பிறரை மன்னிக்கும் பக்குவம் இருந்தால் அது நமது மனநலனுக்குப் பலனளிக்கலாம்; அண்மையில் நடைபெற்ற ஓர் ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் 4,598 பேரைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஐந்து நாடுகளைச் சேர்ந்த ஆய்வின் பங்கேற்பாளர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். பங்கேற்பாளர்களில் சிலருக்கு 'மனிப்புப் பயிற்சி நூல்' (ஃபொர்கிவ்னஸ் வொர்க்புக்) வழங்கப்பட்டது.
மனதைப் புண்படுத்திய சம்பவத்தை எழுதி அதை வெவ்வேறு கோணங்களில் அலசுவது போன்ற பயிற்சிகள் அதில் இடம்பெற்றன.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு பயிற்சி நூலில் இருந்த பயிற்சிகளை முடித்தோரிடையே மன்னிக்கும் பக்குவம் அதிகரித்திருந்தது. மேலும், மனக்கவலை, மன அழுத்தம் போன்றவற்றுக்கான அறிகுறிகள் அவர்களிடையே குறைவாக காணப்பட்டது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மன்னித்தல் தொடர்பிலான மாநாாட்டில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. அச்சிடுவதற்காக முடிவுகள் தற்போது சரிபார்க்கப்படுகின்றன. மன்னிப்பு என்பது நமக்கு இழைக்கப்பட்ட தவறை மறப்பதன்று. அதை நியாயப்படுத்துவதும் அல்ல.
சம்பந்தப்பட்டவருடன் மீண்டும் முன்பைப்போல் பழகவும் தேவையில்லை.
மன்னிப்பது என்றால் என்ன? தவறு இழைத்தவருக்கு எதிராக இருக்கக்கூடிய வெறுப்பை அகற்றுவதாகும்.
காலப் போக்கில் மன்னிக்கும் பக்குவம் வளருமா? ஆம். இது சாத்தியம். பொதுவாகவே ஒருவருடன் எப்படிப் பழகுவது என்று சிந்திக்கலாம்.
நிச்சயமாக வாழ்க்கையில் மீண்டும் மனது புண்படும் சூழல் எழும். முன்பு பெற்ற அனுபவத்தால் அப்போது மன்னிக்கும் பக்குவம் நம்மிடையே அதிகம் இருக்குமா என்பதை யோசித்துப் பார்க்கலாம்.
நியூயார்க் டைம்ஸ், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆகியவற்றில் வெளியான கட்டுரையின் சுருக்கம் இது.

