று கருதினார் சுகாதார உதவியாளர் நடேஷ் பிரியா, 40.
வேலைப்பளுவினால் சில வேளைகளில் தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளில் கைப்பேசியைப் பயன்படுத்திக்கொண்டு சாலையைக் கடக்கவேண்டிய சூழல் அமைந்து விடுவதாக பொறியாளராக இருக்கும் 40 வயது செந்தில்குமார் ஷண்முகம் பகிர்ந்துகொண்டார்.
தகவல் தொழில்நுட்ப திட்ட நிர்வாகியாக இருக்கும் 42 வயது காஞ்சனா சதிஷ், "அரசாங்கம் இது குறித்து சட்டங்களை அமல்படுத்தவேண்டும், அல்லது சாலை சந்திப்புகளில் கைப்பேசியைப் பயன்படுத்தியவாறே சாலையைக் கடக்கக்கூடாது எனும் எச்சரிக்கைக் குறிப்புகளையும் நிலைப்படுத்தலாம்." என்று பரிந்துரைத்தார்.
சாலையைக் கடக்கும் நேரத்தில் கைப்பேசியைப் பயன்படுத்துவது தவறு என்ற விழிப்புணர்வு பொதுமக்களிடம் இருந்தாலும் அது சில நேரங்களில் அவசரத்தாலும் வேலை காரணத்தாலும் பாதசாரிகளின் கண்களைக் கட்டி விடுகிறது.
அரசாங்கம் சட்டங்களை அமல்படுத்தினாலும் அவற்றைப் பாதசாரிகள் கவனமாக பின்பற்றுவது சாத்தியமா என்பது கேள்விக்குறிதான். ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்கள்மீதும் தன்மீதும் அக்கறைகொண்டு உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்துகொள்ளாமல் பொறுப்பாக இருப்பது சிறந்தது.
அனுஷா செல்வமணி

