அனுஷா செல்வமணி
கோடைக்கால விடுமுறையும்
வந்துவிட்டது. கொள்ளைநோய் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்ட இந்தச் சூழலில் அனைவரும் பல நாள் காத்திருப்புக்குப் பிறகு வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள ஆர்வமாக இருப்பார்கள்.
இந்நிலையில் விமானப் பயணச்சீட்டு விலை அதிகரித்து இருக்கும் பட்சத்தில் பயணிகள் வேறு சில வழிகளில் தங்கள் செலவுகளை மிச்சப்படுத்தலாம்.
வெளிநாட்டு பயணங்களில் செலவுகளை மிச்சப்படுத்துவது ஒரு புறம் இருந்தாலும் சாமர்த்தியமாக பயணத்தை மேற்கொள்ளும் விதங்களையும் நாம் தெரிந்துகொண்டால் பயணம் சுமுகமாகவும் மறக்கமுடியாத நிகழ்வாகவும் அமையும்.
வெளிநாட்டுப் பயணத்திற்கு முக்கியமாக கொண்டு செல்லவேண்டிய பொருள்களில் கடவுச்சீட்டும் ஒன்று. மறதியோ அல்லது அயல் நாட்டில் துரதிர்ஷ்டவசமாக திருட்டு நடந்து விட்டாலோ மீண்டும் சிங்கப்பூருக்குத் திரும்புவுது குதிரைக் கொம்பாகி விடும்.
அதனால் எப்பொழுதும் வெளிநாடுகளுக்குச் செல்லும் முன் நம் கடவுச்சீட்டை ஊடுகதிர் படம் எடுத்து அதை நம் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டால் எந்த சூழலிலும் நாம் பாதுகாப்புடன் பயணிக்க முடியும்.
சிங்கப்பூரில் விலைவாசி அதிகரித்து இருக்கும் நிலையில் பலர் வெளிநாட்டுக்குச் செல்லும் போதெல்லாம் அதிகப் பொருள்கள் வாங்குவது உண்டு.
துணிமணிகள், முக ஒப்பனைப் பொருள்கள், காலணிகள், கைப்பைகள் என பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
வாங்கும் பொருள்களுக்கு நம் பயணப் பெட்டியில் முதலில் இடம் இருக்க வேண்டும். அதற்கு சிங்கப்பூரிலிருந்து செல்லும் போது நாம் கொண்டு செல்லவிருக்கும் துணிகளை உருட்டி மடித்து வைத்தால் பெட்டியில் அதிக இடத்தை மிச்சப்படுத்தலாம்.
அமெரிக்கா போன்ற தொலைவான நாடுகளுக்குச் சென்றால் கால அளவின் வேறுபாடு காரணத்தினால் நமக்கு பயணக் களைப்பு
வந்துவிடும்.
வெளிநாட்டின் நேரம் நமக்கு வித்தியாசப்படும். அச்சமயத்தில் தூக்கம் நம்மைக் காந்தம் போல இழுக்கும். உடனே தூங்கி விடாமல் உடற்பயிற்சியை மேற்கொண்டால் களைப்பு கலைந்துவிடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
வெளிநாட்டுக்குச் சென்று சிங்கப்பூர் திரும்பியதும் நம் நினைவில் என்றும் இருப்பது நாம் விடுமுறையின் போது அங்கு செலவிட்ட நேரமும் சென்ற இடங்களுமே. நினைவுகளை நாம் புகைப்படங்கள் மூலம் பதிவில் வைத்திருக்கிறோம்.
அவ்வாறு தொட்டதுக்கெல்லாம் கைப்பேசியை நம்பி வாழும் உலகத்தில் கைப்பேசியின் மின்கல ஆயுளை முடிந்த அளவில் மிச்சப்படுத்துவது சிறந்தது.
தங்கும் விடுதிக்கு வந்த
வுடன் கைப்பேசியை குளிரான பகுதியில் வைத்தால் மின்கல ஆயுள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
தொலைவான நாடுகளுக்குப் பயணிக்கும் நேரங்களில் வேறொரு நாட்டில் இறங்கி மீண்டும் அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு நாம் சேரும் நாட்டிற்கு செல்ல வேண்டி இருக்கும்.
வேறொரு நாட்டில் இருக்கும் போது அதிக நேரம் செலவிடும் விதமாக விமானத்தைப் பதிவு செய்தால் நாம் நேரத்தை அந்நாட்டை சுற்றி பார்க்கும் விதத்தில் செலவிடலாம்.
பலர் பயணக் காப்புறுதியை நிராகரிப்பதுண்டு. அவர்களின் கடன் அட்டை பல பயன்களை அளிப்பதால், பயணக் காப்புறுதியின் அவசியம் சிலருக்குப் புரிவதில்லை. திடீரென பயண திட்டங்களில் மாற்றம் ஏற்பட்டால் பயண காப்புறுதி அபரிமிதமாக உதவும்.
நீடித்த நிலைத்தன்மையை நோக்கி செல்லும் உலகில் வாழும் நாம் நம் வெளிநாட்டு பயணங்களிலும் காப்புறுதியைக் கட்டாயம் எடுத்திருக்கவேண்டும். முடிந்த அளவுக்கு இரு சக்கர வண்டி, நடக்கும் சுற்றுப்பயணங்களை தேர்ந்தெடுப்பது, இயந்திர படகை எடுப்பதற்குப் பதிலாக படகோட்டுவது, வெளிநாட்டில் பொது போக்குவரத்து மூலம் பயணிப்பது போன்ற வழிகளில் உங்கள் விடுமுறையை இனிமையாகக் கழிக்கலாம்.
இவ்வாறு பயணக் குறிப்புகள் அடுக்கிக்கொண்டே போனாலும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு மீண்டும் சிங்கப்பூர் திரும்பும்போது மன நிறைவோடு வர வேண்டும்.

