தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டமாக செயற்கை நுண்ணறிவு அன்றாட வாழ்க்கையில் அங்கம் வகிக்கத் தொடங்கிவிட்டது. தரவுப் பகுப்பாய்வு, இயந்திரக் கற்றல்முறை என, பணியின் தரத்தை மேம்படுத்தும் பல தொழில்நுட்பங்களை பல்வேறு துறையினரும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
வரைகலையும் இதற்கு விதிவிலக்கல்ல என்கிறார் ஓவியர் ரெஃபிக் அனடால். துருக்கியில் பிறந்து லாஸ் ஏஞ்சலீசில் பணியாற்றும் இவர், இயந்திரக் கற்றல்முறை மூலம் ‘டேட்டா பெயின்ட்டிங்’ எனப்படும் சிந்தனையைத் தூண்டும் கலைப் படைப்புகளை உருவாக்கி வருகிறார்.
கூகல், என்விடியா போன்ற முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் அனடாலுக்கு உண்டு. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட பல்வேறு விதமான தரவுகளுக்கு இவர் கலை வடிவம் அளித்து வருகிறார்.
பொதுவான பார்வையில் தகவல்களாகத் தோன்றக்கூடிய தரவுகளைத் தொகுத்து, மின்னிலக்கச் சிற்பங்களாக வடிவமைப்பதன் மூலம் சமகால வரைகலை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார் அனடால்.
தொடக்கத்தில் தரவுத் தொகுப்புகளை ஓவியமாகக் காட்சிப்படுத்திய இவர், தொடர்ந்து நிகழ்நேர ஓவியங்களை உருவாக்கி, வரைகலையின் புதிய எதிர்காலத்திற்கான பாதையை அமைத்துவருகிறார்.
‘வால்ட் டிஸ்னி கான்செர்ட் ஹால் டிரீம்ஸ்’:
கூகல் கலை, கலாசாரப் பிரிவின் உதவியுடன் 40,000 மணிநேர இசை ஒலிப்பதிவுத் தரவுகளைத் தொகுத்து, அதில் முக்கியமானவற்றை செயற்கை நுண்ணறிவு மூலம் கண்டறிந்து, அவற்றைக் கோத்து 42 ஒளித்திரைகளில் காட்சிப்படுத்தியிருக்கிறார் அனடால்.
வால்ட் டிஸ்னி கான்செர்ட் ஹால் அரங்கின் வெளிப்புறத்தில் இந்தப் படைப்பு திரையிடப்பட்டது. நிகழ்ச்சி, கனவுலகத்திற்கு அழைத்துச் செல்லும் விதமாக அமைந்திருந்ததாகப் பார்வையாளர்கள் கூறினர்.
‘இன்டெர்கனெக்டெட்’
மேலும், அமெரிக்காவின் சார்லட் டக்ளஸ் அனைத்துலக விமான நிலையத்தின் பல்வேறு தரவுகளைத்தொகுத்து, மூன்று உயர் வரையறை திரைகளில் வண்ணமயமான நிகழ்நேர ஓவியமாக காட்சிப்படுத்தியுள்ளார் அனடால்.
தொடர்புடைய செய்திகள்
விமானப் போக்குவரத்துக் கண்காணிப்பு மென்பொருள், விமானங்களின் வருகை, புறப்பாடு குறித்த தகவல், பயணப்பைகளைக் கையாளும் அமைப்புகள், வாகன நிறுத்துமிடம், விமான நிலைய தரைப் போக்குவரத்து போன்றவை தொடர்பான தரவுகள் அவற்றில் அடங்கும்.
ஏறத்தாழ 44 மில்லியன் பயணிகளின் தரவுகளை காட்சிப்படுத்திய இந்தப் படைப்பு, கவித்துவமான மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி காண்போரை பிரமிக்க வைத்தது.
அர்டிபிசியல் ரியாலிட்டி - கோரல்
பவளப் பாறைகளின் விரிவான தரவுத்தொகுப்பை பயன்படுத்தி ஒரு தரவுச் சிற்பத்தை உருவாக்கிருக்கிறார் அனடால். பருவநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அதன் நோக்கம்.
ஆழ்கடல் பரப்பும் பவளப்பாறைகளும் எதிர்கொள்ளும் பாதிப்புகளைப் படம்பிடித்துக் காட்டும் வகையில், ஏறத்தாழ 100 மில்லியன் படங்களின் மூலத் தரவுகளைப் பயன்படுத்தி இந்த முப்பரிமாண வரைபடத்தை அனடால் உருவாக்கியுள்ளார்.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் காட்சிக் கலைகளை இணைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தக் கலைப்படைப்பு கண்ணைக் கவரும் விதமாக அமைந்துள்ளது. பவளப்பாறைகளின் பாதுகாப்பையும் நீடித்த நிலைத்தன்மையையும் இது வலியுறுத்துகிறது.
“பார்வையாளர்கள் சிறந்த சுற்றுச்சூழலை உருவாக்குவது குறித்து பேசித் தெரிந்துகொள்வதைவிட, மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் நீருக்கடியில் மூழ்கி நேரடியாகத் தெரிந்துகொள்வதுபோன்ற அனுபவத்தைப் பெற கோரல் உதவுகிறது,” என்கிறார் அனடால்.