நீண்ட வேலை நேரத்திலும் உடல் கட்டுக்கோப்பு

2 mins read
27cf08ad-a66c-4a2b-8031-b9a8a92e5ea3
நீண்ட வேலை நேரம் இருப்பினும் உடற்பயிற்சிக்காக நேரம் ஒதுக்குவது முக்கியமாகும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இந்திய சமூகத்தினர் பலர் நீண்ட வேலை நேரம் கொண்ட துறைகளில் பணிபுரிவதால் உடற்பயிற்சியில் ஈடுபடும் வாய்ப்பு குறைவாக உள்ளது. இதனால், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியாமல் அவதியுற்று வருகின்றனர். இதற்கான சில தீர்வுகளைக் காண்போம்.  

உடல்நலனைப் பேணிக்காக்கவும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் உறக்கம் மிகவும் அவசியமென்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஒரு நாளுக்குக் குறைந்தது ஏழு மணி நேரமாவது உறங்காமல் உடற்பயிற்சியில் ஈடுபடுவது பல காயங்களுக்கு வித்திடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உடற்பயிற்சி செய்ய அவசியமான சக்தியை உறக்கம் வழங்குவதோடு, உடற்பயிற்சியால் சோர்ந்து போன தசைகளுக்கு ஓய்வளிக்கவும் அது உதவுகிறது.  

உடலைத் துடிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உடற்பயிற்சிக் கூடத்தில் பல மணி நேரம் செலவிட வேண்டுமென்றோ, தொடர்ந்து நெடுந்தொலைவு ஓட்டங்கள் ஓட வேண்டுமென்றோ அவசியமில்லை. தசைகளுக்குத் தினசரி வேலைகளுக்கும் மேலாக சற்று கூடுதல் வேலை கொடுப்பதே போதுமானதாகும்.  

அதிக நேரம் உட்கார்ந்து பணிபுரிபவர்கள், முடிந்தால் 30லிருந்து 60 நிமிடங்களுக்கு ஒரு முறை, எழுந்து நின்று எளிய உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம். நீண்ட நேரம் நின்று பணிபுரிபவர்கள், இடை, முதுகு, கால்கள் சார்ந்த பிரச்சினைகளைத் தவிர்க்க எளிய உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது முக்கியமாகும்.    

குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய உயர் வீரிய இடைவெளி பயிற்சிகள் உடலைச் சீராக வைத்திருக்கச் சிறந்தத் தீர்வாக அமைகின்றன. இப்பயிற்சிகள் பெரும்பாலும் 10லிருந்து 30 நிமிடங்களுக்குள் செய்யக்கூடியவையாகும். 

இவற்றின் வழி, சிறிது நேரத்திலேயே பல கலோரிகளையும் உடலிலுள்ள கொழுப்பையும் குறைக்கலாம். 

நாம் உண்ணும் உணவில் கால் பங்கு மாவுச்சத்து, கால் பங்கு புரதச்சத்து, அரை பங்கு காய்கறி, பழங்கள் இருப்பது சிறப்பாக இருக்குமென சுகாதார மேம்பாட்டு வாரியம் கூறுகிறது. உடலில் தசை வளர்ச்சியை அதிகரிக்க புரதச்சத்து நிறைந்த உணவுகளான கோழி, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, முட்டை, மீன் போன்றவற்றைச் சற்று அதிகம் உண்டு மாவுச்சத்து நிறைந்த உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ளலாமென ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

இவை அனைத்தையும் ஒன்றிணைத்து செய்வதன் வழி நம் உடலை நாம் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளலாம். 

குறிப்புச் சொற்கள்