தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுவர்களை ஈர்க்கும் தின்பண்டங்கள்

3 mins read
44eac4ff-5782-4765-a137-e4642616f6f9
யுனிவர்சல் ஸ்டுடியோஸ் சிங்கப்பூரில் உள்ள கேடி கிரில் உணவகத்தில் விற்கப்படும் தின்பண்டம் - படம்: யுனிவர்சல் ஸ்டுடியோஸ் சிங்கப்பூர்

அனுஷா செல்வமணி

பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்குச் சுவையான தின்பண்டங்களை வாங்கி வீட்டில் வைத்திருப்பது வழக்கம். பிள்ளைகளின் கவனத்தை ஈர்க்கவும் பிள்ளைகள் தொடர்ந்து சுறுசுறுப்பாக செயல்படவும் தின்பண்டங்கள் வெகுவாகவே கைகொடுக்கும் என்பது காலந்தொட்டுவரும் நம்பிக்கை.

பெரியவர்களைப்போல குழந்தைகள் ஓர் உணவை முழுமையாகச் சாப்பிட முடியாமல் போவதால் அந்த உணவில் அடங்கியுள்ள சத்துகள் குழந்தைகளுக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை. ஆகவே குழந்தைகளும் சிறுவர்களும் கட்டாயம் தின்பண்டங்கள் சாப்பிட வேண்டும்.

பெரும்பாலான கடைகளில் சிறுவர்களை ஈர்க்கும் வகையில் சுகாதாரமற்ற தின்பண்டங்களே விற்கப்படுகின்றன. இனிப்புகள், சுவையூட்டிகள் அடங்கியுள்ள தின்பண்டங்கள் போன்ற உணவு வகைகளுக்குக் குழந்தைகள் காந்தம்போல இழுக்கப்படுவதோடு, பெற்றோர்களும் பிள்ளைகளின் விருப்பத்துக்கு இணங்கிவிடுகின்றனர்.

விடுமுறைக் காலம் எனில் சொல்லவே தேவையில்லை. சிறுவர்களுக்குப் பள்ளி விடுமுறையின்போது முழுமையான சுதந்திரம் அளிக்க முற்படும் பெற்றோர்கள் குழந்தைகள் தேர்ந்தெடுக்கும் விடுமுறை நடவடிக்கைகளிலிருந்து, அவர்கள் விரும்பிக் கேட்கும் தின்பண்டங்கள் வரை அனைத்து ஆசைகளையும் நிறைவேற்ற முயல்கின்றனர்.

சிறு வயது என்பதால் குழந்தைகள் எவ்வாறு சாப்பிட்டாலும் அவர்கள் சுறுசுறுப்பாக இருக்கும் நிலையில், சுகாதாரமற்ற தின்பண்டங்கள் அவர்களின் உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்காது என்பது ஒரு தவறான கருத்து. சிறு வயதிலிருந்தே சுகாதாரமற்ற உணவுப்பழக்கத்துக்கு அறிமுகமானால் அது சிறுவர்கள் வளர்ந்து வரும் போது அவர்களின் சுகாதாரத்தைப் பாதிக்கக்கூடும்.

அவ்வாறு இருக்கையில் சிறு வயதிலேயே குழந்தைகள் சுகாதாரமற்ற உணவுப் பழக்கத்துக்கு அடிமையாகாமல் இருக்கும் வகையில் பெற்றோர்கள் சத்து நிறைந்த, சுகாதாரமான தின்பண்டங்களை வீட்டிலேயே செய்து பிள்ளைகளுக்குத் தருமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

உணவு வலைப்பதிவாளராக இருக்கும் திருவாட்டி அனுஷா ராஜகோபால், 35, பெற்றோர்களுக்கு சில நலக் குறிப்புகளைப் பகிர்ந்துக்கொண்டார். பல வண்ணங்கள் நிறைந்த காய்கறிகளையும், பழங்களையும் குழந்தைகள் உட்கொள்வதன் மூலம் பல்வேறு சத்துகள் கிடைப்பதோடு, குழந்தைகள் கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் இருக்கும் உணவுவகைகளைச் சாப்பிட மறுக்க மாட்டார்கள் என்றார் திருவாட்டி அனுஷா.

சமைத்த பருப்புவகைகளைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது ஒரு சிறப்பான முறையாகும். ‘சாக்லெட் ஸ்மூத்தி’ போன்ற சுவைபானங்களில் சமைத்த பருப்புகளைச் சேர்க்கும்போது சிறுவர்களுக்குப் பருப்பில் இருக்கும் புரதச் சத்து கிடைக்கின்றது.

பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் காலையில் வாட்டிய ரொட்டியைப் பொதுவாக இனிப்பான பழப்பாகில் (fruit jam) கலந்து உட்கொள்வது வழக்கம். அதற்குப் பதிலாக வாட்டிய ரொட்டியுடன் கிரேக்க தயிரைக் கலந்து சிறிதளவு தேனோடு சேர்த்து, கூடவே ஒரு பழத்தோடும் சியா விதைகளோடும் சேர்த்து உண்டால் ஏராளமான சத்துகள் கிடைக்கும் என்றார் அனுஷா.

சாதாரண ரொட்டியை உட்கொள்வதற்குப் பதிலாக குழந்தைகள் சிறுவயதில் இருக்கும் முழு தானிய ரொட்டிக்கு அறிமுகமாகுவது சிறந்தது என்ற அவர், அதில் அதிகமான ஊட்டச்சத்துகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மூன்று வயது மகளுக்குத் தாயாக இருக்கும் திருவாட்டி அனுஷா, தன் மகளுக்கும் இதுபோன்ற சுகாதார உணவுப் பழக்கங்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.

சிறார்களிடம் உடல்பருமன் அதிகம் காணப்படுவதாக அண்மையில் தெரியவந்துள்ளது. 18 வயதுக்குக்கீழ் இருக்கும் இளையர்களில் 2017ல் 13 விழுக்காட்டினர் உடல் பருமனாக இருந்ததாகக் கண்டறியப்பட்டது. ஆனால், அது 2021ல் 16 விழுக்காட்டுக்கு உயர்ந்ததாக சுகாதார அமைச்சு சுட்டியது.

சிறுவயதிலேயே அதிக தின்பண்டங்கள் உட்கொண்ட காரணத்தால் 18 வயதை அடையும்போது இளையர்களிடம் உடல் பருமன் பிரச்சினை தலைகாட்டத் தொடங்குகிறது. இதனைத் தவிர்க்க, பெற்றோர்கள் சிறு வயதிலேயே தங்கள் பிள்ளைகளிடம் சரியான உணவு பழக்கத்திற்கு அறிமுகப்படுத்துவது நன்மை பயக்கும்.

குறிப்புச் சொற்கள்