சிங்கப்பூர் எக்ஸ்போ, மண்டபம் 6Aவில் இன்று வியாழக்கிழமை ‘ஸாக் சலாம் இந்தியா’ கண்காட்சி தொடங்கியுள்ளது.
ஜூலை 13ஆம் தேதி முதல் ஜூலை 16ஆம் தேதி வரை நடக்கும் இக்கண்காட்சியில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் மதுரை முத்துவின் நகைச்சுவை அங்கமும் ஒன்று. தனிநகைச்சுவை படைப்பதில் பெயர் பெற்ற மதுரை முத்துவின் நிகழ்ச்சி, ஜூலை 14ஆம் தேதி இடம்பெறுகிறது.
இந்தியத் தொலைக்காட்சியின் ‘அசத்தப்போவது யாரு’, ‘கலக்கப்போவது யாரு’, ‘சண்டே கலாட்டா’, ‘காமெடி ஜங்ஷன்’, ‘குக் வித் கோமாளி’ போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தவர் மதுரை முத்து.
“மாறுபட்டு வரும் மக்களின் ரசனைக்கேற்ப, நகைச்சுவையும் மாறியுள்ளது,” என்று 19 ஆண்டுகளாக நகைச்சுவைத் துறையில் ஈடுபட்டுள்ள மதுரை முத்து கூறினார்.
கவுண்டமணி, நெல்லைக் கண்ணன் இருவரையும் தன்னுடைய முன்மாதிரிகள் எனக்கூறும் மதுரை முத்து, தனிநகைச்சுவை படைப்பதில் தனக்கென தனி முத்திரை பதித்திருப்பவர்.
2010ஆம் ஆண்டிலிருந்து ஒரு சில ஆண்டுகள் பேச்சாளராகவும் அதன் பின் பட்டிமன்ற நடுவராகவும் இருந்துள்ளார். தமிழ் நகைச்சுவை மேடைப் பேச்சாளராக 80க்கு மேற்பட்ட நாடுகளுக்கு சென்றுள்ளார் மதுரை முத்து.
தமிழ்த் திரைப்படத்தில் பெயர் பதித்து வரும் இவர், ‘குற்றம் குற்றமே’, ‘சபாபதி’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது கிட்டத்தட்ட ஆறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் ‘பாபா பிளாக் ஷீப்’ என்ற திரைப்படம் ஜூலை 14ஆம் தேதியன்று வெளியாகவிருக்கின்றது.
“சிங்கப்பூருக்கு வருவது எனக்கு என்றுமே பிடிக்கும். சிறிய நாடாக இருப்பினும் அழகான, பாதுகாப்பான நாடு, சிங்கப்பூர் ரசிகர்களின் ஆதரவு எனக்கு எப்போது ஊக்கமளிப்பது,” என்று மதுரை முத்து கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஸாக் சலாம் கண்காட்சியில் இம்முறை மொத்தம் 163 கடைகள் பங்கேற்கின்றன.
இந்தியா, சிங்கப்பூர், மலேசியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த கடை உரிமையாளர்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கின்றனர்.
ஸாக் வணிக கண்காட்சிகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த கண்காட்சியில் பஞ்சாபி உடைகள், சேலைகள், ரவிக்கைகள், பாவாடைகள், மற்ற வட இந்திய உடைகள் ஆகிய பலவிதமான பாரம்பரிய இந்திய ஆடைகளும் பல்வேறு அணிகலன்களும் குவிந்துள்ளன.
வீட்டு உபயோகப் பொருட்கள், வெவ்வேறு உணவு வகைகள் என ஏராளமான பொருள்களும் விற்கப்படுகின்றன.
தேவையான பொருள்களை வாங்கவும் காட்சியின் இதர அம்சங்களைக் கண்டுகளிக்கவும் நான்கு நாள் கண்காட்சிக்குச் சென்று வரலாம்.
dhurga@sph.com.sg