நம் பாதங்களின் நிலையைக் கொண்டு நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பற்றி அறிந்துகொள்ள முடியும். குறிப்பாக, முக்கியமான எச்சரிக்கை அறிகுறிகளை நம் பாதங்கள் குறிக்க வல்லவை. எனவே, பாதங்களைத் தினமும் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கிராஸ்மேன் மருத்துவப் பள்ளி எலும்பியல் அறுவை சிகிச்சைப் பிரிவின் உதவிப் பேராசிரியர் மருத்துவர் பால் க்ரீன்பெர்க் குறிப்பிட்டார்.
நம் பாதங்கள் ஒளி படாமல் சில நேரங்களில் காலுறைக்குள் அல்லது காலணிக்குள் புதைந்து கிடக்கலாம். கோடைக் காலத்தில் அவ்வாறு செய்ய இயலாது.
ஆண்டுக்கு ஒரு முறை நம் பாதங்களை நன்குக் கவனித்து ஆராய்வதைவிட அடிக்கடி அவ்வாறு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஹாவர்ட் பல்கலைக்கழக மருத்துவமனையின் பாத மருத்துவப் பிரிவின் தலைவர் மருத்துவர் கிர்க் கெட்டர் கூறுகையில் திடீரென வீங்கும் பாதங்கள் உயர் ரத்த அழுத்தத்தைக் குறிக்கலாம் என்றும் கூடுதல் பாத வீக்கமானது வாதம் அல்லது சிறுநீரகக் கோளாறுகளின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் கால்களில் உணர்வின்மை நீரிழிவு நோயைக் குறிக்கலாம் எனவும் கூறினார்.
எனவே, ஒவ்வொரு நாளும் கால்களின் மேல் அடிப்பகுதியில் கால்விரல்களுக்கு இடையிடையே சோதித்துப் பார்த்திட வேண்டும் என்றார் மருத்துவர் கெட்டர்.
மேலும், கால்விரல்களைச் சுற்றி வளைத்து அசைத்துப் பரிசோதிக்க வேண்டும் என்றும் சருமத்தில் விரிசல், சிவந்தல், நகங்களில் நிற மாற்றம், உணர்வின்மை, ஆறாத புண்கள், வீக்கம் ஆகியவை உள்ளனவா என்றும் பரிசோதிக்க வேண்டும் என்று கூறினார்.
ஏதேனும் தவறாக இருப்பதாக தோன்றினால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது அவசியமாகும். பாதங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கச் சில வழிகள்:
சரியான காலணிகள் முக்கியம்
பெரும்பாலான காலணிகள் கால் வளைவு, குதிகால் கணுக்கால் பகுதிகளைச் சரியான முறையில் பிடித்துப் பாதுகாப்பதில்லை என்று சிகாகோவில் உள்ள ‘ரோசலிண்ட் ஃப்ராங்க்ளின்’ மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மருத்துவர் ஸ்டெபானி வூ கூறினார். மேலும் அவற்றை அணிவது, பாத வளைவு பகுதியில் வலி, பாதத்தின் அடிப்பகுதியில் உள்ள இறுக்கமான திசுக்களின் வீக்கத்தினால் வரும் ‘பிளான்டர் ஃபாஸ்சிடிஸ்’ போன்ற பல பாத நோய்களை மோசமாக்கும் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு
பொது நீச்சல் பகுதிகள், பொது பாதுகாப்புப் பெட்டக அறைகள் ஆகிய வெப்பமான, ஈரமான பகுதிகள் நுண்ணுயிரிகளால் நிரம்பி இருக்கும்.
அவ்விடங்களில் காலணிகள் இன்றி நடப்பது பாதங்களைத் தொற்றுநோய்க்கு ஆளாக்குகிறது எனவும் அவை சேற்றுப்புண் ஆலை மருக்கள் போன்ற தொற்றுகளுக்கு வழிவகுக்கும் என்றும் கூறினார் மருத்துவர் வூ. அப்பகுதிகளில் நீர்புகா காலணிகளை அணிந்து நடக்கப் பரிந்துரைத்தார்.
மேலும், கடற்கரையில் வெறுங்காலுடன் நடப்பது மகிழ்ச்சிதான் என்று கூறிய பல்வேறு நோயாளிகளின் கால்களில் இருந்து கடல் முட்கள் ஓடுகளைப் பிரித்தெடுத்த மருத்துவர் கெட்டர், கடற்பகுதிகளில் தண்ணீர் காலணிகளை அணியப் பரிந்துரைத்தார்.
சரியான முறையில் காலணி அணிபவர்களுக்கும் பாதங்களில் தூசு படியும். எனவே, நோய்கள் மட்டுமின்றி சுகாதாரத்தையும் கருத்தில் கொண்டு வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் பாதங்களைக் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது கிருமிகளை அழிக்க உதவும் என்றும் மருத்துவர் கெட்டர் கூறினார்.
சரும பாதுகாப்பு அவசியம்
சரும பாதுகாப்பு திரவத்தை முகத்தில் பயன்படுத்துவதோடு பாதங்களுக்கும் பயன்படுத்துவதை உறுதிசெய்யுங்கள் என்று ‘மவுண்ட் சினாய்’ மருத்துவமனையின் தோல் மருத்துவ உதவி பேராசிரியர் மருத்துவர் ரோஸ்மேரி இங்க்லெடன் கூறினார். நம் உடலின் மற்ற பகுதிகளில் உள்ள சருமத்தைப் போலவே, உள்ளங்கால்கள் பாதங்களின் மேற்பகுதி ஆகியவை வெங்குரு தோல் புற்றுநோய் போன்றவற்றிற்கு ஆளாகின்றன.
அமெரிக்கன் பாத மருத்துவ சங்கத்தின் கூற்றுப்படி கால் நகங்கள் உட்பட பாதத்தின் எந்தப் பகுதியிலும் தோல் புற்றுநோய் உருவாகலாம். எனவே, ‘எஸ்பிஎப்’ அளவு குறைந்தபட்சம் 30 உள்ள சரும பாதுகாப்பு திரவத்தைத் தேர்வு செய்து, நீங்கள் வெயிலில் செல்லும்போது அடிக்கடி பயன்படுத்த மறக்காதீர்கள்.