‘இசை மின்னல்’ ஹாரிஸ் ஜெயராஜ் 3.0, 4.0 எனும் இசை நிகழ்ச்சிகள் சென்ற வாரயிறுதியில் கோலாலம்பூரில் நடைபெற்றன.
இதற்குமுன் இருமுறை கோலாலம்பூரில் நிகழ்ச்சி படைத்த ஹாரிஸ் ஜெயராஜ், ரசிகர்களின் விருப்பத்துக்கு இணங்க இவ்விரண்டு புதிய நிகழ்ச்சிகளை பிப்ரவரி மாதத்தில் அறிவித்தார். ஹாரிஸ் ஜெயராஜ் 3.0 நிகழ்ச்சி சனிக்கிழமை (17/06) நடைபெற்றது. ஹாரிஸ் ஜெயராஜ் 4.0 நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (18/06) இடம்பெற்றது.
இருபது ஆண்டுகளாக திரைப்படங்களுக்கு இசையமைத்துவரும் ஹாரிஸ் ஜெயராஜ், தமது பாடல்களைப் படைத்ததோடு சிலவற்றை இசைமாற்றி வேறு வகையில் வாசித்தும் ரசிகர்களைக் கவர்ந்தார்.
புகழ்பெற்ற திரையிசைப் பின்னணிப் பாடகர்கள் ஹரிணி, திப்பு, கார்த்திக், கிருஷ், நரேஷ் ஐயர், ஹரிச்சரண், ‘சூப்பர் சிங்கர்’ புகழ் திவாகர், ஸ்ரீதர் சேனா, ஹரிப்பிரியா, விஷ்ணுபிரியா ரவி ஆகியோர் கலந்துகொண்டு மேடையை அதிர வைத்தனர்.
புக்கிட் ஜலீலில் இருக்கும் அக்சியாட்டா அரினா அரங்கத்தில் நடந்த ஐந்து மணி நேர இசை விருந்தை இருநாள்களிலும் 20,000க்கு மேற்பட்டோர் கண்டு, கேட்டு இன்புற்றனர். கோலாலம்பூர் மட்டுமன்றி மற்ற நாடுகளிலிருந்தும் ரசிகர்கள் வந்திருந்தனர்.
நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்க்கும் விதமாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கலந்துகொண்டார். தமது ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தின் ‘அஞ்சலை’ பாடலுக்கு மேடையில் ஆடிப் பாடி மக்களை அசத்தினார் இயக்குநர் கௌதம். புகழ்பெற்ற நடிகைகள் மிருணாளினி ரவியும் அனு இமானுவெலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் நிகழ்ச்சிக்குமுன் டார்க்கீ, ஏமஸ் பால், ஹேவக் பிரதர்ஸ் போன்ற புகழ்பெற்ற மலேசியக் கலைஞர்கள் படைத்த ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் மக்களை உற்சாகப்படுத்தின.
தொழில்நுட்பக் கோளாறுகளால் நிகழ்ச்சி தாமதமாகத் தொடங்கியதால் ரசிகர்களுக்குப் பிடித்த பாடல்கள் நிகழ்ச்சியில் இடம்பெறவில்லை என்று வருத்தத்துடன் கூறினார் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த மைதிலி எம்.
தொடர்புடைய செய்திகள்
“இதற்குமுன் நடந்த நிகழ்ச்சிகளில் இடம்பெற்ற காலத்தால் அழியாத, நம் நினைவுகளில் என்றும் பதிந்திருக்கும் சில பாடல்கள் இசைக்கப்பட்டன. அவற்றை நேரில் கேட்க ஆவலுடன் இருந்த எங்களுக்கு பெரும் ஏமாற்றம். எனினும், ஹாரிஸ் ஜெயராஜின் விசிறியாக அவர் பாடல்களை நேரடியாகக் கேட்டதில் மகிழ்ச்சி” என்று மைதிலி கூறினார்.
ஹாரிஸ் ஜெயராஜ் 4.0 நிகழ்ச்சிக்குச் சென்றவர்கள் இதுபோன்ற சிக்கல்களை எதிர்நோக்கவில்லை என்று குறிப்பிட்ட திவ்யா, சிங்கப்பூரிலிருந்து முதன்முறையாக நிகழ்ச்சிக்காகவே கோலாலம்பூருக்குச் சென்றிருந்தார்.
சிங்கப்பூர் இந்தியர்கள் பலரும் மலேசியாவில் ஒன்றுகூடியது குறித்து அவர் வியந்தார்.
“90களில் பிறந்தவர்களின் மனங்களில் இப்பாடல்கள் நீங்கா இடம்பெற்றுள்ளன. இசை விருந்தாக மெய்சிலிர்க்க வைத்த இந்நிகழ்ச்சியை மறக்க முடியாது,” என்றார் திவ்யா.


