தொண்டூழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இம்மாதம் 27ஆம் தேதி தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் 'கவிமாலை கூடல் 276' எனும் மாதாந்திர நிகழ்வு நடைபெற்றது.
'சங்கத்தில் பாடாத கவிதை' எனும் தலைப்பில் முனைவர் மன்னை க.இராஜகோபாலன் சிறப்புரையாற்றினார். கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி மற்றும் பல பாடலாசிரியர்கள், கவிஞர்களின் திரைப்படப் பாடல்களை அழகாக பாடியும் அதனை விளக்கியும் அவர் பேசினார்.
'படித்ததில் பிடித்தது' அங்கத்தில் கவிஞர்களும் பார்வையாளர்களும் தங்களுக்குப் பிடித்த கவிதைகளை நிகழ்வில் பகிர்ந்தனர். பின்னர், கார்ப்பரேஷன் தொடக்கப்பள்ளி மாணவர்கள் இளையர் முரசில் வெளிவந்த கவிதைகளை வாசித்தனர்.
அதனைத் தொடர்ந்து மே மாதக் கவிதைப் போட்டியின் தலைப்பு 'இரயில் பயணங்கள்' போட்டிக் கதைகளைத் தேர்வுசெய்து அதன் கருத்துரையை வழங்கினார் திரு A.T. பிள்ளை. பின்பு போட்டிக் கவிதைகளை கவிஞர்கள் வாசித்தும் அதனையொட்டி சிறு கலந்துரையாடலும் நடைபெற்றது.
ஏப்ரலில் நடந்தேறிய தமிழ்மொழி விழா நிகழ்வில் 'அழகு' என்ற கருப்பொருளில் பொதுப் பிரிவுக்கான கவிதைப் போட்டியை கவிமாலை நடத்தியது. அதில் வெற்றிபெற்ற முதல் மூன்று கவிதைகளின் கருத்துரையை திரு மாரிமுத்து வழங்கினார்.
மே மாத கவிதைப் போட்டியின் வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசான 50 வெள்ளியை திரு ம.சரவண குமாரும் இரண்டாம் பரிசான 30 வெள்ளியை திரு தினகரபாண்டியன், திரு மு.செ.பிரகாஷ், திரு இராம நாச்சியப்பன் ஆகியோரும் மூன்றாம் பரிசான 20 வெள்ளியை திருமதி தேன்மொழி, திரு ரெங்கநாதன் ஷ்யாம்குமார், திருமதி சங்கீதா ஆகியோரும் பெற்றுக்கொண்டனர். மரபுக் கவிதைக்கான முதல் பரிசான 50 வெள்ளியை திரு வெற்றிச்செல்வன் பெற்றார்.
கவிமாலையின் முகநூல் படக்கவிதைப் போட்டிக்கான புத்தகப் பரிசை திருமதி தேன்மொழி, திருமதி வெண்ணிலா, திரு ம.சரவண குமார், திருமதி ரத்தினாம்பிகை ஆகியோர் பெற்றனர்.
திரு ம.சரவண குமார் நிகழ்ச்சியை நெறியாளுகை செய்தார்.
அடுத்த ஜூன் மாத கவிமாலையின் போட்டிக் கவிதைக்கான தலைப்பு 'வெயிலோடு உறவாடி'. போட்டிக் கவிதைகளை அனுப்ப வேண்டிய இறுதி நாள் ஜூன் 18ஆம் தேதி. அடுத்த கவிமாலை நிகழ்வு ஜூன் 24ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும்.

