'சிங்­கப்­பூர் புதி­னம் எழுத விரி­வான ஆய்வு முக்கியம்'

'சிங்­கப்­பூர் புதி­னம் எழுத விரி­வான ஆய்வு முக்கியம்'

4 mins read
bc728f2e-9a4a-4378-a800-1608aceb23ff
-
multi-img1 of 3

கி.ஜனார்த்­த­னன்

பல வேளை­களில் சொந்­தக் காலில் நிற்க வேண்­டிய நிலை, பிறர் நம்மை எளி­தில் புரிந்­து­கொள்­ள­மாட்­டார்கள் என்ற உண்­மையை ஏற்­றுக்­கொள்­ளும் பக்­குவம் இவ்­வி­ரண்­டும் மிகச் சிறு­பான்­மை­யி­ன­ராக இருப்­போ­ரது வழக்­க­மான அனு­ப­வ­மா­கும். இவ்­வாறு சிங்­கப்­பூ­ரில் பார­சீகர்­கள், யூதர்­கள், சீக்­கி­யர்­கள் ஆகிய சமூ­கங்­க­ளைச் சேர்ந்த சாதா­ரண மாத­ரின் கதை­களைச் சொல்கிறது 'சிக்­பீஸ் டு குக் அன்ட் அதர் ஸ்டோ­ரிஸ்' (Chickpeas to Cook & Other Stories).

இந்­தச் சிறு­க­தைத் தொகுப்பு பற்­றிய பகிர்வு அமர்­வுக்­குக் கடந்த 10ஆம் தேதி­யன்று 'தி இந்து செண்­டர்' அமைப்பு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

இந்­தப் புத்­த­கத்­தின் எழுத்­தா­ள­ரும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தி­யா­ள­ரு­மான நீலஞ்­சனா சென்­குப்தா தமது படைப்பு குறித்து பேசி­ய­து­டன் பங்­கேற்­பா­ளர்­க­ளின் கேள்­வி­க­ளுக்­குப் பதில் அளித்­தார். தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் ஆங்­கில, மொழி­யி­யல் மற்­றும் நாட­கத் துறை பேரா­சி­ரி­யர் சித்ரா சங்­க­ரன் இந்­நி­கழ்ச்­சி­யின் நெறி­யா­ள­ராக இருந்­தார்.

பக்­கு­வம் தரும் உயர்வு

புத்­த­கத்­தின் பெயர்க்­கா­ர­ணம் குறித்து தமிழ் முரசு எழுப்­பிய கேள்­விக்­குப் பதி­ல­ளித்த திரு­வாட்டி சென்­குப்தா, சீக்­கிய மாது ஒரு­வர், தொலைந்­து­போன தம் சகோ­த­ரனை நினைத்து கொண்­டைக்­க­டலை சமைப்­பதை அப்­பெயர் குறிப்­பி­டு­வ­தா­கச் சொன்­னார்.

ஆனால் அந்­தத் தலைப்­புக்கு மற்­றோர் ஆழ­மான பொரு­ளும் உண்டு என்­றார் திரு­வாட்டி சென்­குப்தா.

"கொதிக்­க­வி­டப்­படும் கொண்­டைக்­க­டலை மேலே மிதந்து வரு­வதை, வாழ்க்­கை­யால் பக்­கு­வப்­பட்ட மனி­த­னின் உயர்­வுக்கு ஓர் ஆன்­மீக உவ­மை­யா­கப் பழங்­கால பார­சீ­கப் புல­வர் ரூமி பயன்­ப­டுத்­தி­னார்," என்­றார் திரு­வாட்டி சென்­குப்தா.

"சமூ­கம், சம­யம், கலா­சா­ரம், பாலி­னம் எனப் பல்­வேறு கண்­ணோட்­டங்­க­ளி­லி­ருந்து இந்த நூல் ஆரா­யப்­ப­ட­லாம். வெவ்­வேறு சிறு­க­தை­க­ளி­லி­ருந்து வெவ்­வேறு கருப்­பொ­ருள்­களை வாச­கர்­கள் காண­லாம்," என்­றார் அவர்.

'சகோ­த­ரித்­து­வம்' (sisterhood) ஒவ்­வொரு கதை­யி­லும் தென்­படு­வ­தாகவும் திரு­வாட்டி சென்­குப்தா தெரி­வித்­தார்.

புதி­னங்­க­ளி­லும் உண்மை தேவை

புதி­னம் என்­பது கற்­ப­னை­யில் எழு­தப்­பட்­டா­லும் அதற்­கான ஆய்­வு­கள் நேர்­மை­யாக இருக்­க­வேண்­டும். பிறர் படும் வேத­னை­க­ளைக் கேட்டு உண்­மை­யி­லேயே அனு­தா­பப்­ப­ட­வேண்­டும் என்று திரு­வாட்டி சென்­குப்தா தெரி­வித்­தார்.

