தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முடி கொட்டுவதற்கு உணவு, சுகாதாரம் காரணங்கள்

3 mins read
ee3cfab9-6960-45ae-b4f9-427821de21fe
சீப்பு முழுவதும் முடி - NIL
multi-img1 of 4

ஆண்களுக்கும் பெண்களுக்கும் தலைக்குமேல் உள்ள பிரச்சினைகளில் ஒன்று முடி உதிர்வது. விதவிதமான தலைப் பராமரிப்பு பொருள்களை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். வாட்ஸ்அப்பிலும் யூடிப்பிலும் வலம் வரும் இந்திய, கொரிய, சீன பாரம்பரிய முறைகளையெல்லாம் பின்பற்றிப் பார்க்கிறார்கள். என்ன செய்தாலும் முடி கொட்டுவது மட்டும் நிற்பதில்லை.

முடி கொட்டுவது ஒருவரின் சுகாதாரக் கேட்டைச் சுட்டிக்காட்டும் அறிகுறியாகவே கருதப்படுகிறது. பொதுவாக மன உளைச்சல் அதிகமானால் ஒருவருக்கு முடிகொட்டும் பிரச்சினை தலைதூக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இப்பிரச்சினைக்கு பல காரணங்களை மருத்துவர்கள் கூறுகிறார்கள். உணவு, சுகாதாரம், உடல்நலம், பாரம்பரியம் அதாவது மரபணு ஆகியவை இவற்றில் முக்கியமானவை. அதற்கான தீர்வுகளை மருத்துவர்கள் முன்வைத்துள்ளனர்.

தினசரி கிட்டத்தட்ட 100 தலைமுடி உதிருவது சாதாரணம். ஆனால், உதிரும் முடி வேரிலிருந்து மீண்டும் முடி வளர வேண்டும். முடி உதிரும் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விதத்தில் நாம் பலவிதமான தயாரிப்புகளை வாங்கிப் பயன்படுத்த முற்படுவோம். அவை ஓரளவு கைகொடுத்தாலும், அவற்றில் உள்ள வேதி மூலப்பொருள்கள் முடியின் வேர்களில் ஏற்படுத்தும் பாதிப்பை நாம் சரிசெய்ய வேண்டியிருக்கும்.

உணவு

நமது தலைமுடி கொழுப்புச் சத்து, கனிமங்கள், பயோட்டின் போன்ற சத்துகளால் உருவாக்கப்பட்டது. இவ்விதச் சத்துகள் இல்லாதபோதுதான் முடிஉதிரும் பிரச்சினை தொடங்கும்.

ஒருவரின் உணவு முறையும் முடி உதிரும் பிரச்சினைக்குக் காரணமாக அமையலாம் என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். வலுவான ஆரோக்கியமான முடி வளர நாம் உணவில் இருந்துதான் தொடங்க வேண்டும்.

பெரும்பாலான உணவியல் நிபுணர்கள் புரதச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின் பி, இரும்பு சத்து, பயோட்டின் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு வகைகளை உட்கொண்டால் ஒருவரின் முடி மிக ஆரோக்கியமாக நீடித்திருக்கும் என்று பரிந்துரைக்கின்றனர்.

பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ள நேரம் இல்லாததால் ஒரு சிலர் உணவுக்குப் பதிலாக ஊட்டச் சத்து மாத்திரை உட்கொள்ளும் தெரிவை நாடுகின்றனர்.

“இந்த அணுகுமுறை தவறு. மாத்திரைகளில் தேவையான சத்து அடங்கியிருந்தாலும் அவை உணவுக்கு ஈடில்லை,” என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்

முட்டைகளில் அளவுக்கு அதிகமான புரதச் சத்து அடங்கியுள்ளது. தினமும் காலை உணவுகளில் முட்டைகளை சேர்த்துக்கொண்டால் புரதச் சத்து விரைவாக நம் உடலுக்குள் சேர்ந்துகொள்ளும் என்று நம்பப்படுகிறது.

பொதுவாக அசைவ உணவு வகைகளை உட்கொள்பவர்கள் கோழி, இறைச்சி என பலவற்றை விரும்பினாலும் மீன் வகைகள் மிக ஆரோக்கியமானவை. மீன் வகைகளில், குறிப்பாக சால்மன் மீனில் பல அதிக சத்துகள் அடங்கியுள்ளன. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த இந்த மீன், ஒருவரின் முடி ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி இதய நலத்தையும் கட்டிக்காக்கும் என்று சொல்லப்படுகிறது.

சைவ உணவு உட்கொள்பவர்கள் முட்டையும் மீனும் சாப்பிட முடியாமல் போனாலும் அவர்களுக்கு வேறு தெரிவுகள் இருக்கின்றன. அண்மை காலமாக மிக பிரபலமாக வலம் வரும் சியா விதைகளில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஒரு முட்டைக்குச் சமம். சோயா விதைகளைவிட இருபது விழுக்காடு அதிக புரதச் சத்து கொண்டுள்ள சியா விதைகள் கூந்தலுக்கு அழகூட்டும்.

பூசணிக்காயின் சுவை பலருக்குப் பிடிக்காமல் இருந்தாலும் அதில் அடங்கியுள்ள சத்து, நம்மை அந்த சுவையிலிருந்து மறக்க வைக்கும்.

அதிகக் கொழுப்புச் சத்து இல்லாத பூசணிக்காயில் இரும்புச்சத்து மிக அதிகம். மேலும் வைட்டமின் சி அதிகம் இருக்கும் இந்த வகை காய்கறி நம் உடலில் இருக்கும் உயிரணுக்களைப் பாதுகாக்கும்.

பழங்கள் சாப்பிடுவது மிக ஆரோக்கியமான ஒரு உணவு பழக்கமுறை. பொதுவாக பழங்களில் மட்டற்ற சத்துகள் உள்ளன. ஆனால் பழங்களிலே ‘அவகாடோ’ எனும் வெண்ணெய்ப் பழம் மனிதனின் தலைமுடிக்கு நல்லது என்பார்கள். இப்பழத்தில், ஆரோக்கிய கொழுப்புச் சத்து, பயோட்டின் போன்ற ஊட்டச்சத்து மிகுந்துள்ளது.

கடைகளில் விற்கப்படும் பிரபல முடி தயாரிப்புகளில் வெண்ணைப் பழம் மூலப்பொருளாக அதிகம் கலக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மனிதனின் அன்றாட வைட்டமின் ‘இ’ தேவையில் 28 விழுக்காடு வெண்ணைப் பழத்தில் இருந்து தான் வருகிறது.

பாரம்பரியம் (மரபணு)

தமிழர் பாரம்பரிய உணவு வகைகள் அதிக புரதச் சத்து கொண்டுள்ளன. ஒரு கிண்ணம் நிறைந்த பருப்பில் 18 கிராம் புரதச் சத்து அடங்கியுள்ளது. சைவ உணவு உண்பவர்களும் அசைவம் உண்பவர்களும் பருப்பு வகைகளை தங்களின் சுவைக்குத் தகுந்தாற்போல் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

இவ்வகை உணவு பழக்கமுறையை ஆறு மாதங்களுக்குப் பின்பற்றிய பிறகு ஒருவரால் முடி உதிரும் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாவிட்டால், மருத்துவரின் ஆலோசனையை பெற்று செயல்படுவது சிறந்தது.

குறிப்புச் சொற்கள்