ஆண்டுதோறும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழு, பாலர் பள்ளித் தமிழாசிரியர்களுக்காகப் பயிலரங்குகளையும் கருத்தரங்கு களையும் ஏற்பாடு செய்து வருகிறது.
இவ்வாண்டு 'தமிழ்மொழி வகுப்பறைகளில் விழுமியங்கள், சமூக மனவுணர்வு சார்ந்த கற்றல், கற்றல் இயல்புகள் ஆகியவற்றை வெளிப்படையாகக் கற்பித்தல்' என்ற தலைப்பை ஒட்டி, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் இம்மாதம் 26ஆம் தேதி காலை 8.30 முதல் மதியம் 1 மணி வரை பயிலரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் நூற்றுக்கும் மேற்பட்ட பாலர் பள்ளித் தமிழாசிரியர்களும் கல்வியாளர்களும் இளம்பருவ வளர்ச்சிக்கான தேசியக் கல்விக் கழக மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இப்பயிலரங்கில் முனைவர் எஸ்.பி.ஜெயராஜதாஸ் பாண்டியன் முதன்மையுரையாற்றினார். இவர் கல்வி அமைச்சின் முன்னாள் தமிழ்மொழி முதன்மை ஆசிரியராவார்.
இணைப்பகிர்வு அங்கங்களை மக்கள் செயல் கட்சி (மசெக) சமூக அறநிறுவனத்தின் ஸ்பார்கல்டாட்ஸ் (செங்காங் ஈஸ்ட்) பாலர் பள்ளியைச் சேர்ந்த தமிழ்ஆசிரியர் திருவாட்டி நஸ்ரின் பானு சுராலி ஹபீப் முஹம்மத், மசெக சமூக அறநிறுவனத்தின் ஸ்பார்கல்டாட்ஸ் (காக்கி புக்கிட்) பாலர் பள்ளியைச் சேர்ந்த தமிழ்ஆசிரியர் திருவாட்டி கேசவன் பிந்து, கல்வி அமைச்சின் பாலர் பள்ளி, எங்கர் கிரீனில் பணியாற்றும் ஆசிரியர் திருவாட்டி ஷப்ரின் பேகம் ஷேக் லியாகத் அலி ஆகியோர் படைத்தனர்.
"நம் பிள்ளைகள் பல்லின, பன்மொழிச் சூழலில் வளர்கிறார்கள். இத்தகைய சூழலில் வளரும் நம் பிள்ளைகள் நமது தாய்மொழியை ஆர்வத்துடன் கற்க வேண்டுமெனில் அவர்களது வளர்ச்சியில் ஆசிரியர்கள் அர்ப் பணிப்புடன் முக்கியப் பங்காற்றவேண்டும்.
"குடும்பம், பள்ளி, சமூகம் ஆகிய முத்தரப்பினரும் இணைந்து செயலாற்றுவது மிக அவசியம். ஆகையால், தமிழாசிரியர்களுக்கு ஆதரவு நல்கவே தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழு பல்வேறு ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது," எனக் கூறினார் இப்பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்த தமிழ்மொழி கற்றல்வளர்ச்சிச் செயற்குழு உறுப்பினர் திருவாட்டி கௌரி சத்தியமூர்த்தி.
முதன்மை உரையிலிருந்தும் பகிர்வுகளில் இருந்தும் பல முக்கியமான உத்திகளைக் கற்றுக்கொண்டதாகக் கல்வி அமைச்சின் ஃபர்ஸ்ட் தோ பாயோ பாலர் பள்ளித் தமிழாசிரியர் திருமதி ஆனந்தவள்ளி குறிப்பிட்டிருந்தார்.
இளம்பருவ வளர்ச்சிக்கான தேசியக் கல்விக் கழகத்தில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர் திரு ஜெராட் அல்வின், பயிலரங்கின் வழியே கற்றுக்கொண்ட உத்திகளும் அறிந்துகொண்ட தகவல்களும் அவர் செப்டம்பர் மாதத்தில் பாலர் பள்ளி ஆசிரியராகப் பொறுப்பேற்பதற்கு அவரை ஆயத்தப்படுத்தியதாகக் கூறினார்.
ஜூன் மாதம் 22, 23ஆம் தேதிகளில் பாலர் பள்ளித் தமிழாசிரியர்களுக்காக உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையமும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும் 'கதை மற்றும் பாவைவழி மொழியும் பண்பாடும்' என்ற பயிலரங்கை நடைத்தவிருப்பதாகச் செயற்குழுத் தலைவர் திருவாட்டி மலர்விழி அஞ்சப்பன் தெரிவித்தார்.

