ஒரு மணி நேரத்தில் 650 புல்-அப் செய்து தேசிய சாதனை படைத்துள்ளார் சிங்கப்பூர் ராணுவப் படையின் மின்னல் படைப் பிரிவைச் சேர்ந்த லெஃப்டினண்ட் கர்னல் ராபின் லீ.
புல்-அப் என்பது கரங்களின் பலத்தைப் பயன்படுத்தி புல்-அப் கம்பிக்கு மேல் முகவாய்க்கட்டையைக் கொண்டு செல்வதாகும். ஒரு புல்-அப் செய்வதே பலருக்கு சவாலானதாக இருக்கிறது.
ஆனால், 48 வயது லீ அதை மிக எளிதில் செய்துவிடுகிறார். மழை பெய்தாலும் கடுமையான வெயில் சுட்டெரித்தாலும் ஒரு நாள்கூட புல்-அப் பயிற்சியை அவர் தவறவிடுவதில்லை. அதற்கு ஏதுவாக அவர் தமது படுக்கையறை கதவுச் சட்டத்தில் புல்-அப் கம்பியைப் பொருத்திஉள்ளார். நாள்தோறும் அவர் மேற்கொண்ட புல்-அப் பயிற்சி தற்போது அவரைச் சாதனை வீரராக மாற்றிஉள்ளது.
"மின்னல் படையைச் சேர்ந்த மூத்த வீரர்கள் தங்களது மிகச் சிறந்த உடற்தகுதி, விடாமுயற்சியைக் கொண்டு பல சாதனைகளைப் படைத்துள்ளனர். அவர்கள் எனக்கு முன்மாதிரியாக உள்ளனர்," என்றார் லெஃப்டினண்ட் கர்னல் லீ. ஒரு மணி நேரத்தை 60 கட்டங்களாக அவர் பிரித்து ஒவ்வொரு நிமிடத்திலும் 12 புல்-அப் செய்ய இலக்கு கொண்டிருந்தார். "ஒவ்வொரு முறையும் புல்-அப் செய்தபோது மூச்சுத்திணறியது. ஒரு மணி நேரத்தை 60 கட்டங்களாகப் பிரித்தேன். ஒரு செட்டை முடித்து கீழே இறங்கியதும் சிறிது நேரத்திலேயே மீண்டும் புல்-அப் செய்ய வேண்டியிருந்தது," என்றார் திரு லீ. சாதனை படைக்க தாம் மேற்கொண்ட முயற்சியின் கடைசி பத்து நிமிடங்களில் தாங்க முடியாத வலியும் கைகளில் கொப்பளங்களும் ஏற்பட்டதாக இரண்டு பெண் பிள்ளைகளுக்குத் தந்தையான திரு லீ கூறினார். நேரம் ஆக ஆக சோர்வடைந்ததாகவும் சில புல்-அப் முயற்சிகளின்போது தமது முகவாய்க்கட்டை கம்பிக்கு மேல் செல்லாததால் அவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
ஆனால் தாம் மேற்கொண்ட கடுமையான பயிற்சி தமக்கு வெற்றியைத் தேடித் தந்ததாக அவர் கூறினார். சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் திரு லீயின் சாதனை இடம்பிடித்துள்ளது. இத்தகைய சவால்களை எதிர்கொள்ள இளையர்களுக்குத் தமது செயல் ஊக்குவிக்கும் என்று நம்புவதாக அவர் கூறினார்.

