புக்கிட் பாத்தோக்கில் குடும்பதின விழா கோலாகலக் கொண்டாட்டம்

புக்கிட் பாத்தோக்கில் குடும்பதின விழா கோலாகலக் கொண்டாட்டம்

2 mins read
9b4e7002-f6b6-444d-871d-4d827ace1186
-

மோன­லிசா

சமூக பிணைப்­பை­யும் குடும்ப ஒற்­று­மை­யை­யும் போற்­றும் வண்­ணம் அண்­மை­யில் புக்­கிட் பாத்­தோக் அடித்­தள அமைப்­பு­க­ளின் ஏற்­பாட்­டில் நடை­பெற்ற குடும்ப தின விழா­வில் ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட அவ்­வட்­டாரவாசி­கள் கலந்­து­கொண்டு மகிழ்ந்­த­னர்.

குழந்­தை­க­ளுக்­கான வண்­ணம் தீட்­டும் போட்­டி­கள், சோப்பு தயா­ரிக்­கும் பயி­ல­ரங்கு, கோல­மிடு­தல், பல்­லாங்­குழி, காகி­தத்­தால் செய்­யக்­கூ­டிய ஓரி­கமி கலை பயி­ல­ரங்கு, கேளிக்கை விளை­யாட்­டு­கள் உள்­ளிட்ட பல்­வேறு அங்­கங்­கள் இவ்­வி­ழா­வில் அரங்­கே­றின. போட்­டி­களில் வெற்றி­பெற்ற மாண­வர்­க­ளுக்கு பரி­சு­களும் வழங்­கப்­பட்­டன.

மேலும் பூ கட்­டு­தல், முகத்­தில் வண்­ண­மி­டு­தல், ஆரோக்­கிய நட­னம், பாரம்­ப­ரிய சீனத் தேநீர் தயா­ரித்­தல், 'கீ செயின்' தயா­ரிக்­கும் பயி­ல­ரங்கு, தையல் போன்ற பெரி­ய­வர்­க­ளுக்­கான நிகழ்­வு­களும் இடம்­பெற்­றன.

பாப்­கார்ன், பஞ்­சு­மிட்­டாய் உள்­ளிட்ட உணவு வகை­களும் தனித்­தனி சாவ­டி­களில் விற்­ப­னைக்கு வைக்­கப்­பட்­டி­ருந்­தது குடி­யி­ருப்­பா­ளர்­க­ளால் பெரி­தும் வர­வேற்­கப்­பட்­டது. கூடு­த­லாக இசைக் கச்­சே­ரி­கள், நட­னங்­கள், சீனத் தெருக்­கூத்து ஆகிய கலை நிகழ்வு­களும் பார்­வை­யா­ளர்­களைக் கவர்ந்­தன.

கடந்த சனிக்­கி­ழமை காலை 9 முதல் இரவு 10 மணி வரை புக்­கிட் பாத்­தோக் சமூக மன்­றத்­தில் நடை­பெற்ற இந்­நி­கழ்­வில் குழந்­தை­கள் முதல் பெரி­ய­வர்­கள் வரை பல இன, பல சம­யங்­களைச் சேர்ந்த புக்­கிட் பாத்­தோக் குடி­யி­ருப்­பா­ளர்­கள் கலந்து­கொண்டு கொண்­டா­டி­னர்.

இந்­நி­கழ்­வில் சிறப்பு விருந்­தி­ன­ராகக் கலந்­து­கொண்ட புக்­கிட் பாத்­தோக் அடித்­தள அமைப்­பு­க­ளின் ஆலோ­ச­கர் முரளி பிள்ளை, "புக்­கிட் பாத்­தோக் பகு­தி­யில் உள்ள பல இன, பல சமய மக்­கள் ஒரே இடத்­தில் ஒன்­று­கூடி நாள் முழுவதும் கொண்­டா­டிய இந்­நி­கழ்வு அவர்­க­ளுக்­குள் பரஸ்­பர அன்­பை­யும் புரிந்­து­ணர்­வை­யும் வளர்க்­கும் அடித்­த­ள­மாக அமைந்­தது," என்று கூறி­னார்.

"சமூக மேம்­பாட்­டின் அடிப்­படைக் கூறான குடும்­பங்­கள் ஒற்­று­மை­யு­ட­னும் ஆரோக்­கி­யத்­து­ட­னும் இருக்கவேண்­டும். அவ்­வ­கை­யில் சிறி­ய­வர் முதல் பெரி­ய­வர் வரை குடும்­பத்­தில் உள்ள அனை­வ­ரும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த பல்­வேறு போட்­டி­க­ளி­லும் கலை நிகழ்­வு­க­ளி­லும் உற்­சா­கத்­து­டன் பங்­கு­கொண்டு மகிழ்ந்­த­னர்," என்று கூறி­னார் புக்­கிட் பாத்­தோக் சமூக மன்ற இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­கு­ழு­வின் தலை­வர் ராஜ­சே­க­ரன் பிர­கா­சம், 62.

தன் இரு பிள்­ளை­க­ளு­டன் இக்­கொண்­டாட்­டத்­தில் கலந்­து­கொண்ட இல்­லத்­த­ர­சி­யான மதி கோபால், 33, "பெரும்­பா­லும் கைப்­பேசி, தொலைக்­காட்சி என நேரத்தைச் செல­விட விரும்­பும் பிள்­ளை­க­ளுக்கு இது­போன்ற நிகழ்ச்­சி­கள் ஆரோக்­கி­ய­மான பொழு­து­போக்­கு­கள். படம் வரை­தல், வண்­ணம் தீட்­டு­தல், ரொட்டி தயா­ரித்­தல் போன்ற பல அங்­கங்­களில் என் பிள்­ளை­கள் பங்­கேற்று மகிழ்ந்­த­னர்," என்றார்.

"வார இறு­தி­யில் கொண்­டாடப்­பட்ட இவ்­வி­ழா­வில் மனைவி, பிள்­ளை­க­ளு­டன் கலந்து­கொண்­டது மிகுந்த மகிழ்ச்­சி­ய­ளிக்­கிறது. இப்­ப­கு­தி­யில் வசிக்­கும் பலரை சந்­தித்து நட்­பு­கொள்­ளும் வாய்ப்­பா­க­வும் இவ்­விழா அமைந்­தது," என்று கூறி­னார் வேதி­யல் பொறி­யா­ள­ரான ஈஸ்­வ­ரன் அம்­ப­லம், 42.