'ஓப்பன் ஏஐ' நிறுவனத்தின் நிறுவனரும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான சாம் ஆல்ட்மேன் அண்மையில் இந்தியா சென்றார். அங்கு ஊடக செய்தியாளர்களுடன் நடைபெற்ற நேர்காணலில் அவர் கலந்துகொண்டார்.
அப்போது தம்மை நெகிழ வைத்த சில சம்பவங்களை சாம் ஆல்ட்மேன் நினைவுகூர்ந்தார்.
"உலக நாடுகளில் சாட்ஜிபிடி பயன்பாட்டை ஏற்றுக்கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
"சாட்ஜிபிடி உலக அளவில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் வாரம் அது.
"அப்போது இந்தியாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் 'சாட்ஜிபிடி'யைப் பயன்படுத்தியது குறித்து நாங்கள் அறிந்தோம்.
"அரசாங்கம் தொடர்பான சேவை ஒன்றை இணையம் வழியாக நாட முடியாததால் அவர் சாட்ஜிபிடி துணையுடன் வாட்ஸ்அப் வழியே அந்தச் சேவையை பெற்றுள்ளார்.
"உண்மையில் இப்படி நடக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
"செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து இந்தியாவில் நடைபெற்று வரும் மாற்றத்தை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
இதனை வெறும் 'ஓப்பன் ஏஐ' நிறுவனத்தின் பயன்பாட்டை மட்டும் வைத்துச் சொல்லவில்லை. இதர பல தொழில்நுட்ப பயன்பாடுகளையும் நேரில் கண்டறிந்த பின்னர்தான் இதனைச் சொல்கிறேன்," என்றார் சாம் ஆல்ட்மேன்.
தொழில்நுட்ப சாதனங்களின் வழியே பயனர்களோடு உரையாடும் தன்மை கொண்ட 'சாட்பாட்' தான் 'சாட்ஜிபிடி'. இதனை 'ஓப்பன் ஏஐ' நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இந்நிறுவனத்தை கடந்த 2015ஆம் ஆண்டு வாக்கில் எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் மற்றும் சிலர் இணைந்து தொடங்கினர்.
முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இந்தத் தளம் கடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
பயனர்கள் கேட்கிற கேள்வி கள் அனைத்திற்கும் இங்கு விடை கிடைக்கும்.
இன்றைய செயற்கை நுண்ணறிவு சூழலில் உலகில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது சாட்ஜிபிடி. கதை சொல்ல, கட்டுரை படிக்க, பாடல் எழுத என பயனர்கள் கேட்கும் சகல கேள்வி மற்றும் சந்தேகங்களுக்கும் சாட்ஜிபிடி பதில் தருகிறது.
இருந்தாலும் இதில் கிடைக்கும் சில தகவல்கள் பொதுவாக இருப்பதாகவும் சில தகவல்களில் தெளிவு இல்லை என்றும் சிலவற்றில் பிழை இருப்பதாகவும் பயனர்கள் விமர்சித்து வருகின்றனர்.
பிழைகளும் குறைகளும் இருந்தாலும், இதன் நிரூபிக்கப்பட்ட திறனும் எதிர்காலத்தில் மேம்படுத்தப்படக்கூடிய சாத்தியக்கூறும் பாராட்டுடன் பயத்தையும் ஏற்படுத்துகின்றன.
விமர்சனங்களில் உள்ள 'அச்சுறுத்தல்' என்ற வார்த்தையைக் கூர்ந்து நோக்கினால் இது தெரியும். மனிதனின் உரை போலவே ஒரு போலியை உருவாக்கக்கூடிய இதன் திறனால் பிரச்சினை எழலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அப்படியே நகலெடுப்பது தவிர, மனிதக் கற்றலின் கட்ட மைப்பில் இது தாக்கத்தை ஏற் படுத்துமோ என்ற அச்சமும் அதி கரிக்கிறது.
மாணவர்கள் தங்கள் படிப்பு சார்ந்த பணிகளுக்கு ஆயத்த பதில்களைக் கண்டறிய சாட்ஜிபிடியைப் பயன்படுத்தத் தொடங்கியதையடுத்து, இது வெளியான ஒரு மாதத்திற்குள் நியூயார்க்கில் கல்வி நிறுவனங்களில் இதன் பயன்பாடு தடை செய்யப்பட்டது.

