ஏறத்தாழ 50 விழுக்காடு சிங்கப்பூரர்கள் நல்ல வேலை-வாழ்க்கைச் சமநிலைக்காக தங்கள் வேலையை விடவும் தயாராக இருக்கிறார்கள் என்று அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது.
‘ரான்ஸ்டெட்’ எனும் ஆய்வு நிறுவனம் 32 உலக நாடுகளில் உள்ள 163,000 பணியாளர்களிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. 18 முதல் 65 வயது வரை உள்ள 2,753 சிங்கப்பூரர்கள் கலந்துகொண்ட இந்த கணக்கெடுப்பு முடிவு, இங்கு பணிபுரியும் வெவ்வேறு தலைமுறை பணியாளர்களின் எதிர்பார்ப்புகளைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
இந்த ஆய்வு முடிவு உலகெங்கிலும் திறமைக்கேற்ற வேலை, பணியின் நிலைத்தன்மை, தகுந்த ஊதியம், வளர்ச்சி வாய்ப்புகள், சிறந்த தலைமைத்துவம் ஆகியவை முக்கியமானதாக கருதப்பட்டாலும், மக்கள் வேலை-வாழ்க்கைச் சமநிலைக்கே முதலிடம் கொடுப்பதாக குறிப்பிடுகிறது.
சிங்கப்பூரில் வாழ்க்கைச் செலவுகள், பணவீக்கம் ஆகியவை அதிகரித்த போதிலும், 41 விழுக்காடு பணியாளர்கள் தங்களுக்கு பிடித்தவற்றைச் செய்யவும் பிடித்தமானவர்களுடன் நேரத்தை செலவிடவும் இடையூறளிக்காத வேலைகளைத் தேடுகிறார்கள் என்று இந்த ஆய்வு கூறியுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு வரை அதிகரித்திருந்த பணியிழப்பு குறித்த அச்சம் 2023ஆம் ஆண்டில் நான்கு விழுக்காடு குறைந்துள்ளது, இதன் பின்னணியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மாறிவரும் முக்கியத்துவங்கள்
கடந்த 2021, 2022ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளில் தகுந்த ஊதியமும் இதர பலன்களும் எதிர்பார்ப்புகளாகப் பெரும்பாலானோர் குறிப்பிட்டிருந்த நிலையில், 2023ஆம் ஆண்டு வேலை-வாழ்க்கைச் சமநிலையை அதிகம் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நல்ல பணியிட உறவு, ஊழியர்களின் மகிழ்ச்சிக்குப் பங்களிக்கிறது என்று குறிப்பிடும் இந்த ஆய்வு, பணியமர்த்தும் நிறுவனங்கள் ஊழியர்களின் மன, உடல் நலனை ஊக்குவிக்கும் வகையில் நல்ல பயிற்சித் திட்டங்கள் வழங்க உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறது.
‘ஹைப்ரிட்’ எனப்படும் கலப்பு வேலைமுறை மூலம், ஊழியர்கள் தங்கள் வேலை, வாழ்க்கை இரண்டிலும் பொறுப்புகளைச் சமநிலைப்படுத்தும் வகையில் நேரத்தைச் சிறப்பாகக் கட்டுப்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
திறன் மேம்பாடு, தொழில் வளர்ச்சி, பாதுகாப்பான பணிச்சூழல், பாகுபாடற்ற ஊதியக் கொள்கை, மனநலம் என மாறி வரும் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் பொருந்த வேண்டிய பொறுப்பு முதலாளிகளுக்கு உள்ளது என்கிறது இந்த ஆய்வு.