வெப்பமான காலத்தில் சில வகை உணவுகளையும் பானங்களையும் எடுத்துக்கொள்வது உடலின் வெப்பநிலையை சீராக வைக்க உதவுகிறது. எனினும் கோடையில் உடலைக் குளிர்ச்சியாக்கும் உணவு, பானங்கள் பற்றிய சில கட்டுக்கதைகளும் உண்டு.
குளிர்ந்த பானங்கள்: பழச்சாறு, குளிர்ந்த தேநீர், பால், காபி போன்றவை நாவுக்கும் உடலுக்கும் இதமாக இருப்பதுபோல இருக்கும். ஆனால், உண்மையில் இவை உடலின் உள் வெப்பநிலையை பாதிக்காது. எனினும் புழுக்கமான பருவநிலையில், வியர்வை அளவைக் குறைப்பதன் மூலம் வெப்பத்தை குறைக்க உதவுகின்றன. உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்கவும் இந்த பானங்கள் அவசியம்.
சூடான பானங்கள்: சூடான பானங்கள் உடல் வெப்பத்தைக் குறைக்கும் என்பதில்லை. அவை சூடாக உணரவைக்கும். வியர்க்கும் விகிதத்தை அதிகரிக்கும்.
பழங்கள்: பழங்கள் உடலின் நீர்ச்சத்தின் அளவை கணிசமாக அதிகரிப்பதோடு வெப்ப பாதிப்பிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகின்றன. மாம்பழம், வாழைப்பழம், தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்கள் வெப்பமான காலத்தில் உண்ணக்கூடியவை.
காய்கறிகள்: நீர்சத்து உள்ள காய்கறிகள் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க உதவுகின்றன. கீரை, வெங்காயம், குடை மிளகாய், வெள்ளரி, தக்காளி, காளான், செலரி, முட்டைக்கோஸ் போன்றவற்றை உடலுக்குத் தேவையான அத்தியாவசிய உயிர்ச்சத்துகள், தாதுப்பொருள்களைக் கொண்டுள்ளன. எனினும், காய்கறிகள் உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் என்பதை நிரூபிக்க ஆய்வுகள் எதுவும் இல்லை.
காரமான உணவுகள்: காரமான உணவுகள் உடலின் வெப்பநிலையை சீராக்க முடியும் என்பது கட்டுக்கதை. காரமான உணவைக் குறைத்து, ஆரோக்கியமான உணவுகளை உண்பதே சிறந்தது.
இளநீர்: அத்தியாவசிய அமினோ அமிலங்கள், ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ள இளநீர் வெப்ப காலத்தில் குடிப்பதற்கு ஏற்ற சிறந்த பானமாக இருக்கிறது. எந்தவித ரசாயனமும் இல்லாத இயற்கை பானம். உயிர்ச்சத்துகள், தாதுப்பொருள்கள் உள்ளதால் வெயில் தாக்கத்திலிருந்து இழந்த சக்தியை மீண்டும் பெற முடியும்.
நுங்கு: வெயில் காலத்தில் ஏற்படும் வியர்க்குருவை வராமல் தடுக்கும். சருமப் பிரச்சினைகள் அனைத்துக்கும் பனைநுங்கு நல்ல தீர்வு தரும். அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் நுங்குவை சாப்பிட்டால் உடல் குணமாகும்.
நீராகாரம்: பழக்கஞ்சி, நீராகாரம் என்பார்கள். உடலுக்குப் புத்துணர்ச்சியும் குளிர்ச்சியையும் கொடுக்கும். ஆயுள் அதிகம் உள்ளவர்களின் உணவாக, நீராகாரம் சொல்லப்படுகிறது. வாத நோய்கள், செரிமானக் கோளாறை நீக்க உதவுகிறது. தேநீருக்கு பதிலாக நீராகாரம் குடித்தால் உடல் அமிலத்தன்மை அடைவதிலிருந்து பாதுகாக்கப்படும்.
கூழ்: கம்பங்கூழ், கேப்பக்கூழ் போன்றவை உடலைக் குளிர்ச்சியாக்கும். உடலில் தேங்கியுள்ள அமிலத்தை நீக்கும். ஒருநாளைக்குத் தேவையான புத்துணர்ச்சியைக் கொடுக்கும். வெயில் கால நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.
துளசி விதை: ஊறவைத்து உண்ணக்கூடிய துளசி விதைகளை, பழச்சாறு, சர்பத், இளநீர் போன்ற இனிப்புச் சுவை தரும் பானங்களில் சேர்த்துச் சாப்பிடலாம். ஆயுர்வேதம், சீன மருத்துவத்தில்கூட இது மருந்தாகிறது. உடல் எடையை குறைக்க, உடல் குளிர்ச்சியாக, மலச்சிக்கல் தீர, நெஞ்செரிச்சல் போன்றவற்றுக்கு இது சிறந்த தீர்வு.
பாதாம் பிசின்: பாதாம் பிசின் உடலைக் குளிர்ச்சியாக்குகிறது.அல்சர், அசிடிட்டி, வயிற்று எரிச்சல், மலச்சிக்கல், மூலம் போன்றவற்றின் தாக்கத்தைக் குறைத்து குணமாக்க வழிவகுக்குகிறது.
புதினா அல்லது மஞ்சள் போன்ற சில மூலிகைகள் கலந்த மோரைக் குடிப்பது வெப்பத்தை சமாளிக்க ஒரு நல்ல தேர்வு.