கோல்­கத்­தா­வில் பிறந்த திரு­வாட்டி நீலஞ்­சனா, கடந்த 12 ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூ­ரில் வசித்து வரு­கி­றார். இளம் வயது முதல் எழு­து­வ­தில் ஆர்­வம் காட்­டிய திரு­வாட்டி சென்­குப்தா, தாம் எழு­தும் ஒவ்­வொரு புத்­த­கத்­திற்­கும் ஆய்வு செய்­யும் வழக்­கத்­தைக் கொண்­ட­வர்.

நன்கு ஆய்வு செய்­வ­தன் மூலம் தலைப்­பைச் சரி­யா­கப் புரிந்து­கொள்ள முடி­யும் என்று கூறிய அவர், எழுத்­தா­ளர்­கள் தங்­க­ளது சொந்த எண்­ணப்­போக்­கு­க­ளைக் கதா­பாத்­தி­ரங்­க­ளுக்­குள் திணிக்­கக்­கூ­டாது என்­றார். ஆய்வு செய்து அதன் தொடர்­பாக பேட்­டி­ய­ளிப்­ப­வர் என்ன சொல்­கிறார் என்­ப­தைச் சரி­யாக உள்­வாங்­கிக்­கொண்டு அதை அப்­படியே பிர­தி­ப­லிக்­க­வேண்­டும் என்­றார் அவர்.

தவ­றாக எது­வும் எழு­தக்­கூடாது என்­ப­தற்­காக மூன்று ஆண்­டு­கள் ஆய்வு செய்து எழு­தி­ய­தா­கத் தெரி­வித்­தார்.

"நான் பல்­வேறு சமூ­கங்­களைச் சேர்ந்த தலை­வர்­கள், அவற்­றின் உறுப்­பி­னர்­கள், சமய நல்­லி­ணக்க வட்­டா­ரங்­களில் இருப்­ப­வர்­கள் போன்­றோ­ரு­டன் பல­முறை நடத்­தப்­பட்ட பேட்­டி­க­ளின் அடிப்­ப­டை­யில் இந்­தக் கதை­களை உரு­வாக்­கி­னேன்," என்று அவர் கூறி­னார்.

பல்­வேறு சமூ­கங்­க­ளைச் சேர்ந்த பெண்­க­ளின் தனிப்­பட்ட வாழ்க்­கை­யைத் தெரிந்­து­கொள்­வ­தற்கு திரு­வாட்டி சென்­குப்தா அவர்­க­ளின் நம்­பிக்­கையை முத­லில் பெற வேண்டி இருந்­தது.

"உங்­க­ளி­டம் மக்­கள் தங்­களைப் பற்றி பேச வைப்­பது ஒரு திற­னா­கும். இந்­தத் திற­னைக் காலப்­போக்­கில் நான் வளர்த்­துக்­கொண்­டேன். நுட்­ப­மாக உள்ள மன­தைப் புரிந்து அத­னைக் கையாள்­வ­தற்கு உள்­ளு­ணர்­வும் தேவைப்­ப­டு­கிறது," என்று கூறி­னார்.

மாதருக்குரிய தனித்­தன்­மை­யான அனு­ப­வங்கள்

குடும்­பம், வேலை­யி­டம், பிள்­ளை­கள், வழி­பாட்டு இடங்­கள், பெற்­றோர்­, சமூ­கம், சமு­தா­யம் ஆகிய ஒவ்­வொன்­றி­லும் வெவ்­வேறு அடை­யா­ளங்­க­ளைப் பெண்­கள் எவ்­வாறு கையாண்டு சமா­ளிக்­கிறார்­கள் என்­பதை கதை­க­ளின் எல்­லாப் பெண் கதா­பாத்­தி­ரங்­களும் சித்­தி­ரிக்­கின்­றன என்­றார் திரு­வாட்டி சென்­குப்தா.

"மிகச் சிறு­பான்­மை­யி­ன­ராக உள்ள பெண்­களில் பலர் வெளி­நாட்­டைச் சேர்ந்த ஆண்­க­ளைத் திரு­ம­ணம் செய்­கி­றார்கள். அப்­போது புதிய அடை­யாள அம்­சங்­கள் அவர்­க­ளு­டன் இணை­கின்­றன. இது­வும் அவர்­க­ளுக்­குச் சவா­லான ஒன்று," என்று அவர் கூறி­னார்.

பெண்­க­ளின் தியா­க­மும் பொறு­மை­யும் அன்­பின் வெளிப்­பாட்­டுக்கு அவ­சி­யம் என்­ப­தைத் தம் புத்­த­கத்­தின் பெண் கதா­பாரத்­தி­ரங்­கள் நினைப்­ப­தா­கத் திரு­வாட்டி சென்­குப்தா தெரி­வித்­தார்.

