'பைக்கர்' குழுவின் நிதி திரட்டும் முயற்சிகள்

'பைக்கர்' குழுவின் நிதி திரட்டும் முயற்சிகள்

2 mins read
b451bbd8-0cad-4501-ae4d-996d93289855
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

"பைக்­கர் (மோட்­டார்­சைக்­கி­ளோட்­டப் பிரி­யர்­கள்) வாழ்க்­கை­முறை நமக்கு பொழு­து­போக்காக மட்டுமின்றி மற்­ற­வர்­க­ளுக்கு உத­விக் கரம் நீட்­டும் வாய்ப்­பாகவும் அமைந்­துள்­ளது" என்று சிங்­கப்­பூ­ரில் பைக்­கர் வாழ்க்­கை­மு­றை­யை­யும் சமூக அமைப்­பு­க­ளுக்கு நிதி திரட்­டும் முயற்­சி­க­ளையும் இணைத்துச் செயல்­படும் 'ஸ்கல்ஸ் ஆஃப் நொக்‌ஸ்' குழுவை ஆரம்­பித்த அல்ட்­ரிச் ஜெய் கிஷன், 29, கூறி­னார்.

அமெ­ரிக்கா, ஐரோப்­பிய நாடு­களில் பிர­ப­ல­மான பைக்­கர் வாழ்க்­கை­மு­றையை சிங்­கப்­பூ­ருக்கு ஏற்ப மாற்றி சக ஆர்வலர்களுடன் 2019ஆம் ஆண்­டில் இக்­கு­ழுவை ஆரம்­பித்­தார் ஜெய். ஒவ்­வொரு வார­மும் குழு­வினர் மோட்டார்சைக்கிளில் சிங்­கப்­பூர், மலே­சி­யாவை சுற்றி வரு­வார்­கள்.

மோட்­டார்­சைக்­கிள்­களை பழு­து­பார்ப்­பது, 'லெதர்' ஜாக்­கெட் அணிந்து பலவகையான மோட்­டார்­சைக்­கிள்­களை ஒட்டி, ஒரு­வ­ருக்கு ஒரு­வர் ஆத­ர­வ­ளிப்­பது போன்ற கார­ணங்­க­ளுக்­காக இக்­குழு ஆரம்­பிக்­கப்­பட்­டது என்­றார் ஜெய். பொழு­து­போக்­காக தொடங்­கப்­பட்ட இக்­கு­ழு­விற்கு மற்­ற­வர்­க­ளுக்­கு உதவி செய்யும் வாய்ப்­பு­களும் கிடைத்­தன.

குழந்­தை­கள் தொடர்­பான சமூக அமைப்­பில் ஆலோ­ச­க­ராக பணிபுரி­யும் ஜெய் தன்­னால் முடி­யும் வரை சமூ­கத்­தில் பின்தங்கியவர்களுக்கு இந்தக் குழு உதவ முடி­யும் என்று கண்­ட­றிந்­தார்.

"குழு­வில் இருக்­கும் நாங்­கள் வாழ்க்கை­யில் பல சவால்­க­ளை­யும் பிரச்­சி­னை­களையும் தாண்டி வந்­துள்­ளோம். நமக்கு கிடைக்­காத உத­வியை இப்­போது மற்­ற­வர்­க­ளுக்கு அளிக்­கும் வாய்ப்பு நமக்கு கிடைத்­துள்­ளது," என்­றார் ஜெய். சென்ற மாதம் பார்­கின்­சன்ஸ் நரம்­பி­யல் நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நிதி திரட்ட பார்­கின்­சன்ஸ் அமைப்­பு­டன் ஒன்­று­சேர்ந்து இன்ஸ்­டா­கி­ராமில் ராஃபிள் போட்டியை (ஒரு வகை அதிர்ஷ்டக் குலுக்கு) ஒன்றை நடத்­தி­னர்.

தெரிந்­த­வர் இந்­நோ­யால் பாதிக்­கப்­பட்­ட­தைக் குழு உறுப்­பி­னர் ஒரு­வர் அறிந்­திருக்­கி­றார். அவர் மனம் உடைந்­து­போன நிலை­யில் இருந்­த­போது தங்களுக்கு நிதி திரட்ட எண்­ணம் தோன்­றி­ய­தா­கக் கூறி­னார் குழு­வின் மற்­றொரு நிறு­வ­ன­ரான சவின் நாயர்.

"குழுவில் உள்ளவர்களை நமது குடும்­பத்­தைப்­போல் பார்த்­துக்­கொள்­வோம். இவர்­களில் ஒரு­வ­ருக்கு உதவ நாம் எல்­லா­ரும் தயங்­கா­மல் முன்­வந்­தோம். 'ராஃபிள்' போட்­டி­யில் நன்­கொடை அளித்­த­வர்­களில் ஒரு­வ­ருக்கு சிறப்­பாக வடி­வ­மைக்­கப்­பட்ட மோட்­டார்­சைக்­கி­ளின் பாகத்­தைப் பரி­சாக அளித்­தோம்," என்று முழு­நேர பச்சை குத்­தும் கலை­ஞ­ரான சவின் கூறி­னார்.

தற்­போது இக்­கு­ழு­வில் இருக்­கும் நால்­வர் முழு­நேர வேலை­யை­யும் குடும்­பத்­தை­யும் கவனித்துக்கொண்டு நிதி திரட்­டும் முயற்­சி­களில் இறங்­கி­யுள்­ள­னர்.

கடந்த மூன்று ஆண்­டு­க­ளா­கப் பல்­வேறு அமைப்­பு­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தோடு குழந்­தை­கள், முதி­ய­வர்­கள் போன்­றோ­ருக்­கும் வெவ்­வேறு வழி­களில் உதவி வரு­கின்­ற­னர். 2020ஆம் ஆண்­டில் சிறு­வர் தினத்­தன்று வசதி குறைந்த பாலர்­பள்ளி மாண­வர்­க­ளுக்கு பீட்ஸா உண­வைத் மோட்­டார்­சைக்­கள்­களில் சென்று கொடுத்து அவர்­களை மகிழ்­வித்­த­னர்.

மார்­ப­கப் புற்­று­நோய் அமைப்­புக்­கான நிதி திரட்­டும் முயற்­சி­களில் தொடர்ந்து ஈடு­ப­டப்­போ­வ­தா­கத் தெரி­வித்­தார் ஜெய்.

"ஒரு குழு­வாக நமது பைக்­கர் வாழ்க்­கை­மு­றையை நாம் மறக்­க­வில்லை. குழு­வு­டன் மோட்­டார்­சைக்­கிள்­களை ஓட்­டு­வ­தோடு நிதி­யு­தவி அளிப்­ப­தி­லும் ஈடு­ப­டு­வது நமக்கு வழக்­க­மா­கி­விட்­டது," என்­றார் ஜெய்.

ரச்சனா வேலாயுதம்