தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து கடைசி நாள் ஆட்டங்கள் ஒளிபரப்பில் இடையூறு
இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து 2022/23 பருவத்தின் கடைசி நாள் ஆட்டங்களின் முதல் 25 நிமிடங்களைக் காண முடியாததால் சிங்கப்பூர் ரசிகர்கள் ஆத்திரமும் விரக்தியும் அடைந்தனர்.
குறிப்பாக, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒளிபரப்பில் ஏற்பட்ட பிரச்சினையால் மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல் குழுக்களின் ரசிகர்கள் தத்தம் குழுக்களின் ஆட்டங்களின் தொடக்கப் பகுதியைக் காண முடியவில்லை.
மான்செஸ்டர் யுனைடெட் குழு, ஃபுல்ஹமை எதிர்த்தும் லிவர்பூல் குழு, சௌத்ஹேம்டனை எதிர்த்தும் விளையாடின.
'ஸ்டார்ஹப் டிவி+' வாடிக்கையாளர்கள், அதன் 'ஓடிடி' சேவையான 'பிரிமியர்+' செயலியைத் திறக்க முடியவில்லை. தொலைக்காட்சியில் தவறான ஆட்டங்கள் காண்பிக்கப்பட்டன.
யுனைடெட் - ஃபுல்ஹம் ஆட்டத்திற்குப் பதிலாக, முந்திய வாரம் இடம்பெற்ற யுனைடெட் - செல்சி ஆட்டம் ஒளிபரப்பப்பட்டது.
அதேபோல, இன்னோர் ஒளிவழியில் லிவர்பூல்-சௌத்ஹேம்டன் ஆட்டத்திற்குப் பதிலாக, லிவர்பூல் - ஆஸ்டன் வில்லா மோதிய முந்திய ஆட்டம் காட்டப்பட்டது.
இதனால் விரக்தியடைந்த ஸ்டார்ஹப்+ வாடிக்கையாளர்கள் பலரும் சமூக ஊடகம் வழியாக தங்களது ஆதங்கத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, இரவு 1 மணியளவில் தனது ஃபேஸ்புக் பக்கம் வழியாக ஸ்டார்ஹப் நிறுவனம் மன்னிப்பு கோரியது.
"பிரச்சினை சரிசெய்யப்பட்டு, நள்ளிரவிற்குமுன் மீண்டும் பிரிமியர்+ சேவை வழக்கநிலைக்குத் திரும்பியது. செயற்கைக்கோள் ஒலிபரப்புப் பிரச்சினை காரணமாக சேவையில் ஏற்பட்ட அசௌகரியத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்," என்று அந்நிறுவனம் தெரிவித்தது.
பிரேசில் வீரர் ரொபர்ட்டோ ஃபிர்மினோ, லிவர்பூல் குழு சார்பில் விளையாடிய கடைசி ஆட்டத்தைக் காண ஆர்வத்துடன் இருந்தார் அக்குழு ரசிகர் முகம்மது சைஃபுதீன், 31. ஆயினும் ஒளிபரப்பில் ஏற்பட்ட பிரச்சினையால் ஃபிர்மினோ 14ஆம் நிமிடத்தில் அடித்த கோலை அவரால் காண முடியவில்லை.
இதனால் கடும் விரக்தி அடைந்ததாகக் கூறிய திரு சைஃபுதீன், "முதல் 25 நிமிட ஆட்டத்தைக் காண முடியாததால் எனக்கு 25 விழுக்காடு கட்டணக்கழிவு தருவார்கள் என நம்புகிறேன்," என்றார்.
மான்செஸ்டர் யுனைடெட் - ஃபுல்ஹம் மோதிய ஆட்டத்தைக் காண்பதற்காக தம் நண்பர்கள் சிலரையும் தமது இருப்பிடத்திற்கு வரவழைத்திருந்தார் யுனைடெட் குழு ரசிகரான லவேந்திரன் சந்திரமோகன், 29.
ஆனால், ஆட்டம் தொடங்கியும் அதனைக் காண முடியாததால் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் தாங்கள் தவித்ததாக திரு லவேந்திரன் சொன்னார்.
"அந்த ஆட்டம் குறித்த அண்மைய தகவல்களை டுவிட்டரில் கண்டவாறே எவர்ட்டன் - போர்ன்மத் குழுக்கள் மோதிய ஆட்டத்தைப் பார்க்க வேண்டியதாயிற்று," என்றார் அவர்.
இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் இறுதி நாளில் ஒளிபரப்பில் இடையூறு ஏற்பட்டது இது முதன்முறையன்று.
கடந்த 2012/23 பருவத்தின் இறுதி நாளன்று ஏற்பட்ட ஒளிபரப்புப் பிரச்சினையால் ஏறக்குறைய 115,000 மயோ டிவி வாடிக்கையாளர்கள் சிறிது நேர ஆட்டத்தைக் காண முடியாமல் போனது. அப்போது, பரபரப்பான ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களில் இரண்டு கோல்களைப் போட்டு, பட்டம் வென்று சாதித்தது மான்செஸ்டர் சிட்டி குழு.
2012 மே 13ஆம் தேதியன்று ஒளிபரப்பில் ஏற்பட்ட இடையூறுக்காக சிங்டெல் நிறுவனத்திற்கு $180,000 அபராதம் விதிக்கப்பட்டது.