சிறார்களுக்கான காற்பந்தாட்ட முகாம்

2 mins read
bde12a4b-f627-416b-8429-faa587d21367
சிறப்பு விருந்தினரான கலாசார, சமூக, இளையர் அமைச்சு மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளரான திரு எரிக் சுவாவுடன் சுய உதவிக் குழுவின் தலைவர்கள்  - யுரேசியர் சங்கம்
multi-img1 of 5

சீனர் மேம்பாட்டு உதவி மன்றம், சிண்டா, மெண்டாக்கி ஆகிய சுய உதவிக் குழுக்களுடன் இணைந்து யுரேஷியர் சங்கம் காற்பந்தாட்ட முகாம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

ஏழு வயது முதல் 12 வயது வரை உள்ள பிள்ளைகளுக்கான இந்த முகாம் ஜூன் 19ஆம் தேதியன்று தொடங்கி வைக்கப்பட்டது.

இந்தக் காற்பந்தாட்ட திட்டத்தின் அதிகாரபூர்வமாகத் திறப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக கலாசார, சமூக, இளையர் அமைச்சு மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளரான திரு எரிக் சுவா கலந்து கொண்டார்.

ஒவ்வொரு சுய உதவிக் குழுவின் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ஜூன் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த முன்று நாள் காற்பந்தாட்ட முகாமில் மொத்தம் 100 பிள்ளைகள் கலந்துகொண்டனர்.

இறுதிச்சுற்று காற்பந்தாட்ட போட்டி இந்த முகாமின் கடைசி அங்கமாக விளங்கும்.

வெவ்வேறு இன, பின்னணியைச் சேர்ந்த பிள்ளைகள் அவர்களிடையேயான வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் காற்பந்து விளையாட்டில் ஈடுபட இந்த நிகழ்ச்சி வழி வகுக்கின்றது.

“என்னால் இங்கு எனது நண்பர்களுடன் இணைந்து நேரம் செலவழிக்க முடிந்தது. அதுமட்டுமல்லாமல் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டான காற்பந்து விளையாடுவதிலும் உற்சாகம் கொள்கிறேன்,” என்று பங்கேற்பாளர்களில் ஒருவரான லூக்கேஷ், 11, கூறினார்.

“எனது தம்பிக்கு காற்பந்து என்றால் கொள்ளைப் பிரியம். அவனை ஆதரிப்பதற்காக இந்த முகாமில் கலந்துகொண்ட என்னாலும் காற்பந்து பற்றிய பல நுணுக்கங்களை கற்றுக்கொள்ள முடிந்தது,” என்று செந்தில்குமார் அஷ்விதா, 11, கூறினார்.

“இவ்வாறான விளையாட்டுகளின் மூலம் இளையர்கள் ஒன்றிணைந்து பண்புள்ள சமூகம் ஒன்றை உருவாக்க முடியும். அதுமட்டுமல்லாமல், பிள்ளைகளின் ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு வழி வகுக்கும் ஒரு திட்டமாகவும் இது அமையும்,” என்று சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு ராஜேந்திரன் கூறினார்.

“வெவ்வேறு பின்னணியைக் கொண்ட பிள்ளைகளை ஒன்றிணையச் செய்வதில் சுய உதவிக் குழுக்களும் இது போன்ற திட்டங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், ஏட்டுக்கல்வியோடு நின்றுவிடாமல் பிள்ளைகளின் முழுமையான கற்றல் அனுபவத்தையும் மேம்படுத்துகிறது இந்த காற்பந்தாட்ட முகாம்,” என்று திரு எரிக் சுவா கூறினார்.

குறிப்புச் சொற்கள்