‘மிஷெலின்’ தரவரிசைப் பட்டியலில் ‘பரக்கத் மட்டன் சூப்’ கடை

‘மிஷெலின்’ தரவரிசைப் பட்டியலில் ‘பரக்கத் மட்டன் சூப்’ கடை

2 mins read
2aefb145-fd61-423a-b84f-b9e397b48a1b
ஆடம் ரோடு உணவங்காடி நிலையத்தில் உள்ள ‘பரக்கத் மட்டன் சூப்’ கடையின் உரிமையாளர் சையது அப்துல் ரஹ்மான், அவருடைய மனைவி அலிமா பீவி (இடது), மூத்த மகன் சையது அஜ்மல் (வலது).  - படம்: மோனலிசா
multi-img1 of 2

ஆடம் ரோடு உணவங்காடி நிலையத்திலுள்ள திரு சையது அப்துல் ரஹ்மானின் ‘பரக்கத் மட்டன் சூப்’ கடை ‘மிஷெலின் பிப் கோர்மாண்ட்’ தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. ஆடம் ரோடு உணவங்காடி 1973ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து இக்கடையும் இயங்கி வருகிறது. தமிழகத்தின் ராமநாதபுர மாவட்டம், மாரியூர் கிராமத்தைச் சேர்ந்த திரு ரஹ்மானின் தந்தை கடையைத் தொடங்கினார். 

இளம் வயதிலிருந்தே தந்தைக்கு உதவி வந்த திரு ரஹ்மான், உயர்நிலை ஒன்றுடன் படிப்பை நிறுத்திக்கொண்டார். 2005ல் தம் தந்தையின் மறைவிற்குப் பின் இவர் முழுநேரமாக கடைப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். மூளை, நெஞ்செலும்பு, நாக்கு, குடல், முட்டி போன்ற ஆட்டிறைச்சிச்சாறு வகைகள் விற்கப்பட்டதை அடுத்து ரஹ்மான் பொறுப்பேற்ற பின் 2014 முதல் பிரியாணியும் விற்கப்படுகிறது.  

இதனால் வாடிக்கையாளர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக 62 வயதான திரு ரஹ்மான் கூறினார். 

காலை 8 மணிக்கே மனைவி அலிமா பீவியுடன் வந்துவிடுகிறார் திரு ரஹ்மான். காலை 11 மணிக்குத் தொடங்கும் பிரியாணி விற்பனை மாலை 4 மணியளவில் நிறைவடைய, அடுத்தநாள் அதிகாலை 3 மணிவரையிலும் ரொட்டியுடன் கூடிய சாறு வகைகளின் விற்பனை நடைபெறுகிறது. 

மாமனாரின் சமையல் பக்குவத்தையும் மசாலாவின் ரகசியத்தையும் கற்றுக்கொண்ட மருமகள் திருவாட்டி அலிமா, 52, “குடும்பத்திற்குச் சமைப்பதைப் போலவே சமைத்து வருகிறேன்,” என்றார்.

வாடிக்கையாளர் ஒருவர் சொல்லித்தான் இத்தரவரிசைப் பட்டியலில் தங்களுடைய கடை இடம்பிடித்திருப்பது தெரியும் என்று புன்னகை பூத்தார் திரு ரஹ்மான். கைம்மாறு எதிர்பார்க்காமல் நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் தொடர்ந்து கடமைகளைச் சரிவர செய்துவந்தால் அதற்கு அங்கீகாரம் கிடைக்கும் எனத் தாம் கருதுவதாக அவர் சொன்னார். 

தம்பதியருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் முழுநேரமாக கடைவேலைகளில் தந்தைக்கு உறுதுணையாய் இருக்க, வெவ்வேறு முழுநேரப் பணிகளில் இருக்கும் இரு இளைய மகன்களும் ஓய்வு நேரத்தில் பெற்றோருக்கு உதவி வருகின்றனர். 

கடையை விரிவுபடுத்தி மேலும் புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளது என்றும் அதற்குமுன் தந்தையிடமிருந்து தொழில் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார் திரு ரஹ்மானின் மூத்த மகன் திரு சையது அஜ்மல், 35.

குறிப்புச் சொற்கள்