திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழும் ஒரு தம்பதியருக்குத் திடீரென்று குழந்தை ஒன்று பிறப்பதில் வரும் சமுதாய சிக்கல்களையும் மன அழுத்தத்தையும் காட்சியளிக்க ‘காதலிசம்’ என்ற உள்ளூர் திரைப்படம் அண்மையில் வெளியீடு கண்டது. திருமணம் மேல் நம்பிக்கை இல்லாத முக்குந்த் என்பவர் ஸ்மிதா என்பவரைக் காதலித்து வருகிறார். திருமணம் ஆகாத இவர்களுக்குக் குழந்தை பிறக்கும்போது என்ன நடக்கிறது என்பதுதான் கதைக் களம்.
சிங்கப்பூரில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், சந்தோஷ் நம்பிராஜன் என்பவர் இயக்கி முக்குந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹர்மீத் கோர் ஸ்மிதா என்ற கதாபாத்திரத்தில் அவருக்குத் துணையாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த நட்சத்திரம் பிரேம்குமார், 2020ல் இருந்து நடந்த படப்பிடிப்பின் சிரமங்களைத் தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டார்.
“படப்பிடிப்பு ஆரம்பித்த சில நாட்களிலேயே கொவிட்-19 தொற்றுநோய் பரவல் ஏற்பட்டது,” என்று மென்பொருள் பொறியாளரான நட்சத்திரம் பிரேம்குமார் கூறினார். முழுநேர வேலைகள் இருந்ததால் வார இறுதியில் மட்டும் படத்தைத் தொடர்ந்து எடுக்க முடிந்தது என்று குறிப்பிட்டார் பிரேம்குமார்.
“தொற்றுநோய் காலத்தில் முகக் கவசங்கள் அணியும் கட்டுப்பாடு இருந்தது. ஆனால் நடிகர்கள் நடிக்கும்பொது முகக் கவசங்கள் அணியத் தேவையில்லை என்ற அரசாங்க அனுமதி எங்களிடம் இருந்தாலும் படப்பிடிப்பின்போது அதிகாரிகள் உட்படப் பலர் எங்களைக் கேள்வி கேட்டனர்,” என்று பிரேம்குமார் நினைவு கூர்ந்தார்.
நேரப் பற்றாக்குறை, தொற்றுநோய் பரவல், ஓடிடி தளங்களில் திரைப்படத்தை விற்கும் சவால்கள் போன்றவற்றை எதிர்கொண்டதோடு படப்பிடிப்புக்குப் பிந்திய தயாரிப்புப் பணிக் குழுவில் ஒருவர் இறந்ததை நினைத்து வருந்தினார் பிரேம்குமார்.
ஓராண்டாக இந்தியாவில் படப்பிடிப்புக்குப் பிறகு நடக்கும் தயாரிப்புப் பணிகளில் இயக்குநரும் அவரின் குழுவும் ஈடுபட்டுள்ளனர்.
சமுதாயத்தில் நடக்கும் ஒன்றை எளிமையாகக் காட்டிய இந்தத் திரைப்படத்திற்கு இதுவரை நல்ல கருத்துகள் காதுக்கு எட்டியுள்ளதை எங்களிடம் பகிர்ந்து கொண்டார் பிரேம்குமார்.
சிங்கப்பூர் தயாரிப்பு நிறுவனமான சிங்காவுட்ஸ் புரோடக்ஷன்ஸ் இந்தத் திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. தற்போது ஆறு ஓடிடி தளங்களில் இத்திரைப்படத்தைக் காணலாம். சிங்கப்பூரில் ஹங்காம்மா இணையத்தளத்தில் கண்டு ரசிக்கலாம்.


