'வாட்ஸ்அப்' செயலியை உலகம் முழுவதும் 200 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். எழுத்து மூலமான தகவல், உரையாடல், படம் மற்றும் காணொளி பகிர்வு போன்றவற்றுக்கு இச்செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக்கொண்டு வருகின்றனர்.
தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய மேம்பாடுகளையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் வாட்ஸ்அப் செயலியில் வெகு விரைவில் பயனர்கள் தங்கள் கைப்பேசி எண்ணை மறைக்கும் வகையில் தனித்துவ பயனர் பெயரை பயன்படுத்தும் வகையில் மேம்பாடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் பயனர்கள் தனித்துவ பெயர்களை தங்களது பயனர் பெயராக பயன்படுத்திக் கொள்ளலாம். இது குறித்து வாட்ஸ்அப் மேம்பாடு தொடர்பான தகவல்களை கண்காணிக்கும் 'WAபீட்டாஇன்ஃபோ' தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே 'சிக்னல்' போன்ற செயலியில் பயனர்கள் தங்களது பயனர் பெயரை கொண்டு லாக்-இன் செய்யலாம். அதே பாணியில் 'வாட்ஸ்அப்' தளமும் இயங்கும் எனத் தெரிகிறது.
இதன் மூலம் பயனர் விவரங்கள் முற்றிலும் பாதுகாக்கப்படும் என அறியப்படுகின்றது.
அதேபோல வாட்ஸ்அப் எண்ணை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் 'ஸ்பேம்' தொலைபேசி அழைப்புகளுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.