எலும்பு மஜ்ஜை தானமளிக்க முன்வருவோம்

சிங்கப்பூரில் ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட ஆறு பேருக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது என்பது வியப்பளிக்கும் செய்தி.

அதேவேளையில், கொடிய உயிர்க்கொல்லியாக இருக்கும் புற்றுநோய்க்குத் தக்க தீர்வு இன்னும் அறியப்படவில்லை என்பது நாமறிந்த ஒரு கசப்பான உண்மை.

ரத்தப் புற்றுநோயாளிகளும், ரத்தம் சார்ந்த பிரச்சினைகளால் துன்புறும் நோயாளிகளும் சிகிச்சை மேற்கொண்டாலும் அவர்களுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை அளிக்கும் தீர்வு பிற சிகிச்சைகள் மூலம் கிடைப்பதில்லை.

எழுபதுக்கும் மேற்பட்ட ரத்தம் சார்ந்த பிரச்சினைகளை எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சையால் குணப்படுத்த முடியும்.

நோயாளி எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்குக் கொடையாளி முதலில் முன்வர வேண்டும். பொதுவாக நோயாளிக்கு நோய் கண்டறியப்பட்டால் நோயாளியின் பெற்றோர் அல்லது சகோதரர் எலும்பு மஜ்ஜைக் கொடை அளிக்க முன்வருவது வழக்கம். ஆனால், அவர்களின் எலும்பு மஜ்ஜையை நோயாளியின் உடல் ஏற்றுக்கொள்ளும் வகையில் பொருந்தாவிட்டால் வேறொரு கொடையாளியை நாடவேண்டிய சூழல் எழுகிறது.

நம் சமுதாயத்தில் மொத்தம் கிட்டத்தட்ட 10,365 இந்திய எலும்பு மஜ்ஜை கொடையாளர்கள் உள்ளனர். ஒட்டுமொத்த கொடையாளர்களின் எண்ணிக்கையில் இது வெறும் ஒன்பது விழுக்காடுதான்.

எலும்பு மஜ்ஜைக் கொடையாளர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதாக அண்மையில் எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர் திட்டம் சுட்டியிருந்தது.

இதுகுறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையிலும் இந்தியர்கள் ஏன் எலும்பு மஜ்ஜை தானம் அளிக்க அதிகம் முன்வருவதில்லை எனும் காரணங்களுக்கும் விளக்கமளித்தார் எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர் திட்டத்தில் பொதுக் கல்வி நிர்வாகியாக பணிபுரியும் 32 வயது பிரியா தரிசினி கணேசன்.

எலும்பு மஜ்ஜை என்பது நம் உடலில் இருக்கும் பெரிய எலும்புகளுக்குள் காணப்படும் மென்மையான பஞ்சு போன்ற திசுவாகும். எலும்பு மஜ்ஜை செயலிழக்கும்போது உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ரத்த அணுக்களை இதனால் உற்பத்தி செய்ய இயலாமல் போய்விடும். இதன் காரணமாக ரத்தம் தொடர்பான நோய்கள் உருவாக வழிவகுக்கப்படுகிறது.

நோயாளியின் எலும்பு மஜ்ஜை வளர்ச்சியைத் தூண்டுவதற்கு மாற்று அறுவை சிகிச்சை கைகொடுக்கிறது. ரத்த அணுக்களின் உற்பத்தியை மீட்டெடுப்பதற்கும் நோயாளியின் உடலில் ஆரோக்கியமான ரத்த முதல்நிலை உயிரணுக்களை உட்செலுத்தவும் அறுவை சிகிச்சை முற்படும். நன்கொடை அளிப்பதற்குமுன் ஒரு கொடையாளர் முழுமையான மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்ட பின்னரே கொடையளிக்க முடியும்.

சிங்கப்பூரில் நம் உள்ளூர் இந்திய நோயாளிகளுக்குப் பொருத்தமான உள்ளூர் எலும்பு மஜ்ஜை கொடையாளர் கிடைக்கும் வாய்ப்பு மிகக் குறைவாக, வெறும் இரண்டே விழுக்காடாக உள்ளது. ரத்த தானத்துக்கு வேறுபட்ட எலும்பு மஜ்ஜை தானத்தில் ஒரு கொடையாளரும் நோயாளியும் ‘ஹியூமன் லியூக்கோசைட் ஆன்டிஜன்’ எனும் உயிர் தற்காப்புப் பொருளின் பொருத்தத்தை வைத்துதான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேலும் நோயாளியின் இனமும் கொடையாளரின் இனமும் ஒப்பாக இருந்தால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெறும்.

