சிங்கப்பூர்த் தமிழறிஞர் திரு சுப. திண்ணப்பனார் துணைத் தலை வராக அங்கம் வகித்த மலேசியப் பேராசிரியர் டான்ஸ்ரீ டி.மாரிமுத்து தலைமையிலான பன்னாட்டு உறுப்பினர்களைக் கொண்ட மாநாட்டுக்குழு 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை இந்த ஆண்டு ஜூலைத் திங்கள் 21, 22, 23 ஆகிய மூன்று நாள்களில் மலேசியாவின் தலைநகரம்
கோலாலம்பூரில், யுனிவர்சிட்டி மலாயாவுடன் இணைந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சார்ஜா லிங்கன் தொழில் மேலாண்மைப் பல்கலைக்கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், அண்ணாமலை, மதுரை காமராசர், மனோன்மணியம் சுந்தரனார், காரைக்குடி அழகப்பா போன்ற 15 பல்கலைக் கழகங்களின் ஆதரவுடன் இந்த மாநாடு பெரிய அளவில் நடைபெறவிருக்கிறது.
மாநாட்டை மலேசியாவின் பிரதமர் அன்வார் இப்ராகிம் தொடங்கிவைக்கலாம் என்றும் தமிழக அரசின் ஆதரவு கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
மாநாட்டில் கலந்துகொள்வதாகத் தமிழகம் உள்பட அனைத்து நாடுகளின் முக்கியமான அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள், ஆர்வலர்கள், பல்வேறு அமைப்பினரும் உறுதி யளித்து வருகின்றனர்.
சிங்கப்பூரிலிருந்து சிலர் மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகள் படைத்து சிங்கைக்குப் பெருமை சேர்க்க உள்ளனர்.
இது தொடர்பாக ஏற்கெனவே சிங்கையில் பெரும்பான்மையான தமிழ் அமைப்புகள் 28.3.2023ல் ஒன்றுகூடி முடிவெடுத்தபடி திரு மு. அரிகிருஷ்ணன், திரு மா. அன்பழகன் ஆகிய இருவரின் கூட்டு முயற்சியால் இதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழகத்திலிருந்து, மாநாடு தொடர்பாக மலேசியாவிற்குச் சென்று ஆய்வு செய்துவிட்டு சிங்கப்பூருக்கு வருகை தரவிருக்கும் மாநாட்டின் பொதுச்செயலாளர் திரு நந்தன் மாசிலாமணியுடன் நாளை 11ஆம் தேதி ஞாயிறன்று காலை 10 மணிக்கு கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
எண் 1, பீட்டி சாலையில் அமைந்துள்ள சிண்டாவின் மூன்றாம் தளத்தில் திரு ஆர். தினகரனின் வழிகாட்டுதலுடன் நடைபெறவிருக்கும் அந்நிகழ்வுக்கு வர விரும்புவோர் நேரடியாக வரலாம்.
மாநாட்டிற்கு ஜூலை 20ஆம் தேதி மதியம் சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூருக்கு தரைவழியாகப் போய்ச் சேருவதாகவும் மாநாடு முடிந்தவுடன் அதேபோல் திரும்பவும் பயணத்திற்கான இலவச ஏற்பாடுகளை மாநாட்டு ஏற்பாட்டாளர்களே செய்து தருவதாகவும் தற்போது அறிவித்துள்ளனர்.
அதுதவிர மாநாட்டில் பங்கேற்போருக்கு நான்கு நாள் தங்கும் விடுதி, உணவு, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளைச் செய்துதர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மாநாட்டுப் பதிவுக் கட்டணமான யுஎஸ் $80 உள்ளிட்ட மொத்தம் 330 வெள்ளி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர் முன்கூட்டியே பதிவுசெய்து கொள்ளவும்.
முன்தொகையாக ஜூன் 30க்குள் S$100யை அன்பழகனின் கைப்பேசி எண்ணுக்கு 90053043 'பேநவ்' மூலம் அனுப்பிவிட்டு வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவிக்கவும்.