மனநலப் பாதிப்புகளுக்கு உள்ளான தனிநபர்களுக்குக் கைகொடுத்துவரும் இம்பார்ட் அமைப்பு, இம்முறை குடும்பங்களை ஒன்றிணைக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் தேசிய குடும்ப வாரத்தை ஒட்டிய 'குடும்ப, சமூக கொண்டாட்டம்' என்ற இருநாள் நிகழ்ச்சியை அமைப்பு நடத்தியது.
இம்மாதம் 10, 11ஆம் தேதிகளில் நடந்தேறிய இந்நிகழ்ச்சியில் 900க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். நார்த்பாயிண்ட் கடைத்தொகுதிக்கு அருகிலுள்ள வெளிப்புற இடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, "தலைமுறைகளை இணைத்தல், நினைவுகளை உருவாக்குதல்" என்ற கருப்பொருளைக் கொண்டிருந்தது.
சூ சீ மனிதநேய இளையர் நிலையத்தில் ஒன்பது சமூகப் பங்காளிகள், பல்வேறு சாவடிகளை அமைத்து நிகழ்ச்சிகளை நடத்தின. படைப்பூக்கம், சுறுசுறுப்பு, பலம் ஆகிய பண்புகளை வளர்க்கும் நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் இந்நிகழ்ச்சியைச் சிறப்பித்தார். உதவி தேவைப்படுவோருக்குக் கைகொடுக்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதைச் சுட்டிய திரு சண்முகம், சமுதாயத்தை உயர்த்த முனையும் இம்முயற்சி பாராட்டுக்குரியது என்று கூறினார்.
குடும்பமும் நண்பர்களும் ஒருசேர வளரும்போது சமூகங்கள் வலுவடைவதாக நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் நரசிம்மன் திவாசிகமணி சொன்னார்.
கி. ஜனார்த்தனன்