"தங்­கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­கள் மகிழ்ச்­சி­யாக இருக்க எண்­ணற்ற தியா­கங்­க­ளைச் செய்­தாக வேண்­டும் எனப் பெண்­கள் நம்ப வைக்­கப்­ப­டு­கின்­ற­னர்," என்று அவர் கூறி­னார்.

அறி­வூட்­டும் பன்­முக கலா­சா­ரம்

வெவ்­வேறு கலா­சா­ரங்­க­ளைச் சேர்ந்த கதை மாந்­தர்­க­ளைப் பற்­றிய இத்­தொ­குப்பை உரு­வாக்க அக்­க­லா­சா­ரங்­கள் மீதான ஆர்­வம் திரு­வாட்டி சென்­குப்­தா­வுக்­குக் கைகொ­டுத்­தது.

எந்த சம­ய­மாக இருந்­தா­லும் முடிவு ஒன்றே எனக் கருதி ராம­கி­ருஷ்ண பர­ம­ஹம்­ச­ரின் கொள்­கை­யைப் பின்­பற்­றிய குடும்­பச்­சூ­ழ­லு­டன் வளர்ந்த அவர், சிங்­கப்­பூ­ரில் நில­வும் பகுத்­த­றி­வு­டன் கூடிய பன்­முக கலா­சா­ரத் தன்­மை­யின் தாக்­க­மும் தம் படைப்­பில் இருப்­ப­தா­கக் கூறி­னார்.

கலா­சா­ரப் பன்­மு­கத்­தன்மை கொண்ட பகுத்­த­றி­வற்ற சமு­தாயங்­களில் சமய வெளிப்­பா­டு­கள் தடை செய்­யப்­படும். பகுத்­த­றி­வுள்ள சமு­தா­யங்­களில் மக்­கள் வெவ்­வேறு கலா­சா­ரச் சூழல்­களில் பங்­கு­பெற முடி­வ­தால் அவர்­கள் பொது­வா­கவே அடிப்­படை­வா­தி­க­ளின் அழைப்­பு­க­ளுக்­குச் செவி­சாய்ப்­ப­தில்லை என்று அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரின் கலா­சா­ரப் பன்­முகத்­தன்மை மேலோட்­ட­மாக இல்­லா­மல் ஆழ­மாக, ஆன்­மீ­க­மாக இருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார் திரு­வாட்டி சென்­குப்தா.

"மாதர் நாள்­தோ­றும் தங்­கள் அலு­வல்­களை முடித்­து­விட்டு இறைவழிபாட்டில் மன­மு­ரு­க ஈடுபடுகிறார்கள். அப்­போது தங்­க­ளது வழக்­க­மான நிலையை அவர்­கள் அறிந்­தி­ருந்­தும் நிச்­ச­ய­மற்ற, அறி­யப்­ப­டாத மாற்று நிலை ஒன்றை நாடு­கி­றார்­கள். இதற்­குத் தைரி­யம் தேவைப்­ப­டு­கிறது," என்று அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரின் பன்­மு­கத்­தன்­மையை வெளிப்­ப­டுத்­தும் முக்­கியப் படைப்­பாக இந்­தப் புத்­த­கம் விளங்­கு­வ­தா­கத் தேசிய பல்­கலைக்­க­ழ­கத்­தின் தெற்­கா­சிய ஆய்­வுப் பிரி­வுக்­கா­ன தலை­வர் இணைப் பேரா­சி­ரி­யர் ராஜேஷ் ராய் தமிழ் முர­சி­டம் தெரி­வித்­தார்.

"சிறு­பான்மை கதா­பாத்­தி­ரங்­களின் பாலின அனு­ப­வங்­களை விளக்­க­மாக எழுதி அவற்­றைக் கோர்த்து வழங்க இயல்­வது இந்­தப் புத்­த­கத்­தின் பலம் என்­பேன்," என்றார் டாக்­டர் ராஜேஷ் ராய்.

சிங்­கப்­பூ­ரின் பல கலா­சா­ரச் சூழ­லைப் பிர­தி­ப­லிப்­ப­தால் இந்­தப் புத்­த­கத்­தைத் தங்­க­ளது பகிர்வு அங்­கத்­திற்­குத் தேர்ந்­தெ­டுத்­த­தாக 'த இந்து செண்­டர்' அமைப்பு கூறி­யது.

"தத்­தம் சம­யங்­களில் இருந்­து­கொண்டே மாதர் சவால்­மிக்க வாழ்க்­கை­யில் தங்­க­ளுக்­கு­ரிய திசை­க­ளைத் தேட முடிந்­தது பற்றி­யவை இந்­தக் கதை­கள்," என்­றது அமைப்பு.