முழுநலத்திற்கு உதவும் யோகா

முழுநலத்திற்கு உதவும் யோகா

3 mins read
81d9601a-dda6-427a-8f19-23bd4f0afc3e
இந்தியத் தூதரகத்தில் அனைத்துலக யோகா தினத்திற்காக ஒன்றுகூடிய பங்கேற்பாளர்கள். - படம்: இந்தியத் தூதரகம்

நல்வாழ்வு என்பது நோய் நொடியின்றி இருப்பது மட்டுமல்லாது, வாழ்வின் பல அனுபவங்களை முழு உணர்வுகளுடன் அனுபவிப்பதும் உள்ளடங்கும். முழுமையான நலத்திற்கு உதவியாக இருப்பது யோகப் பயிற்சி என்று கூறுகிறது யோகா, தியான வகுப்புகள் வழங்கும் ‘ஆர்ட் ஆஃப் லிவிங்’ அமைப்பு.

“தொடர்ந்து யோகா பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் உடல்நலம் பேணுவதுடன் மனத்தையும் வலுவாக்க முடிகிறது; மனத்தையும் உடலையும் இணக்கமாக வைத்திருக்கவும் கைகொடுக்கிறது,” என்று கூறுகிறார் ‘ஆர்ட் ஆஃப் லிவிங்’ அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர்.

ஜூன் 21ஆம் தேதி அனைத்துலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக யோகா பயிற்சி உலகெங்கும் பிரபலமடைந்து வருகிறது.

“யோகா எனும் சொல் வடமொழியில் இணைத்தல் என்ற பொருளைக் கொண்டுள்ளது. மனத்தையும் உடலையும் இணைக்கக் கைகொடுக்கிறது யோகா என்று எளிமையாகக் கூறலாம்,” எனக் குறிப்பிட்டார் ‘பியூர் யோகா’ நிலைய பயிற்றுவிப்பாளரும் ஸ்ரீ சாஸ்தா அமைப்பின் தொண்டூழிய யோகா பயிற்றுவிப்பாளருமான நிருபன் சக்கரவர்த்தி முத்துகிருஷ்ணன், 34.

50 வயதில் யோகா பயிற்சியைத் தொடங்கி, நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் திரு ரோகித் ஜெய்சிங். வங்கி நிபுணராக பணிபுரியும் ரோகித் உறக்கம், மூச்சு தொடர்பான பிரச்சினைகளுடன் போராடிக்கொண்டிருந்தார்.

“தாமதமாகத் தொடங்கினாலும் யோகா பயிற்சி என் வாழ்வை மாற்றியுள்ளது. அது உடல்நலத்தை மேம்படுத்துவதுடன் மனஉளைச்சலையும் குறைத்துள்ளது,” என்று கூறினார் 54 வயதான திரு ரோகித்.

உடற்பயிற்சி நிலையத்திற்குச் சென்று உடற்கட்டைப் பராமரித்து வந்த 45 வயது திருவாட்டி பவானி தம்பிதுரை புதிதாக ஓர் உடற்பயிற்சி முறையை நாடி யோகா பயிற்சிக்குத் திரும்பினார்.

“நீண்டகால உடல்நலப் பேணுதலை வளர்க்கிறது யோகா. உடலுக்கு நல்ல பயிற்சி வழங்குவதுடன் யோகா செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்தவும் உதவியது. நிகழ்கால வாழ்க்கைத் தருணங்களை முழுமையாக அனுபவிக்கவும் புரிந்துகொண்டேன். ஒரே நடவடிக்கை மூலம் பல பயன்களைப் பெற்றேன்,” என குறிப்பிட்டார் திருவாட்டி பவானி.

நடனப் பயிற்றுவிப்பாளராகப் பணிபுரியும் திருவாட்டி எஸ். ஹேமலதா, 34, “நடனம் ஆடுவதே ஒரு வகை உடற்பயிற்சி எனலாம். இருப்பினும், யோகா பயிலத் தொடங்கியதிலிருந்து சரியான சுவாச முறை எவ்வளவு பயனளிக்கும் என்பதை உணர்ந்தேன். மேலும் சிறந்த நடன பயிற்றுவிப்பாளராக யோகா மெருகேற்றிவிட்டது,” என்று சொன்னார்.

இளம் வயதிலிருந்தே விளையாட்டுகளில் ஈடுபட்டு வந்த குமாரி சங்கரி மூவேந்திரன், 27, கடந்த சில மாதங்களாக முறையாக யோகா பயின்று வருகிறார்.

“முன்பு இது மிகவும் எளிமையானதாகவும் விரைவில் சலிப்பூட்டும் நடவடிக்கையாகவும் தோன்றியது. எனவே, பல ஆண்டுகளாக யோகாவில் ஈடுபடவில்லை. இப்போது முறையாக பயிலும்போது எவ்வளவு உடற்கட்டுப்பாடும் மனவலிமையும் தேவைப்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டேன்,” என்று விளக்கினார் குமாரி சங்கரி.

“அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் பயனுள்ளதாக இருப்பது யோகா. ஏழு வயதுச் சிறுவன் முதல் 84 வயது முதியவர்வரை வகுப்புகளில் பங்கெடுத்துள்ளனர்,” என்று குறிப்பிட்டார் திரு நிருபன்.

வயது வரம்பு எதுவுமின்றி அனைவரும் தன் மேம்பாட்டில் ஈடுபட துணைபுரிகிறது யோகா.

அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் யோகா வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன. இதுவரை யோகா பயிற்சியில் ஈடுபட எண்ணியவர்கள் தயக்கங்களைத் தவிர்த்து முதல் அடியை இன்று எடுத்துவைக்கலாம்.

குறிப்புச் சொற்கள்