இந்தியக் கொடையாளர்களை ஊக்குவிக்கம் விதத்தில் பல முயற்சிகள் கையாளப்படுகின்றன. விழிப்புணர்வு உரைகள், பள்ளிகளில், நிறுவனங்களில், கடை தொகுதிகளில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் போன்றவை அவற்றில் அடங்கும். கொள்ளைநோய் காரணமாக கொடையாளாராக விரும்பும் மக்களின் விண்ணப்பங்கள் வெகுவாக குறைந்ததால் எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர் திட்டம் மீண்டும் மக்களை ஊக்குவிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.

இந்தியர்கள் அதிகம் வாழும் ஈசூன் குடியிருப்பு வட்டாரத்தில் இந்தியர்களை எலும்பு மஜ்ஜை தானம் அளிக்க ஊக்குவிக்கும் முயற்சிகள் செயல்படுத்தப்படுகின்றன. விடுமுறைக்குச் சென்ற பிறகு சிங்கப்பூர் திரும்பியதும் ஒருவர் சில காலம் காத்திருந்த பின்னரே ரத்த தானம் அளிக்க முடியும். ஆனால், எலும்பு மஜ்ஜை தானத்துக்கு அது பொருந்தாது. கொடையாளி ஆரோக்கியமாக இருந்தால் மட்டும் போதும்.

நீண்டகால கருவுறுதலுக்கு ஆபத்து, குடும்ப ஆதரவு இல்லாமல் இருப்பது, ஒருவரின் அசைவுகளைப் பாதிப்பது போன்ற அச்சங்களுக்காக இந்தியர்கள் பெரும்பாலும் எலும்பு மஜ்ஜை கொடையளிக்கத் தயங்குவதாக கூறிய பிரியா, இந்தத் தவறான கருத்து வெறும் ஒரு கட்டுக்கதை என்றும் இதனால் எவ்வித ஆபத்தும் இல்லை என்றும் உறுதியளித்தார்.

எலும்பு மஜ்ஜை தானத்தில் இருவகை உண்டு என்பது பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

கொடையாளர்களில் 90 விழுக்காட்டினர் ரத்த ஓட்டத்திலிருந்து நேரடியாக முதல்நிலை உயிரணுக்களைச் சேகரிக்கும் முறையை நாடுவதாக பிரியா பகிர்ந்தார். இந்தச் செயல்முறை கிட்டத்தட்ட ஐந்திலிருந்து ஏழு மணி நேரத்துக்கு நடைபெறும். கொடையாளர் இவ்வகை செயல்முறைக்குச் செல்லும் முன் ஐந்து நாள்களுக்கு G-CSF எனும் ஊசியை உடலில் செலுத்த வேண்டும்.

மீதமுள்ள 10 விழுக்காட்டினர் இடுப்பெலும்பிலிருந்து எலும்பு மஜ்ஜை சேகரிக்கும் முறையை நாடுகின்றனர். இது வெறும் 45 நிமிடங்களுக்கு மட்டுமே நடைபெறும். இதில் தசைவலியும் கீழ் முதுகில் லேசான அசெளகரியத்தையும் கொடையாளர் சில நாள்களுக்கு அனுபவிக்கலாம். இந்த இரண்டு முறைகளிலும் கொடையாளரின் உடல் நான்கு முதல் ஆறு வாரங்களுக்குள் முதல்நிலை உயிரணுக்களையும் எலும்பு மஜ்ஜையும் பெற முடியும்.

ரத்தம் சார்ந்த பிரச்சினையோ ரத்தப் புற்றுநோயோ வாழ்க்கையில் திடீரென வரலாம். இது ஒரு வாழ்க்கைமுறை நோயன்று. 18லிருந்து, 49 வயது வரை ஆரோக்கியமாக இருக்கும் நபர்கள் இந்த உன்னத தானமளிக்க முன்வரலாம். இது உயிரை மட்டும் காப்பாற்றுவதைவிட, அந்த நோயாளியின் குடும்பத்தையும் காப்பாற்றுகிறது.

இளம் கொடையாளர்களிடமிருந்து பெறப்படும் எலும்பு மஜ்ஜை நோயாளியின் உயிர் வாழும் நாள்களை அதிகரிப்பதால் 49 வயதுக்குள் ஒருவர் கொடையளிக்க பரிந்துரைக்கப்படுகின்றனர். ஒரு முறை எலும்பு மஜ்ஜை தானம் அளித்த பிறகு கொடையாளர் நான்கு வாரங்கள் கழித்து மீண்டும் தானம் அளிக்க முன்வரலாம்.

இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில் தேக்கா பிளேஸ் கடைத்தொகுதியில் எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர் திட்டத்தின் சாவடியில் பொதுமக்கள் தங்கள் விருப்பத்தைப் பதிவுசெய்துகொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!