இருளில் வாசித்ததற்காக நீங்கள் திட்டு வாங்கியது உண்டா? அப்படியென்றால், கண் ஆரோக்கியம் குறித்து உங்களுக்கு சரியாக தெரியாமல் இருக்கலாம்.
அமெரிக்காவில் பத்தில் நால்வருக்கு கண்பார்வையை இழக்கும் அபாயம் நிலவுவதாக நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு மையம் கூறுகிறது.
ஆனால், பல கண் பிரச்சினைகளும் குணப்படுத்தப்படக்கூடியவை அல்லது தவிர்க்கப்படக்கூடியவை என்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் கண் மருத்துவத் துறை உதவிப் பேராசிரியர் ஜோஷுவா எர்லிக் கூறுகிறார்.
கண் ஆரோக்கியம் குறித்த பொதுவான நம்பிக்கைகள் பற்றியும் நிபுணர்களின் கருத்துகள் பற்றியும் இங்கு பார்க்கலாம்.
1. மின்னணுச் சாதனங்களை அல்லது நூலை மிக நெருக்கமாக பார்ப்பது கண்களுக்கு நல்லதல்ல
சரி. நீண்டநேரமாக மிக அருகில் பொருள்களைப் பார்ப்பது கண்களுக்கு நல்லதல்ல என்று டாக்டர் ஸு சியாவ்யிங் கூறுகிறார்.
குறிப்பாக, சிறுவர்கள் அவ்வாறு செய்யும்போது கருவிழி நீளமடைந்து, காலப்போக்கில் கிட்டப்பார்வை ஏற்படக்கூடும்.
கண்களில் அழுத்தம் ஏற்படுவதைக் குறைக்க, 20-20-20 விதியைப் பின்பற்றுமாறு டாக்டர் ஸு பரிந்துரைக்கிறார். இருபது நிமிடங்களுக்கு நூல் வாசித்த பின்னர், குறைந்தது 20 வினாடிகளுக்கு குறைந்தது 20 அடி தூரத்தில் எதையாவது பார்க்க வேண்டும்.
2. இருளில் வாசிப்பதால் கண்பார்வை மோசமடையலாம்
தவறு. எனினும், போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் கண்களுக்கு அருகில் நூலை அல்லது கைக்கணினியை வைத்தால், மேற்கூறப்பட்ட அபாயங்கள் அதிகரித்து கண்களுக்கு அழுத்தம் ஏற்படக்கூடும்.
இதனால் தலைவலி ஏற்படக்கூடும் என்பதுடன் கவனம் செலுத்துவதற்கு சிரமமாகலாம். ஆனாலும், இவை தற்காலிகமான அறிகுறிகளே என்கிறார் டாக்டர் ஸு.
3. வெளிப்புறத்தில் கூடுதல் நேரம் செலவிடுவதால் கண்பார்வைக்கு நல்லது
சரி. வெளிநடவடிக்கைகளில் ஈடுபடுவதால் கிட்டப்பார்வை ஏற்படும் சாத்தியம் குறைவு என்பதை சிறார்களை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட சில ஆய்வு முடிவுகள் காட்டுவதாக கலிஃபோர்னியா பர்க்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் மாரியா லியு கூறுகிறார்.
வெளிச்சமான சூழல், 'டோப்பமின்' எனும் ரசாயனத்தை விழித்திரை உற்பத்தி செய்ய ஏதுவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் கருவிழி நீளமடையும் சாத்தியம் குறைவாக இருக்கும்.