தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகம் ஓராண்டுக்கும் மேலாக வெற்றிகரமாக இணையம் வழி நடத்தி வரும் இலக்கியவனம் நிகழ்ச்சி, தன் அடுத்தகட்ட மைல்கல்லாக கடந்த மாதம் 21ஆம் தேதி மாலை 5 மணிக்கு 100 விக்டோரியா சாலையில் அமைந்துள்ள தேசிய நூலகத்தில் முதன்முறையாக மேடையில் அரங்கேறியது.
'பட்டினப்பாலை' என்ற தலைப்பில் பார்வையாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் புதுப்பொலிவுடன் இம்மாத இலக்கியவனம் நிகழ்ச்சி நடந்தேறியது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திரு பொன் சுந்தரராசு பங்கேற்க, முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.
தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் திரு ஹரிகிருஷ்ணன் முத்துச்சாமியும் முனைவர் ந. செல்லக்கிருஷ்ணனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் 'பட்டினப்பாலை' குறித்து தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத்தின்கீழ் இயங்கும் பேச்சாளர் மன்றங்களைச் சேர்ந்த நான்கு பேச்சாளர்களும் மன்றத்தைச் சாராத பொதுப் பேச்சாளர் ஒருவரும் உரையாற்றினர்.
அத்தோடு நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக பட்டினப்பாலை சார்ந்த 'என் கேள்விக்கென்ன பதில்?' என்ற அங்கம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. கேள்விக்குச் சரியான விடைஅளித்த பார்வையாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும், கடந்த ஓராண்டாக இணையம் வழியிலான தமிழ் இலக்கியவனம் நிகழ்ச்சியில் கடைச்சங்கக் காலத்தில் இயற்றப்பட்ட பதினெண்மேல்கணக்கு நூல்களான, பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை உள்ளடக்கிய நூல்களின் தலைப்பில் பல நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.