சோயா எண்ணெய்யை அதிகமாக உட்கொள்வதால் உடல் பருமன், நீரிழிவு நோய், மன இறுக்கம், நினைவாற்றல் இழப்பு, பதற்றம், மனச்சோர்வு, ஒருவகையான பெருங்குடல் அழற்சி போன்றவை ஏற்படுவதாக கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.
24 வாரங்கள் வரை சோயா எண்ணெய் அதிகம் உள்ள உணவு தொடர்ந்து அளிக்கப்பட்ட எலிகளின் குடலை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் குறைந்து, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அதிகரித்ததை அவர்கள் கண்டறிந்தனர். இது பெருங்குடல் அழற்சிக்கு வழிவகுக்கும் நிலைமையாகும்.
இந்தியா, பிரேசில், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்யாக சோயா எண்ணெய் உள்ளது.
அமெரிக்காவில் 1970களில் கால்நடை தீவனமாக சோயா உற்பத்தி சூடுபிடிக்கத் தொடங்கியது. சோயா தீவனத் தயாரிப்பின் விளைபொருள்களில் ஒன்றாக சோயா எண்ணெய் தயாரிக்கப்படத் தொடங்கியதும், சோயா பயிரிடுவது மேலும் அதிகரித்தது. புரதச் சத்து நிறைந்த சோயாவை வளர்ப்பது எளிதானது, மலிவானது.
பல நாட்பட்ட நோய்கள், விலங்குப் பொருள்களில் இருந்து பெறப்படும் கொழுப்பை உட்கொள்வதால் ஏற்படுகின்றன.
மாறாக, தாவரங்களில் உள்ள நிறைவுறாக் கொழுப்புகள் நலம் தருபவை என்ற நீண்டகாலச் சிந்தனைக்கு தங்கள் பணி சவாலாக இருப்பதாக அப்பல்கலைக்கழகத்தின் உதவி தொழில்முறை ஆய்வாளர் பூனம்ஜோத் தியோல் கூறியுள்ளார்.
‘குட் மைக்ரோப்ஸில்’ இதழில் ஜூலை 3ஆம் தேதி வெளிவந்த லினோலிக் அமிலம் பற்றிய கட்டுரையை எழுதியவர்களில் இவரும் ஒருவர்.
சோயா எண்ணெய்யில் உள்ள லினோலிக் அமிலம் முக்கிய கவலையாக இருப்பதாக தியோல் விளக்கினார்.
லினோலிக் அமிலம் உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களில் ஒன்று. ஆய்வாளர்கள் சோதனைகளில் பயன்படுத்திய சோயா எண்ணெய்யில் 19% லினோலிக் அமிலம் இருந்தது.
இதய நலத்துக்கு லினோலிக் அமிலம் போன்ற ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களிலிருந்து பெறப்படும் கலோரிகளில் 5 முதல் 10% வரை இருக்க வேண்டும் என்று அமெரிக்க இதய சங்கம் பரிந்துரைக்கிறது. குங்குமப்பூ, சூரியகாந்தி போன்ற விதைகளிலிருந்து பெறப்படும் எண்ணெய்களிலும் விலங்குக் கொழுப்பிலும் லினோலிக் அமிலம் உள்ளது. உள்ளது.
“நம் உடலுக்கு அன்றாடம் 1-2% லினோலிக் அமிலம் தேவை. அமெரிக்கர்கள் சராசரியாக 8-10% லினோலிக் அமிலத்தை அன்றாடம் உண்கிறார்கள். அதில் பெரும்பாலானவை சோயா எண்ணெய்யில் இருந்து பெறப்படுபவை. அதிகப்படியான லினோலிக் அமிலம் குடல் நுண்ணுயிரியை எதிர்மறையாகப் பாதிக்கிறது,” என்று அவர் கூறினார்.
குடலில் உள்ள பல நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் லினோலிக் அமிலத்தைத் தாங்க முடியாமல் இறந்துவிடுகின்றன, இதன் விளைவாக தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் வளரும்.
அமெரிக்காவின் பெரும்பாலான பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோயா எண்ணெய் சேர்க்கப்பட்டுள்ளது, பரிந்துரைக்கப்பட்ட அன்றாட அளவைவிட பல அமெரிக்கர்களின் உடலில் அதிகமான அளவில் லினோலிக் அமிலம் இருப்பதற்கு இது காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். மேலும், அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான உணவகங்கள் சோயா எண்ணெய்யைப் பயன்படுத்துகின்றன.
சமைப்பதற்கும் சாலட் செய்வதற்கும் ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், அவகாடோ எண்ணெய் போன்ற லினோலிக் அமிலம் குறைந்த எண்ணெய்யைப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர்.
“லினோலிக் அமிலம் குறைவாக உள்ள ஆலிவ் எண்ணெய் நலம் தருவதாகக் கருதப்படுகிறது. சோயா எண்ணெய்யைப் போல இல்லாமல், இது எலிகளிடம் பெருங்குடல் அழற்சி பாதிப்பை ஏற்படுத்தவில்லை,” என்று ஆய்வறிக்கை குறிப்பிட்டது.
அதேநேரத்தில் சோள எண்ணெய்யை தவிர்க்குமாறு கூறுகிறார்கள். சோயா எண்ணெயில் உள்ள அதே அளவு லினோலிக் அமிலம் சோள எண்ணெய்யிலும் உள்ளது என்று அவர்கள் எச்சரித்தனர்.

