வழக்கறிஞர் சுமதியுடன் ஓர் உரையாடல்

2 mins read
1079b900-324e-4f16-a06a-4dabaabe4bf4
தான் சந்தித்த வழக்குகளை கட்டுரைகளாக தொகுத்து எழுதிய வழக்கறிஞர் சுமதி தனது அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார். - படம்: தேசிய நூலக வாரியம்

ஒரு வழக்கறிஞராக அவர் சந்தித்தவர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து  கட்டுரைகளாக எழுதி ரௌத்திரம் பழகு என்ற தலைப்பில் நூலை வெளியிட்டுள்ள திருவாட்டி சுமதி கடந்த சனிக்கிழமை அன்று சிறப்புரை ஒன்றை ஆற்றினார்.

அறியாமையாலும் சார்ந்திருப்பதாலும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் குடும்ப வாழ்க்கை, வேலைக்கு செல்லும் பெண், அவசர காதல், போதைப்பொருள் பயன்பாடு, தற்கொலை என சமூகத்தில் பரவலாக உள்ள பிரச்சினைகளையும் சட்டத்தின் பார்வையில் முன்னிறுத்தி இந்த நூலில் கலந்துரையாடி வாசகர்களை சிந்திக்க வைத்துள்ளார். 

சிங்­கப்­பூ­ரில் வாசிப்­புப் பழக்­கத்தை மேம்­ப­டுத்­தும் நோக்­கத்­து­டன் தேசிய நூலக வாரியம் ஏற்பாடு செய்யும் வாசிப்பு விழாவை முன்னிட்டு இந்த சிறப்புரை இணையம் வழி நடந்தது. 

இந்த நூல் உட்பட தனது மற்ற நூல்களை எழுதிய நோக்கத்தையும் அனுபவத்தையும் நிகழ்ச்சியின் சிறப்புரையில் திருவாட்டி சுமதி பகிர்ந்துகொண்டார்.  

“பெண் எழுத்தாளர்கள் பெண்களின் சிக்கல்களை பற்றி மட்டும் எழுதுவார்கள் என்ற தவறான எண்ணத்தை நாம் அகற்ற வேண்டும். பெண் எழுத்தாளர் என்ற அடையாளம் அவர்களின் நூலை எடுத்து படிக்கத் தடையாக இருக்கக்கூடாது” என்று பாலியல் தொடர்பான சமூதாய சிக்கல்களின் நுணுக்கங்களை எடுத்துரைத்தார் சுமதி. 

அவர் சந்தித்த உண்மை வழக்குகள், ஓர் இளம் வழக்குரைஞராக அவர் பெற்ற அனுபவங்கள், படித்த செய்திகள் இந்த கட்டுரைகளை செதுக்கியுள்ளதையும் பகிர்ந்துகொண்டார். 

மேலும், பெண்களுக்காக நிதி தொடர்பான சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை பகிர்ந்ததோடு சுய அதிகாரத்தை பெறுவதின் நன்மைகளையும் கலந்துரையாடினார்.  இதில் கேள்வி பதில் அங்கத்திலும் வந்தோரின் கேள்விகளுக்கு சிந்திக்க தூண்டும் வகையில் பதிலளித்தார் எழுத்தாளர். 

திருமண குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலின நீதி பிரச்சினைகள், வரதட்சணை தொடர்பான குற்றங்கள், பாலியல் குற்றங்கள், வீட்டு, பணியிட துன்புறுத்தல் போன்ற வழக்குகளை சாமர்த்தியமாக கையாண்டு வந்த இவர் இந்த உண்மை கதைகளை கண்டு பல முறை கோபப்பட்டுள்ளார். 

இந்த கோபத்தை கட்டுரைகள் மூலம் வாசகர்களுக்கு தெரிவித்து அவர்களையும் இந்த அநியாயத்தை தட்டி கேட்க ஊக்குவிக்கும் என்று ஆசைப்பட்டார் திருவாட்டி சுமதி. 

இந்த கதைகளும் அதிலுள்ள உணர்வுகளும் சாமானியருக்கு புரியும் வகையில் உள்ளன. அன்றாட மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எளிமையாக படைக்கப்பட்டுள்ள இக்கதைகள் மக்களை சென்றடைந்து அவர்களை இந்த அநியாயங்களுக்கு எதிராக செயல்பட தூண்டும் என்று நம்புகிறார் எழுத்தாளர்.  

குறிப்புச் சொற்கள்