ஊழியர்க்குப் பதிலாகச் செயற்கை நுண்ணறிவு

2 mins read
89396048-c89e-40b5-b419-874d1e85beac
ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது கடினமான முடிவு என்றாலும் அது தேவைப்படும் ஒன்று என்று சிலர் கூறுகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

செயற்கை நுண்ணறிவுமீது பெரும் நம்பிக்கை கொண்ட துக்கான் என்ற இணையக்கடை நிறுவனத்தின் முதலாளி, தம்மிடம் வேலை பார்த்த ஊழியர்களில் 90 விழுக்காட்டினரைப் பணிநீக்கம் செய்துள்ளார்.

பணிநீக்கம் செய்யப்பட்டோரின் வேலையை அந்தச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமே செய்துவருகிறது.

இணையக் கடை வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் நேரம் உட்பட அனைத்துச் சேவைகளுக்குமான நேரத்தைச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மிச்சப்படுத்துவதாக அதன் தலைமை நிர்வாகி திரு சுமித் ஷா, டுவிட்டரில் பதிவிட்டார்.

இப்பதிவு இணையவாசிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

செயற்கை நுண்ணறிவால் தங்கள் வேலைகளை இழப்பது பற்றி பலர் குரல்கொடுத்துவரும் இக்காலகட்டத்தில் இந்தப் பதிவு வெளிவந்துள்ளது.

ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது கடினமான முடிவாக இருந்தாலும் அது தேவையான ஒன்று என்றார் திரு ஷா.

தம் நிறுவனத்திற்கு மிகப் பெரிய சவாலாக இருந்துவந்த வாடிக்கையாளர் சேவைக்குத் தீர்வொன்றை நெடுங்காலமாகத் தேடிக்கொண்டிருந்தார் என்றும் அவர் கூறினார்.

குறுகிய காலகட்டத்திலேயே ‘போட்’ (Bot) ஒன்றை உருவாக்கியதோடு செயற்கை நுண்ணறிவுத் தளமொன்றையும் இந்த நிறுவனம் உருவாக்கியது.

இணையக்கடையில் நுழையும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் செயற்கை நுண்ணறிவு உதவியாளர் மூலமாக தனிப்பட்ட முறையில் உதவி வழங்கப்படும்.

வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு மிக விரைவாகவும் பொருத்தமாகவும் ‘போட்’ தொழில்நுட்பம் பதில் அளிக்கிறது.

குறைகூறல்களுக்குத் தம் டுவிட்டர் பதிவிலேயே பதிலளித்த திரு ஷா, வாடிக்கையாளர் சேவைப் பிரிவிலிருந்து மனிதர்கள் பலர் நீக்கப்பட்டிருந்தாலும் இதர பிரிவுகளில் மனிதர்கள் புதிதாக வேலையில் அமர்த்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.

ஆனாலும், இணையவாசிகளின் கோபம் தீர்ந்தபாடில்லை. திரு ஷா தம் ஊழியர்களின் வாழ்க்கையைச் சீர்குலைத்திருப்பதாக அவர்கள் கொந்தளித்துள்ளனர்.

அண்மைக்காலத்தில், ‘சேட்ஜிபிடி’ போன்ற செயற்கை நுண்ணறிவுத் தளங்கள் பெருமளவில் வளர்ந்துள்ளன. அவற்றை மக்கள் எளிதாகப் பயன்படுத்தவும் முடிகிறது.

துக்கான் நிறுவனம் போன்று வேறு பல நிறுவனங்களும் செலவை மிச்சப்படுத்த இதுபோன்ற தளங்களைப் பயன்படுத்துகின்றன. இத்தகைய தொழில்நுட்பம் தங்கள் வாழ்வாதாரத்திற்கு உலை வைத்துவிடுமோ என்ற அச்சத்தில் ஊழியர்கள் தவிக்கின்றனர்.

(செய்தி - பிபிசி)

குறிப்புச் சொற்கள்