தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமூகத்திற்குப் பங்களிக்க ரோட்டரி சங்க உறுப்பினர்கள் ஆவல்

2 mins read
52df61f1-330e-4703-b1c7-96c324d6a03d
ரோட்டரி சங்கத்தில் புதிய வேகத்துடன் செயல்பட (வலமிருந்து) ப்ரிவீன் சூரஜ் சாந்தகுமார், முகுந்தன் அப்பாதுரை பரமசிவன், ராஜ் குமார் பெருமாள் சுப்பையா ஆகியோர் தயாராக நிற்கின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சனிக்கிழமை ஜூன் 24ஆம் தேதியன்று நியமனம் செய்யப்பட்டனர். ரிட்ஸ் கார்ல்ட்டன் ஹோட்டலில் நடைபெற்ற நியமன விழாவில் 17 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்றனர். தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

கிட்டத்தட்ட 1.2 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பின் சிங்கப்பூர் கிளை, கடந்த 90 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. வசதி குறைந்தோர், உடற்குறையுள்ளோர், சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்டோர் ஆகியோரின் நலனுக்காக இந்தச் சங்கம், சிங்கப்பூரில் பல்வேறு திட்டங்களையும் அமைப்புகளையும் தொடங்கி செயல்படுத்தி வருகிறது.

சிங்கப்பூர் காசநோய் எதிர்ப்புச் சங்கம், சிங்கப்பூர் அறிவுத்திறன் குன்றிய பிள்ளைகள் சங்கம் என இந்த சங்கத்தால் நிறுவப்பட்ட பல்வேறு சங்கங்கள் தற்போது தனித்து இயங்குகின்றன அல்லது அரசாங்க நிர்வாகத்தின்கீழ் இயங்குகின்றன.

சங்கத்தின் புதிய தலைவராகப் பதவியேற்ற டாக்டர் சான் சியூ லுவென், கொவிட்-19 கிருமிப்பரவல் சிங்கப்பூரில் தொடங்கியபோது சங்கத்தினர் மும்முரமாகச் செயல்பட்டதை நினைவுகூர்ந்தார். அப்போது வெளிநாட்டு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட உதவிகளை தற்போது ‘அலையன்ஸ் ஆஃப் கெஸ்ட் வொர்க்கர்ஸ் அவுட்ரீச்’ என்ற அமைப்பின்மூலம் தொடர்வதாக அவர் குறிப்பிட்டார்.

புதிதாகப் பொறுப்பேற்ற அவை உறுப்பினர்களில் ஒருவரான ஐபிசி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ராஜ் குமார் பெருமாள் சுப்பையா, 52, 10 ஆண்டுகளாக ரோட்டரி சங்கத்தில் உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார். பிறரையும் சங்கத்தில் சேர்ந்து முடிந்தவரை பங்காற்ற ஊக்குவிக்கிறார்.

திரு ராஜ்குமாருடன் பொறுப்பைப் புதிதாக ஏற்றுள்ள இளையர் ப்ரிவீன் சூரஜ் சாந்தகுமார், 35, இந்தப் பொறுப்பின்மூலம் மன்றம் எப்படி செயல்படுகிறது என்பதையும் தாம் ஆற்ற விரும்பும் உதவியைப் பரந்த சமுதாயத்திற்கு எப்படி சென்றடையச் செய்வது என்பது பற்றியும் மேலும் புரிந்துகொள்ள முடியும் என நம்புகிறார்.

கடந்த ஆண்டு போலந்து சென்று உக்ரேனிலிருந்து தப்பி வந்த போர் அகதிகளுக்கு உணவு சமைத்து உதவிக்கரம் நீட்டிய திரு ப்ரிவீன், ரோட்டரி சங்கத்தின் அகண்ட தொடர்பு வட்டத்தின் துணைகொண்டு மிக நேரடியாக உதவ இயன்றதாகக் கூறினார்.

சங்கத்தின் மற்றோர் உறுப்பினரான ஏபிஜே தரவு அறிவியல் நிறுவனத்தின் துணைத் தலைவர் முகுந்தன் அப்பாதுரை பரமசிவன், புதிய பணித்திட்டம், தொழில்சார்ந்த தொடர்பு வட்டங்களை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் போன்றவற்றை சங்கம் ஏற்படுத்தித் தருவதாகக் கூறினார்.

இந்தியாவில் பல தலைமுறையாக தம் குடும்பத்தினர் ரோட்டரி சங்கத்தில் சேவையாற்றி உள்ளதாகக் கூறிய திரு முகுந்தன், இந்தச் சேவையின் மூலம் பொறுப்புணர்வையும் பிறர்மீதான பரிவையும் வளர்த்துக்கொண்டார்.

இவ்விழாவில் பங்குகொண்டதில் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருப்பதாகக் கூறிய கோயம்புத்தூர் சங்கத்தைச் சேர்ந்த வர்த்தகர் லிமா ரோஸ் மார்டின், “சிங்கப்பூர் அமைப்புகளுடன் மேலும் பல்வேறு கூட்டு முயற்சிகளில் இணைய விரும்புகிறோம்,” என்றார்.